Wednesday, 24 August 2016

கால்நடை வளர்ப்பில் ஒழியுமா மூட பழக்கம்?


Image courtesy : Wikipedia
கால்நடை வளர்ப்பில் மூடப்பழக்க வழக்கங்களை இந்த நூற்றாண்டிலும் விவசாயிகள் பின்பற்றுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. லாபமும் கணிசமாக குறையும்.

கால்நடைகளுக்கும் எல்லா உணர்வுகளும் உண்டு. அறிவியலும் நவீன மருத்துவமும் முன்னேறி வரும் இக்காலத்தில் தவறான கருத்துக்களாலும், மூட நம்பிக்கைகளாலும், கொடிய மருத்துவம் செய்தல், தகுதியற்றவர்களால் மேற்கொள்ளும் மருத்துவத்தை தவிர்த்தல் வேண்டும். இச்செயல்களை விவசாயிகள் எக்காரணம் கொண்டும் ஊக்குவிக்கக்கூடாது.
நாவரஞ்சி எடுத்தல்: கிராமங்களில் 'நாவரஞ்சி எடுத்தல்' என்ற பழக்கம் உண்டு. இம்முறைப்படி தீவனம் சாப்பிடாத கால்நடைகளின் நாக்கை வெளியே இழுத்து கத்தியால் சுரண்டி நாக்கின் மேலும், கீழும் உள்ள திசுக்களை அழித்து கொன்று விடுவார்கள். இதனால் வலி ஏற்பட்டு கால்நடைகள் அறவே தீவனம் சாப்பிடாது. இரண்டு நாட்கள் கழித்து தீவனம் சாப்பிட துவங்கும். நாக்கில் நாவரஞ்சி விழுந்து விட்டது என இந்த கொடூர வைத்தியத்தை கையாள்கின்றனர். 

செலைக்குத்துதல்: 'செலைக்குத்துதல்' எனும் வழக்கம் நாவரஞ்சி எடுத்தலை விட கொடுமையானது. இதன்படி தீவனம் சாப்பிடாத கால்நடையின் நாக்கினை வெளியே இழுத்து பிடித்து கொண்டு, நாக்கின் அடிப்பாகத்தில் காணும் ரத்தக் குழாயினை கூரிய ஊசி கொண்டு குத்தி விடுவார்கள். குத்திய இடத்தில் இருந்து ரத்தம் வெளியேறும். பின் வைக்கோலினால் கயிறு போல் தயார் செய்து நாக்கின் அடியில் இருந்து மேல்தாடையோடு சேர்த்து இறுக்கி கட்டி விடுவார்கள். இதனால் கால்நடைகள் இரண்டு நாட்களுக்கு நாக்கை அசைக்க முடியாமலும், எச்சில் விழுங்க முடியாமலும் கொடூரமான துயரத்திற்கு ஆளாகும். பின்னர் தீவனம் சாப்பிட ஆரம்பிக்கும்.

வைக்கோல் எரிப்பு: அதிக நேரம் காளைகள் வேலை செய்வதாலும் தண்ணீர் குடிக்காமலும் இருந்தால் உடலில் நீர்ச்சத்து அளவு குறைந்து, அவை கீழே விழுந்து விடும். இதனை அறியாமல் மாடுகளின் அருகில் வைக்கோலை போட்டு கொளுத்துவார்கள். கண்களில் மிளகாய் பொடியை தூவுவார்கள். 

வாலை பற்களால் கோரமாக கடித்து புண் ஏற்படுத்துவர். தார் குச்சியின் நுனியால் மர்ம உறுப்பில் வலி எடுக்கும்படி குத்துவார்கள். இதனால் சில மாடுகள் சூடு தாங்காமலும், மரண வலியை தாங்க முடியாமல் கடும் துயரத்துடன் எழுந்து விடுகின்றன. சில நேரங்களில் இப்படி செய்யும்போது அவை நினைவிழந்து இறந்து விடுவதும் உண்டு.

சுண்ணாம்பு பூச்சு: மாடுகள் சண்டையிடும்போதும், விபத்துக்களாலும் கொம்பு முறிவதும், கொம்பு கழன்று விழுவதும் இயற்கை. இதற்கு வைத்தியம் செய்கிறோம் என்ற பெயரில் கருப்பட்டி மற்றும் சுண்ணாம்பினை சேர்த்து அரைத்து காயமடைந்த கொம்பில் பூசி விடுவார்கள். போதாக்குறைக்கு தலை முடியை கொத்தாக எடுத்து கொம்பை சுற்றிலும் கட்டி விடுவர். பத்து நாட்கள் கழித்து முடியை பிய்த்து வலுக்கட்டாயமாக இழுக்கும் போது கால்நடைகள் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவிக்கின்றன.

எருக்கம்பால் நச்சு: கறவை மாடுகள் சினைப்பிடிக்கவில்லை என்ற காரணத்தினால் கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியான பெண் உறுப்பில் எருக்கம் பாலை இடுவார்கள். சில கால்நடைகள் நோயின் காரணமாகவோ அல்லது நச்சு தாவரங்களை உண்பதாலோ சோர்ந்தும், உடல் சிலிர்ப்புடன் காணப்படும். இதனை தவறாக புரிந்து கொண்டு ஓணான், மாட்டின் மேல் விழுந்துள்ளது எனக்கருதி துண்டு துணியை கழுத்தில் இறுக்கி கட்டி விட்டு மூச்சு விட முடியாமலும், நாக்கை வெளியே தள்ளும் அளவுக்கு கொடுமை செய்வர்.

வெந்த புண்ணில் வேல்: கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கினால் கால் குளம்புகளில் புண்கள் ஏற்படும். இப்புண்ணில் பினாயில் கிருமி நாசினியை ஊற்றுகின்றனர். இதனால் புண் வெந்து மாடுகளுக்கு மேலும் வேதனையை தரும். இக்கொடூரமான சிகிச்சை முறைகள் எல்லாம் முறையானவை அல்ல. இவற்றால் ஏற்படும் வேதனைகளை வாயிருந்தால் கால்நடைகள் சொல்லி நொந்து சாபமிட்டிருக்கும். இக்கொடூர காரியங்களில் நெஞ்சில் ஈரமில்லாத மனிதர் சிலர் ஈடுபடும்போது, ''நெஞ்சு பொறுக்குதில்லையே... இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்...'' என சுப்பிரமணிய பாரதியாரின் வரிகள் நினைவுக்கு வருகிறது.

- டாக்டர் வி.ராஜேந்திரன்,
முன்னாள் இயக்குனர்,
கால்நடை பராமரிப்பு துறை, நத்தம்.


நன்றி : தினமலர்.

No comments:

Post a Comment