Image & Info courtesy : dinamani |
மூலிகைப் பூச்சி விரட்டி தயாரிக்கும் முறை: மூலிகைப் பூச்சி விரட்டிகள் மூன்று வகையான இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஒன்று, தொட்டால் வாசனையடிக்கக்கூடிய செடிகள், இரண்டு, தின்றால் கசக்கக்கூடிய செடிகள், மூன்று, ஒடித்தால் பால் வரக்கூடிய செடிகள் (எடுத்துக்காட்டாக ஆடாதொடா, ஆடுதீண்டாபாளை, ஊமத்தை, எருக்கு, தும்பை, துளசி, அத்தி, சோற்றுக்கற்றாழை, பெரண்டை, பீநாரி, பப்பாளி, சீதா, புங்கன், நொச்சி, வேம்பு, தழுதாளை, காட்டாமணக்கு, வேலிப்பருத்தி, வெட்பாலை, மமரை, ஆவாரை) ஆகியவற்றில் ஐந்து முதல் அதற்கு மேற்பட்ட செடிகளை எடுத்துக்கொண்டு, உரலில் போட்டு இடித்து, ஒரு மண் பானை, பிளாஸ்டிக் டிரம்மில் போட்டு, இலைகள் மூழ்கும் அளவிற்கு மாட்டுக் கோமியம், தண்ணீர் சேர்க்க வேண்டும். மேலே குறிப்பிட்ட கலவையை 15 நாள்கள் வரை நன்றாக மூடி வைக்கட வேண்டும். தயாரித்த 15 நாளில், ஒரு லிட்டர் பூச்சி விரட்டியுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர் மீது தெளிக்க வேண்டும். பயிரிட்ட 15-ஆம் நாளிலிருந்து (15 நாளுக்கு ஒரு முறை) பூ பூக்கும் வரை தெளிக்கலாம்.
மூலிகைப் பூச்சி விரட்டி செயல்படும் விதம்: பூச்சிகள் எண்ணிக்கையில் மிகுந்தவை. ஆனால் உயிரினங்களில் இது சிற்றினம். இவை இயல்புத் தூண்டலால் குறிப்பிட்ட செடிகளின் இலையையோ, காயையோ தின்று உயிர் வாழ்கின்றன. இதற்காக இவை இலைகளில் தொட்டுணர்ந்தே செடியை இனம் காணுகின்றன. பல வகை மணம் கொண்ட மூலிகைகளில் தயாரிக்கப்பட்ட பூச்சி விரட்டி பயிர்களின் வாசனையை மாற்றி விடுகிறது. இதனால் தாயப் பூச்சி பயிரின் மீது அமர்ந்து முட்டையிடுவது தவிர்க்கப்படுகிறது. இந்தப் பூச்சி விரட்டியுடன் புங்க எண்ணெய், வேப்பெண்ணெய் கலந்து தெளிக்கும்போது, எண்ணெய் பசை பயிரில் படிந்து இருப்பதால், எந்த ஒரு பூச்சியும் பயிரைத் தாக்காது. மூக்கு வண்டு, புகையான், தண்டு துளைப்பான், இலை சுருட்டு புழு, சாறு உறுஞ்சும் பூச்சி, குருத்துப்பூச்சி போன்ற எல்லா வகையான பூச்சிகளையும் கட்டுப்படுத்தும். பூச்சி விரட்டியானது, 80 சதவீதம் பூச்சி விரட்டியாகவும், 20 சதம் பயிர் ஊக்கியாகவும் செயல்பட்டு, விளைச்சலை அதிகரிக்கிறது.
நன்றி : தினமணி
No comments:
Post a Comment