Thursday, 18 February 2016

மண் இல்லாமல் பசுந்தீவனம் உற்பத்தி : சாதிக்கும் பெண் விவசாயி (தினமலர் நாளிதழ் கட்டுரை)

Image & Article courtesy : Dinamalar
மண் இல்லாமல் விவசாயமே இல்லை. ஆனால் தேனி மாவட்டம், போடி அருகே சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த பெண் விவசாயி வி.மணிமாலா, மண் இல்லாமல் தீவன வளர்ப்பு என்ற நவீன முறையில் ஆடு, மாடுகளுக்கான தீவனங்களை விளைவித்து வருகிறார். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாய ஆர்வலர்கள் வந்து இவரது தீவனவளர்ப்பு கூடத்தை பார்வையிட்டு செல்கின்றனர்.

இவரது மாட்டுக்கொட்டகையில் 10 அடி நீளம், 8 அடி அகலம் கொண்ட ஒரு அறை உள்ளது. இந்த அறையின் மேல் பகுதி பச்சைவலையால் மூடப்பட்டுள்ளது. அறைக்குள் வெளிச்சம் வரும் வகையில் பாலிதீன் ஷீட்டால் பக்கவாட்டு பகுதிகள் மூடப்பட்டுள்ளது. அறைக்குள் சிறிதளவு மட்டும் வெளிச்சம் வருகிறது. தரையின் அடித்தளத்தில் முக்கால் அடி உயரத்திற்கு மணல் பரப்பி உள்ளார். ஒரு அடி நீளம், ஒன்றரை அடி அகலம், 3 இன்ச் உயரம் கொண்ட 60 "பிளாஸ்டிக் டிரே' களை வைக்கும் அளவிற்கு "ரேக்' அமைத்துள்ளார்.
இந்த டிரேக்களின் அடிப்பகுதியில் மிகச்சிறிய அளவிலான 12 துவாரங்கள் உள்ளன. டிரேக்களில் தெளிக்கப்படும் தண்ணீர் வெளியேற இந்த ஏற்பாடு.

ஒரு மணி நேரத்திற்கு இரண்டு நிமிடம் வீதம் 60 டிரேக்களிலும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் தானியங்கி சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. அறைக்குள் 25 டிகிரி செல்சியஸ் வெப்பம் காக்கப்படுகிறது. காற்றின் ஈரப்பதம் 80 முதல் 85 சதவீதம் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு டிரேயிலும் 350 கிராம் விதைகளை போடவேண்டும். இதற்கு முன் 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, அதனை ஈரத்துணியில் 24 மணி நேரம் கட்டி வைக்கவேண்டும். இந்த விதைகள் ஒரு வாரத்தில் 15 செ.மீ., உயரம் வளர்ந்து விடுகிறது. வேர்கள் அடிப்பகுதியில் பின்னிப்பிணைந்து வெள்ளை மெத்தை போல் அழகாக காணப்படுகிறது.
இந்த முறையில் மட்டுமே விதை, இலை, வேருடன் எடுத்து ஆடு, மாடுகளுக்கு கொடுக்கலாம். இம்முறையில் மக்காச்சோளம், சோளம், கோதுமை, பார்லி விதைகள் வளர்க்கப்படுகின்றன. பசுக்கள், ஆடுகள் வளர்ப்பவர்கள் பசுமை கூடாரம் (பாலி ஹவுஸ்) அமைத்தும் வளர்க்கலாம்.

விவசாயி வி.மணிமாலா கூறியதாவது: சராசரியாக மண்ணில் ஒரு கிலோ பச்சை புல் விளைவிக்க பல நாட்கள் காத்திருக்க வேண்டும். பல நூறு லிட்டர் தண்ணீர் செலவிட வேண்டும். நான் பயன்படுத்தும் மண் இல்லா மாட்டுத்தீவன வளர்ப்பு முறையில் தினமும் 20 லிட்டர் தண்ணீர் மட்டுமே பயன்படுத்துகிறேன்.

பூச்சிகொல்லிகள், ரசாயன உப்புக்கள், களைக்கொல்லிகள் பயன்படுத்துவதில்லை. தினமும் 30 கிலோ விளைச்சல் எடுக்கிறேன். ஒரு கிலோ விதையில் ஏழே நாளில் 8 கிலோ அறுவடை செய்கிறேன். இந்த முறையின் மூலம் ஆண்டு முழுவதும் சீரான பசுந்தீவனம் கால்நடைகளுக்கு தரலாம். மக்காச்சோளத்தை மாவாக்கி போடுவதை விட முளைக்க வைத்து போடுவது மேலானது. இதன் மூலம் வைட்டமின், மினரல், என்சைம்கள் அதிகரிக்கும். முளைகட்டிய இந்த தீவனத்தில் சாதாரணமாக விளையும் தீவனத்தை விட பல மடங்கு அதிக சத்துக்கள் உள்ளது. இதனால் மாடு, ஆடுகள் நல்ல ஊக்கத்துடன் வளர்கின்றன, என்றார்.

No comments:

Post a Comment