Monday 22 February 2016

உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு (தினகரன்)

Image & Article courtesy : Dinakaran.com
கேழ்வரகு பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. அரிசியை விட அதிக சத்துள்ள அற்புதமான உணவு. அரிசி விரைவில் செரிமானம் ஆகும். கேழ்வரகு மெதுவாக செரிமானம் ஆகி சத்துக்களை கொடுக்கும். கேழ்வரகில் இனிப்போ, காரமோ சேர்த்து உணவாக கொடுக்கும்போது குழந்தைகளுக்கு நல்ல பலத்தை கொடுக்கும். உடலும், மனமும் சோர்வு இல்லாமல் இருக்கும். கேழ்வரகு சத்தூட்ட உணவாக விளங்குகிறது. இதற்கு ‘ராகி’ என்ற பெயரும் உண்டு.


கேழ்வரகை பயன்படுத்தி சிற்றுண்டி தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு, தேங்காய் துருவல், முருங்கை கீரை, மிளகாய் பொடி, வெங்காயம், சீரகப்பொடி, உப்பு, நல்லெண்ணெய். இவை அனைத்தையும் சேர்த்து பிசைந்து வைக்கவும். பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் விடவும். பிசைந்து வைத்திருந்த மாவை அடையாக தட்டி போடவும். சிறு தீயில் வைத்து மொரு மொரு பதத்தில் எடுக்கவும்.

இதேபோல், கேழ்வரகு மாவுடன் வெல்லம், ஏலக்காய் பொடி, நெய் சேர்த்து இனிப்பு அடை தயாரிக்கலாம். நல்லெண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளவும்.   தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த அடையை கொடுத்துவந்தால், நோய் எதிர்ப்பு சக்தி கூடும். சோர்வு இருக்காது. உடல் பலம் பெரும்.எலும்பை பலப்படுத்தும் உளுந்தம் களி தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: உளுந்தம் மாவு, வெல்லம், ஏலக்காய், நெய். ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு கொதிக்க வைக்கவும்.

ஏலக்காய் பொடி சேர்க்கவும். வறுத்து பொடி பண்ணி வைத்திருக்கும் உளுந்தம் மாவை சேர்த்து நன்றாக கிளறவும். சிறிது நெய் சேர்க்கவும். பின்னர், வெல்லம் சேர்த்து நன்றாக கிளறவும். உளுந்தம் களி பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இடுப்பு எலும்புகள் பலப்படும். தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். உடலுக்கு பலம் கொடுக்க கூடியது. இட்லி, தோசைக்கு அத்தியாவசிய தேவையாக உளுந்து பயன்படுகிறது.

இதில் புரதம், மினரல் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் உள்ளன. மருத்துவ வேதிப்பொருட்களை உள்ளடக்கியது.  அரிசி மாவு, கடலை பருப்பை பயன்படுத்தி ஆரோக்கிய சிற்றுண்டி தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி மாவு, வேக வைத்த கடலை பருப்பு, வெல்லம், தேங்காய் துருவல், நெய், ஏலக்காய், தேன், பால்.புழுங்கல் அரிசியை கரைசலாக எடுத்து கொதிக்க வைக்கவும்.

கட்டியாக மாறும்போது காய்ச்சிய பால் சேர்க்கவும். சிறிது நெய் சேர்த்து கலக்கவும். கடலை பருப்பு, தேங்காய் துருவல், வெல்லம் சேர்க்கவும். ஏலக்காயை தட்டி போடவும். இளகிய பதம் வந்தவுடன் தேன் சேர்க்கவும். இதை தேர்வுக்கு தயாராகும் குழந்தைகள் சாப்பிடும்போது ஆரோக்கியம் கூடும். தேர்வு சமயத்தில் வீட்டிலேயே இதுபோன்ற உணவுகளை செய்து கொடுப்பது மிகவும் நல்லது.

நன்றி : தினகரன்

No comments:

Post a Comment