Friday 12 August 2016

நெல்லைக் காக்கும் தணல்!

பசுமைப்புரட்சி என்னும் வரலாற்றுப்பிழை இந்தியா முழுவதும் இருந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நெல் ரகங்களை அழித்து, நெல் ஆராய்ச்சி நிலையம் மூலம் உருவாக்கப்பட்ட ஒட்டு ரகங்களையே பரவலாக்கியது. இதன் விளைவு சத்துகள் ஏதுமற்ற, பூச்சிக் கொல்லி/ரசாயன உரங்களின் தெளிப்புக்கு ஆளான அரிசியை உட்கொள்ளும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். நவீன விவசாயம் நமது பாரம்பரிய விவசாயத்தின் மூலக்கூறுகளையே அழித்து விட்டது. 

இச்சூழலில் ஆரோக்கியமான உணவுக்கான ஒரே வழி பாரம்பரிய இயற்கை விவசாயமே எனும் கருத்து 21ம் நூற்றாண்டில் வேகமாகப் பரவி வருகிறது. பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுத்தலின் ஒரு பகுதியாக திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தணல் அமைப்பு முன்னெடுத்திருக்கும் பிரசாரம் ‘save our rice’ (நமது நெல்லைக் காப்போம்). 

இந்த பிரசாரத்தின் மூலம் இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் பணியை ஒருங்கிணைத்து வருகிறது தணல் அமைப்பு. ஆரோக்கியமான உணவுக்கு வழி வகை செய்யும் இந்தப் பணியை முன்னெடுத்துச் செல்பவர்களில் முக்கியமானவர் உஷா. திருச்சூர் மாவட்டம் கொடக்கரா எனும் கிராமத்தைச் சேர்ந்த இவர், இப்போது திருவனந்தபுரத்தில் இருந்து இயங்கி வருகிறார். 

Courtesy : Dinakaran
‘‘கிராமப்புறங்களில் வாழும் ஒவ்வொருவருக்கும் விவசாயம் குறித்த அடிப்படையான தெளிவு இருக்கும். என் பெற்றோர் ஆசிரியர்கள் என்றாலும் சிறு வயதிலிருந்தே விவசாயத்தின் பால் எனக்கு ஒரு ஈடுபாடு இருந்தது. எங்கள் ஊரில் இருந்த அரசுப் பள்ளி யில்தான் படித்தேன். எல்லோருக்கும் பள்ளிப்படிப்பு முடிந்ததும் அடுத்து என்ன படிப்பது என்கிற கேள்வி இருக்கும். விவசாயத்தின் மீது எனக்கிருந்த ஈடுபாட்டின் காரணமாக கேரள விவசாயப் பல்கலைக் கழகத்தில் தோட்டக்கலைத் துறையில் இணைந்தேன். கல்லூரிக்காலத்தில் சுற்றுச்சூழல் சார்ந்த செயல்பாடுகளில் என்னை இணைத்துக் கொண்டேன். 

அன்றைக்கு கேரளா முழுவதிலும் ஒருமைக் கலாசார (monoculture) முறையில்தான் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. டீ, காபி, ரப்பர், தேங்காய் என ஒரு வகையான பயிரையே பரவலாக பயிர் செய்து வந்தனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைத்தாலும் அது சுற்றுச்சூழலுக்கு விரோதமானதாக இருந்தது. ஒரு வகையான பயிரையே பரவலாகப் பயிரிடுவதால், பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயன உரங்கள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. 

பல ஆறுகளுக்கு நீராதாரமாக விளங்கக்கூடிய மலைப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஒருமைக் கலாசார விவசாயத்தால் ரசாயன உரங்கள்/பூச்சிக்கொல்லி மருந்துகள் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கலந்து நீரை நஞ்சாக்கின. மண் அரிப்பு ஏற்படுவதற்கும் காரணமாக இருந்தன. இச்சூழலை கண்ணுற்ற போது பூமியில் நீடித்து வாழ முடியாதோ என்கிற பயம் எனக்குள் ஏற்பட்டது. அப்போதுதான் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கான பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான தேவை இருப்பதை உணர்ந்தேன். 

என் போன்றே ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்த கண்ணூர் ஜெயக்குமாரைத் திருமணம் செய்து கொண்டேன். ரசாயனங்களைக் கொண்டு புரியும் ஒருமைக் கலாசாரத்தை புறந்தள்ளி விட்டு சூழலுக்கு உகந்த பன்மைக் கலாசார விவசாயத்தை இயற்கை வழியில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக பணிபுரிய வேண்டும் என்கிற கருத்தில் இருவரும் உறுதி கொண்டிருந்தோம்’’ என்கிறார் உஷா.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனும் நோக்கத்தில்தான் 1986ம் ஆண்டு தணல் அமைப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. நவீன விவசாயமே இன்றைக்கு முக்கிய சுற்றுச்சூழல் பிரச்னையாக இருப்பதன் காரணமாக விவசாய சீர்திருத்தத்துக்கான பணிகளில் இறங்கியிருக்கின்றனர். ‘‘விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு நடவடிக்கை என்பது காலச் சூழலுக்கான தேவை. இயற்கை விவசாய செயல்பாடுகளோடு, இயற்கை சார்ந்த வாழ்வியல் முறை, சூழலியல் கல்வி ஆகியவற்றிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். பாதுகாப்பான உணவு பாரம்பரிய இயற்கை விவசாயத்தின் மூலம் மட்டுமே சாத்தியம். பாரம்பரிய அறிவு நம்மிடம் இருக்கிறது.

அதனைக் கொண்டு பாரம்பரிய விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும். அதே நேரம் அதன் மூலம் விளையும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வழிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் நஞ்சற்ற தரமான உணவு கிடைப்பதோடு, விவசாயிகளுக்கும் பாதுகாப்பான வருமானம் கிடைக்கும். பாரம்பரிய விவசாயத்தை முன்னெடுக்க அதன் விதைகளை உயிர்ப்பிக்க வேண்டும். பசுமைப்புரட்சிக்குப் பின்னரும் கூட அழியாத பாரம்பரிய நெல் ரகங்கள் இருக்கின்றன. அதன் விதைகளை கண்டறிந்து மீட்பதன் மூலம் மட்டுமே அழிவைத் தடுக்க முடியும்.

இந்தியா முழுவதிலுமிருந்து அரிசி விளைவிக்கும் 10 மாநிலங்களைத் தேர்வு செய்து அம்மாநிலங்களில் உள்ள நெல் விவசாயிகள், அத்துறை சார் வல்லுநர்கள் மற்றும் வியாபாரிகளை அழைத்து, ‘உணவைக் காப்போம்’ முகாம் நடத்தினோம். அம்முகாமில் நெல் கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என முடிவெடுத்த பிறகு, கோ.நம்மாழ்வார், பொன்னம்பலம், கிருஷ்ணபிரசாத் போன்ற இயற்கை வேளாண் செயற்பாட்டாளர்களை இணைத்து அதற்கான திட்டத்தை உருவாக்கினோம். அப்படி உருவானதுதான் save our rice எனும் நமது நெல்லைக் காக்கும் பிரசாரம். 

ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த பகுதிக்கான தனித்துவமான நெல் ரகம் இருக்கும். அப்படியாக இந்தியா முழுவதிலுமிருக்கும் பாரம்பரிய நெல் விதைகளை சேகரித்து அதன் மூலமான உற்பத்தியை ஊக்குவிப்பதைத் திட்டமாகக் கொண்டு செயல்பட்டோம். இப்படியாக இந்தியா முழுவதிலுமிருந்து இதுவரையிலும் ஆயிரத்து 200 வகை பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்திருக்கிறோம். 7 இடங்களில் விதைத் திருவிழா நடத்தி பாரம்பரிய நெல் ரகங்களின் அவசியம் குறித்தான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறோம்’’ என்கிறார் உஷா.

மக்கள் மத்தியில் பாரம்பரிய விவசாயம் சார்ந்த விழிப்புணர்வு எந்த அளவில் இருக்கிறது?

‘‘பாரம்பரிய இயற்கை விவசாயத்தின் தேவையை மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள். நவீன விவசாயத்தைக் காட்டிலும் இயற்கை விவசாயமே நலமான உணவுகளுக்கான வழி என்கிற கருத்தில் மக்கள் இப்போது உறுதியோடு இருக்கிறார்கள். பாரம்பரிய இயற்கை விவசாயத்தை நாம் பின் தொடர்வதற்கு பல அழுத்தமான காரணங்கள் இருக்கின்றன. நஞ்சில்லாத உணவு, இயற்கைப் பேரிடர்களைத் தாங்கி வளரும் அதன் தன்மை,  பூச்சித்தாக்குதலை எதிர்த்து நிற்கும் வலிமை கொண்டதால், பூச்சிக்கொல்லிகளுக்காக செலவு செய்யத் தேவையில்லை.

ஆக, உடல் நலம் மற்றும் பொருளாதார நலன் என எந்த அடிப்படையிலும் இயற்கை விவசாயமே சிறந்தது. பாரம்பரிய நெல் ரகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு மருத்துவ குணங்கள் இருக்கின்றன. ரசாயன உரங்களால் உற்பத்தி செய்யப்பட்டு பாலீஷ் செய்யப்படும் அரிசியை உட்கொண்டாலோ, நீரிழிவு மற்றும் பல நோய்களுக்குதான் ஆளாக நேரிடும். நவீன விவசாயத்தால் நோயாளிகளான மக்கள் இப்போது தெளிவடைந்திருக்கிறார்கள். தேவை உருவாகும்போது அதற்கான உற்பத்தி உருவாகும். இன்றைக்கு இயற்கை வழியிலான விளைபொருட்களுக்கான தேவை உருவாகியிருக்கிறது’’ என்கிறார் உஷா.

கேரள அரசு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கிறது. நச்சு அதிகம் இருப்பதாகக் கூறி தமிழ்நாட்டில் விளையும் காய்கறிகளை கொள்முதல் செய்யத் தடை விதிக்கும் அளவு அரசு இவ்விஷயத்தில் முனைப்பு காட்டுகிறது. அரசே விவசாய சீர்திருத்தத்தை கையில் எடுக்கும் அளவுக்கான மாற்றத்தைச் சாத்தியப்படுத்திக் காட்டியது எது? ‘‘ஆரம்பத்தில் இயற்கை விவசாயத்தின் மீது அரசுக்கே சரியான புரிதல் இல்லை. கார்ப்பரேட்டுகளின் உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் ஆரோக்கியமான உணவை விளைவிக்க முடியாது என்பதை உணர்த்தியது 2000ம் ஆண்டு காசர்கோட்டில் எண்டோசல்பானால் ஏற்பட்ட பேரழிவு. 

காசர்கோட்டில் உள்ள கேரள அரசின் முந்திரி கார்ப்பரேஷனுக்கு சொந்தமான 7 ஆயிரம் ஏக்கர் முந்திரித் தோப்பில் பூச்சிகள் தாக்குதல் அதிகரித்தது. இதன் காரணமாக 1971ம் ஆண்டு முந்திரி கார்ப்பரேஷனின் முடிவின் பேரில் ஹெலிகாப்டர் மூலம் எண்டோசல்பான் பூச்சி மருந்து தெளிக்கப்பட்டது. காற்றில் பரவிய அந்த விஷம் சுற்றியுள்ள நீர், நிலம், காற்றில் மிக வேகமாக ஊடுருவி சுற்று வட்டார மக்களுக்கு சுவாசப்பிரச்னை, உளவியல் பிரச்னை, பிறப்புக்கோளாறு, புற்றுநோய் ஆகியவற்றை ஏற்படுத்தியது. 

30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு மருத்துவர் எண்டோசல்பானால்தான் இது நடந்தது என அறிவிக்கவே, 2003ம் ஆண்டு கேரள உயர்நீதி மன்றம் எண்டோசல்பானை தடை செய்தது. இன்னமும் அதன் தாக்கம் அப்பகுதிகளில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த அழிவுக்குப் பிறகுதான் அரசே பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மீதான தனது நிலைப்பாட்டைத் தளர்த்திக் கொண்டது. இதன் விளைவாக 2008ம் ஆண்டு ‘இயற்கை வேளாண்மை திட்டக் குழு’வை உருவாக்கி அதன் திட்டங்களை வகுக்க கோ.நம்மாழ்வார் அய்யா அழைக்கப்பட்டார். 

அதன் பிறகே கேரளாவில் இயற்கை விவசாயம் பரவலாக்கப்பட்டது. கேரள மாநிலம் தனது உணவுத்தேவைக்கு தமிழ்நாட்டைச் சார்ந்துதான் இருக்கிறது. தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் உணவுப்பொருட்களில் இருக்கும் பூச்சிக்கொல்லிகளின் தாக்கத்தை அறிந்ததும் பேரதிர்ச்சிக்கு ஆளானது கேரள அரசு. இதற்காக தனியே ஒரு குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

அக்குழுவின் அறிக்கைப்படி தமிழ்நாட்டில் இருந்து கொள்முதல் செய்யப்படும் காய்கறிகளில் கலந்திருக்கும் ரசாயனங்கள் புற்றுநோய் மற்றும் உடல் ரீதியிலான பிரச்னைகளை ஏற்படுத்தும் என கூறியது. அதன் விளைவாக, கேரள அரசே உணவு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம் என முடிவெடுத்து, தமிழ்நாட்டில் பூச்சிக்கொல்லிகளால் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களுக்குத் தடை விதித்தது. தமிழ்நாட்டிலும் இது போன்ற ஒரு மாற்றம் அவசியம் ஏற்பட வேண்டும்’’ என்கிறார் உஷா.

நன்றி : தினகரன்

No comments:

Post a Comment