Friday 5 August 2016

வல்லாரைக்கீரை

மூலிகைகள் என்ற இயற்கைக் கொடையை இந்தியராகிய நாம் ஏராளமாகப் பெற்றிருக்கிறோம். நம்மைச் சுற்றி சாதாரணமாகக் காணப்படும் தாவரங்கள், அசாதாரண மருத்துவ குணங்களைக் கொண்டவை. அந்த வரிசையில் வல்லாரை வழங்கும் நன்மைகள் எக்கச்சக்கம்!

ஆண் குழந்தைகளை உயரமாக வளரச் செய்வதில் தொடங்கி, பெண் குழந்தைகளை நிறமாக்குவது வரை எல்லாவற்றுக்கும் போலியான விளம்பரங்களை நம்பி ஏமாந்து, செயற்கையான பொருட்களை உபயோகிப்பதே பலரது வழக்கம். அந்த வகையில் குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்தவும் மாத்திரைகளையும் ஊட்டச்சத்து பானங்களையுமே நம்புகிறார்கள்.

Image & Article courtesy : Dinakaran
பக்க விளைவுகள் அற்ற, நிரந்தர நினைவாற்றலைத் தரக்கூடிய வல்லாரைக் கீரையை எத்தனை வீடுகளில் அறிந்திருப்பார்கள் என்பதே சந்தேகம்தான். கல்விக் கடவுளை சரஸ்வதி என்கிறோம். நினைவாற்றலை மேம்படுத்தி, கற்கும் திறனை அதிகரிக்கச் செய்கிற வல்லாரைக் கீரையையும் சரஸ்வதி கீரை என்றே அழைக்கிறார்கள்’’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கார்த்திகா. வல்லாரை  கீரையின் வலிமைகளைப் பற்றிப் பேசுவதுடன், அதை வைத்து சுவையான 4 ஆரோக்கிய ரெசிபிகளையும் செய்து காட்டியிருக்கிறார் அவர்.

வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துகளை தகுந்த முறையில் பெற்றிருக்கிறது. இதனாலேயே ‘வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே’ என்ற பழமொழி ஏற்பட்டது.

பலவகையான மருத்துவ குணங்கள் அடங்கிய இந்த மூலிகை, இந்தியா முழுவதிலும் நீர் நிலைகள் அதாவது, ஆறு, கால்வாய், குளம், குட்டை, வயல் வரப்புகளில் வளரும் பூண்டு வகையைச் சார்ந்தது. அரைவட்ட வெட்டுப் பற்களுடன், நீண்ட காம்புகளை உடைய இதய வடிவ இலைகளைக் கொண்டது. இலைகளில் நரம்புகள் இழையோடுவதைக் காணலாம். வீட்டு சமையலில் வல்லாரையை வாரம் இருமுறையேனும் பயன்படுத்த வேண்டும்.

வல்லாரையில் அடங்கியுள்ள சத்துகள்

* வல்லாரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி, தாது உப்புகள் ஏராளமாக அடங்கியுள்ளன.

*ரத்தத்துக்குத் தேவையான சத்துகளை இந்த கீரை சரிவிகித அளவில் கொண்டுள்ளது.

வல்லாரை கீரையின் மருத்துவ குணங்களும் பயன்களும்

1. வல்லாரை கீரை உடல் உஷ்ணத்தை குறைத்து, உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது.
2. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்தசோகையை போக்கும்.
3. மூளையின் நரம்புகளைத் தூண்டி நினைவாற்றலைப் பெருக்கும். அத்துடன் மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துகளை, தகுந்த முறையில்பெற்றிருக்கிறது.
4. வல்லாரைப் பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லிலுள்ள கறைகள் நீங்கும். மேலும் பல் ஈறுகள் பலப்படும்.
5. கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் போன்றவற்றை போக்கி கண் நரம்புகளுக்கு பார்வைத்திறனை அதிகரிக்கிறது.
6. ரத்தத்தை சுத்திகரிக்கிறது. தொண்டைக் கட்டி, காய்ச்சல், உடற்சோர்வு மற்றும் படை போன்ற சரும நோய்களைப் போக்கும்.
7. யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வல்லாரை இலையை அரைத்து கட்டினால் நோயின் தாக்கம் குறையும்.

தினசரி உணவில் எப்படி?

வல்லாரை கீரையை கொண்டு நம் தினசரி உணவில் பல ஆரோக்கியமான உணவுகளை சமைக்கலாம். அதில் சில வல்லாரை கீரை பருப்பு மசியல், வல்லாரை கீரை தோசை மற்றும் சப்பாத்தி செய்து அதை அழகிய வடிவங்களில் கட் செய்து குழந்தைகளுக்கு பிடித்தவாறு சமைக்கலாம்.வல்லாரை கீரையை பொடியாக அரைத்து உபயோகித்தும் பயன் அடையலாம்.

நீங்கள் பயன் அடைவதற்காக சில செய்முறைகள்:


* வல்லாரை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலை, மாலை என இருவேளையும் 1 டீஸ்பூன் பொடியில் தேவையான அளவு தேன் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

* வல்லாரை இலையுடன் மிளகு, துளசி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து விழுதாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு சுடுநீருடன் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.

* வல்லாரை இலையை காயவைத்து சீரகம், மஞ்சள் சேர்த்து தூள் செய்து வைத்துக் கொள்ளவும். இதில் காலை, மாலை உணவுக்கு முன்பாக 2 கிராம் அளவில் சாப்பிட்டு சூடான பசும்பால் குடித்து வர நினைவாற்றல் பெருகும்.

* 1/4 கிலோ புழுங்கல் அரிசியை ஊற வைத்து அத்துடன் வல்லாரை இலைகளையும், 5 மிளகாயையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தேவையான அளவில் சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்த்து அந்த மாவில் ரொட்டி போலச் செய்து சாப்பிட்டு வர சரும  நோய்கள் விலகும்.

* வல்லாரை இலையை நன்கு சுத்தம் செய்து அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து சட்னியாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ-மாணவிகளுக்கு உண்டாகும் அறிவுச் சோர்வை நீக்கி ஞாபக மறதி குணமாகும்.

* வல்லாரை இலையை சுத்தம் செய்து அதை டீயுடன் சேர்த்து குடிக்கலாம். இதைச் செய்தால் ஆஸ்துமா, சளி, இருமல்  போன்றவற்றுக்கு மருந்தாகும்.

* வல்லாரை கீரை சட்னியை இட்லி, தோசை, சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ளலாம். தயிர் சாதத்துக்குத் தொட்டுக் கொள்ள பொருத்தமான சட்னி இது.

வல்லாரை வளர்க்கலாம்!

மற்ற எல்லா கீரைகளையும் போலவே வல்லாரை கீரையையும் நமது வீட்டு தோட்டத்தில் எளிதாக வளர்க்கலாம். வல்லாரை விதைகளை வாங்கித் தூவி, மிதமான வெயில் படும் இடத்தில் வைத்து, அளவாகத் தண்ணீர் விட்டு வந்தால் தினசரி உங்களுக்கு ஃப்ரெஷ்ஷான வல்லாரைக் கீரை சமையலுக்கு ரெடி!


source:Dinakaran

No comments:

Post a Comment