கிட்டத்தட்ட 500, 600 ஆண்டுகளுக்கு முன்பு மிளகு ஓரிரு டாலர் விலை
உயர்ந்ததால்தான், 400 ஆண்டுகால அடிமை வாழ்வு இந்தியாவுக்கு ஏற்பட்டது
என்கிறார்கள் வரலாற்றாளர்கள். அப்போது வரி செலுத்தக்கூடிய நாணயமாக மிளகு
கருதப்பட்டது. அரபு வணிர்கள் மட்டுமே மிளகை இந்திய நிலத்திலிந்து எடுத்துச்
சென்று ஐரோப்பாவில் வணிகம் செய்துவந்தனர். அந்தச் சூழலில், இந்த விலை
உயர்வு ஐரோப்பிய அரசுகளுக்கு நெருக்கடி தந்தது. நாமே ஏன் மிளகு வணிகத்தைத்
கையிலெடுக்கக் கூடாது, மிளகு விளையும் நிலத்தைக் கைப்பற்றக் கூடாது என்று
ஐரோப்பியர்களுக்குள் ஏற்பட்ட சிந்தனைதான், இந்தியாவுக்குள் அவர்கள் நுழைய
வழிவகுத்தது. இது வரலாறு அறிந்த சேதி.
அதன் பின்னர், 400 ஆண்டுகள் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டு, எத்தனையோ பேர்
ரத்தம் சிந்தித்தான் சுதந்திரம் பெற்றோம். இந்த சுதந்திர தின விழாவில்
ஒவ்வொருவரும் மகிழ்வோடு பரிமாறிக்கொள்ளும் வாழ்த்து ‘சுதந்திர தின
வாழ்த்துகள்’. அப்படி உச்சரிக்கும் நமது ஒவ்வொருவரது வாயுமே உண்மையில்
இன்னும் ஆங்கிலேயனுக்கு அடிமைப்பட்டு இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.
அந்நியக் கை
அன்று அந்நிய நாட்டிலிருந்து வந்த உடைகளை உதறியெறிந்து, கதராடை உடுத்தி,
‘அந்நியப் பொருட்களைப் பகிஷ்கரிப்போம்’எனும் முழக்கத்துடன் சுதந்திர
வேள்வித் தீ காந்தியடிகளால் மூட்டப்பட்டது. இன்று காலை முதல் இரவு வரை நம்
பசிக்காகவும், வாய் ருசிக்காகவும், ஆற்றல் பெறவும், நோய்த் தடுப்பு பெறவும்
சாப்பிடும் சராசரி உணவாகட்டும் அல்லது ஊக்க உணவாகட்டும் அதில்
பெரும்பான்மைப் பகுதி நேரடியாகவோ மறைமுகமாகவோ அந்நிய நாட்டுப் பிடியில்தான்
இருக்கிறது. நாம் எதைச் சாப்பிட வேண்டும், நமக்கான தேர்வு எது, உலகம்
ஏற்றுக்கொள்ளக் கூடிய தரம் எது என அத்தனையுமே மறைமுகமாக வணிகச் சிந்தனையோடு
பன்னாட்டு நிறுவனங்களால் பெரும்பாலும் நிர்ணயிக்கப்படுகின்றன.
1992 டங்கல் அறிக்கைக்குப் பின்னர் மெல்ல மெல்ல உலகெங்கும் ஆதிக்க
நாடுகளின் வசதிக்காக, வணிக வாய்ப்புகளுக்காக, சில 100 நிறுவனங்களின்
பங்குக் கணக்குகளை எப்போதும் பத்திரமாக வைத்திருக்க, உணவுக் கொள்கைகள்
தொடர்ந்து வகுக்கப்படுகின்றன. நம் தட்டில் பரிமாறப்படும் உணவு வேறொருவரால்
தீர்மானிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த உணவுக் கொள்கையும் சரி, விவசாயக்
கொள்கைகளும் சரி, சுதந்திரத்தின் அடிநாதமாக இருந்த சுதேசிச் சிந்தனையை
முற்றிலும் சீரழித்துவிட்டன. நாமெல்லாம் முன்பு எப்போதோ ருசித்துவந்த
காஷ்மீர் ஆப்பிள், சிம்லா ஐஸ்க்ரீம் ஆப்பிள் இன்று அநேகமாகக் கிடையாது.
மாறாக 50% இறக்குமதி வரி கட்டிப் பெறப்படும், வாஷிங்டன் ஆப்பிளும் சீன
ஆப்பிளும் பாகிஸ்தான் ஆப்பிளும் நம் பழக்கடைகளை அலங்கரித்துக் கொண்டிருக்
கின்றன.
குதிரைகளுக்கான உணவு கொஞ்சம் மிதமிஞ்சி விளைவதால், “அதுதான் உன் உடலைக்
குறைக்கும். உனக்கேற்ற உணவு” என அறிவியல் தரவுகளோடு புது அடையாளம்
பூசப்பட்டு, ஒவ்வொரு வீட்டு காலைச் சிற்றுண்டிகளையும் களவாடிவிட்டது ஓட்ஸ்
தானியம்.
வணிகப் பிரச்சாரங்கள்
ஐரோப்பாவில் மத்தியத் தரைக்கடல் பகுதியில் தயாரிக்கப்படும் உணவுக்கு உலகில்
பெரும் மதிப்பு உண்டு. அதற்கு முதல் காரணம், அங்கு கிடைக்கும் ஆலிவ்
பழத்தின் எண்ணெய். ‘இந்த எண்ணெய் மட்டுமே உன் மாரடைப்பத் தவிர்க்கும்’ என
வணிகப் பிரச்சாரம் செய்து, அந்த ஆலிவ் எண்ணெய் நம் வீட்டு
அடுப்பங்கரைக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டது. முன்பு சூரியகாந்தி
எண்ணெய்க்காக நம் நாட்டுத் தேங்காய் எண்ணெயைப் பறிகொடுத்ததுபோல இன்று
நல்லெண்ணெயையும் கடுகு எண்ணெயையும் பறிகொடுக்கிறோம். உலகில் உணவு
உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக நகர்ந்துகொண்டிருந்த வேளையில், கடந்த
10,15 ஆண்டுகளாகத் தொடர்ச்சியான சறுக்கல்கள். நம் வீட்டு சாம்பாரிலும்
பருப்புப் பொடியிலும் நம் குழந்தைக்கு ஊட்டும் பருப்பு சாதத்திலும்
கிட்டத்தட்ட 60%-க்கு மேலான பருப்பு தான்சானியா முதலான ஆப்பிரிக்க
நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்பதை அறிவோமா?
இந்தியத் தேவையில், இன்றைக்கும் 40% பருப்பு, பயறு உற்பத்தியில் இன்னமும்
பின்னடைவில்தான் நாம் இருக்கிறோம். இந்த நேரத்தில் சுதந்திரத்துக்கு
வித்திட்ட காந்தியின் ஆலோசகராகவும் சுதந்திர இந்தியாவின் முதல் திட்டக்
குழுவின் தலைவராகவும் இருந்த, நம்மில் அநேகம் பேர் மறந்துவிட்ட
ஜே.சி.குமரப்பா எனும் தமிழனின் கூற்றுதான் நினைவுக்கு வருகிறது. காந்தியப்
பொருளாதாரத்தை வடிவமைத்த அவர், 1940-களிலேயே, ஒரு கோடி மக்களுக்கு
உணவுக்கும் உடைக்கும் என்ன உற்பத்தி இந்தியாவில் ஏற்பட வேண்டும்; அது கிராம
ஊரக வளர்ச்சியோடு எப்படிக் கட்டமைக்கப்பட வேண்டும் எனத் தன்னுடைய
நிலைபேற்றுப் பொருளாதாரத்தில் (economy of permanence) மிகத் தெளிவுபடக்
கூறியிருந்தார்.
ஏன் மறந்தோம்?
இந்தியாவுக்குப் பெரிய அணைக்கட்டுகள், மிகப் பெரும் செயற்கை
நீர்த்தேக்கங்கள் அவசியம் இல்லை. வெளிநாட்டு விவசாயக் கட்டமைப்பு வேறு,
விரிவுபட்ட பரந்த இந்தியாவின் உயர் தட்பவெப்ப மண்டலம் வேறு என்று இந்த
நாட்டுக்கான உற்பத்தியை இந்த நாட்டுக்கான விவசாயக் கட்டமைப்போடு கனவு
கண்டவர் குமரப்பா. துரதிர்ஷ்டவசமாக, அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில் இந்த
நிலைபேற்றுப் பொருளாதாரக் கருத்துகள் ஒட்டுமொத்தமாக மறக்கடிக்கப்பட்டதில்
உணவு விஷயத்தில் மெல்ல மெல்ல வெளிநாட்டுக்கு அடிமைப்படவும், கையேந்தவும்
நாகரிகமாகக் கற்றுக்கொண்டிருக்கிறோம்.
சுதந்திரம் என்பது நம்மை நாமே ஆள்வது மட்டுமல்ல. எந்த விதத்திலும் ஒரு
பன்னாட்டுப் பிடிக்குள் மறைமுகமாகச் சிக்கியிருப்பதும் ஒருவகையில்
அடிமைத்தனமே. மரபணு மாற்றப்பட்ட பருத்திதான் இந்தியப் பருத்தி விவசாயிகளைக்
காப்பாற்றும் என 2002-ல் நுழைந்தது பி.டி.பருத்தி. கிட்டத்தட்ட 12, 13
ஆண்டுகளில் ஒட்டுமொத்த இந்தியப் பருத்தியும் (96%) பி.டி.பருத்தியாக
மாறிவிட்டது. இன்னும் சொல்லப்போனால், இன்று சுதந்திரதின விழாவில்
பெருமையுடன் பறக்கும் இந்திய தேசியக் கொடிகூட பி.டி.பருத்தியால் ஆனதுதான்
என்பது எவ்வளவு வெட்கம்?
விதர்பாவில் நடந்த விவசாயத் தற்கொலைகளுக்கும் இன்னும் இந்தியாவில்
ஆங்காங்கே நடைபெறக்கூடிய விவசாயத் தற்கொலைகளுக்கும், விவசாய உற்பத்தியில்
கூடிவரும் கட்டுக்கடங்காத கடன் தொல்லையும் அந்தக் கடன் தொல்லைக்கு
அடித்தளமாக இருக்கக் கூடிய 20 மடங்குக்கு மேல் விலையேற்றம் உள்ள இதுபோன்ற
மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளும் முக்கியக் காரணங்கள் என்பதை எவரும்
மறுக்க முடியாது. சுதந்திர தினம் அன்று பத்தாவது முறையாக காந்தி படம்
பார்ப்பது, அன்றைக்கு மட்டும் கதராடை அணிவது, விடுதலைப் போராட்ட வசனம்
பேசுவது என இராமல், எதற்குப் பெற்றோம் இந்தச் சுதந்திரத்தை? பெற்ற
சுதந்திரத்தைப் பேணிக் காக்கிறோமா? என கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.
நெல்லி தரும் விட்டமின் சி-யை விடச் சிறப்பாக நியூசிலாந்து கிவி பழம்
எதையும் கொடுத்துவிடப்போவ தில்லை. உடலுக்குத் தேவையான ஊக்க ஆற்றலை கொய்யா
கொடுப்பதைவிட அதிகமாக ஆஸ்திரியா ஆப்பிள் தந்துவிடப்போவதில்லை. தினை, ராகி
முதலான சிறுதானியங்கள் தரும் உணவுச் சத்துக்களைவிட அதிகமாக ஆஸ்திரேலிய
ஓட்ஸ் கொடுத்து விடப்போவதில்லை. காந்திய - குமரப்ப பொருளாதாரமும், சூழலைத்
துளியும் மாசுபடுத்தாமல் தரும் இந்த ஊட்டமும் உணர்வும்தான் சுதந்திர
இந்தியாவுக்கான உண்மையான தேவை!
- கு.சிவராமன், மருத்துவர்
No comments:
Post a Comment