Monday 22 February 2016

பழம்பெருமை மிக்க தாமிரபரணி (தினதந்தி)

ஆதிகாலத்தில் மனிதன் ஆற்றுப்படுகைகளையே தனது இருப்பிடமாக ஆக்கிக்கொண்டான். காரணம், அது தான் அவனது வாழ்வாதாரத்துக்கு வேண்டிய அனைத்தையும் வாரி வழங்கியது. மேலும் ஆற்றுப்படுகைகளின் பரந்த பூமி, அவனுக்கு பாதுகாப்பானதாகவும் இருந்தது. இதே அடிப்படையில்தான் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதிச்சநல்லூர் நாகரிகமும், ஆற்றுப்படுகையான தாமிரபரணி நதிக்கரையில் கருக்கொண்டது.
Image & Article courtesy :dailythanthi.com
தாமிரபரணி ஆறு, பல்வேறு சிறப்புகளைத் தாங்கி, பல ஆயிரம் ஆண்டுகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. வற்றாத ஜீவநதிகளில் ஒன்றான தாமிரபரணி ஆற்றின் பிறப்பிடம், மேற்குத் தொடர்ச்சி மலை மீது முண்டந்துறை காட்டுப்பகுதியில் உள்ள பூங்குளம் என்ற இடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து 1,725 மீட்டர் உயரத்தில் பிறந்து, வங்கக்கடலை நோக்கி ஓடி வரும் தாமிரபரணி, வழியில் பல நதிகளைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு வந்து, புன்னக்காயல் என்ற இடத்தில் வங்கக்கடலில் சங்கமம் ஆகிறது. அடர்ந்த காட்டுப் பகுதியான முண்டந்துறையில் பல ஆயிரம் ஆண்டுகளாக படிந்து இருக்கும் செடி, கொடிகளின் எச்சங்களும், மண்ணும் பஞ்சு மெத்தை போன்ற அமைப்பைப் பெற்று இருப்பதால், தென் மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் அங்கு பெய்யும் மழை நீர் முழுவதையும் அந்த இடம் அப்படியே உள்வாங்கிக் கொண்டு, மழை அல்லாத காலங்களில் சிறுகச் சிறுக வெளிவிடும் போது அது, தாமிரபரணி ஆறாக உருவாகி, ஆண்டு முழுவதும் வற்றாமல் ஓடி வருகிறது.

தமிழ் நாட்டிலேயே உருவாகி, தமிழ் நாட்டிலேயே கடலில் கலக்கிறது என்ற பெருமை பெற்ற ஒரே நதி தாமிரபரணி. மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கும் இந்த நதி, திருநெல்வேலி மாவட்டத்தில் 60 சதவீதம் அளவிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 40 சதவீதம் அளவிலுமாக மொத்தம் 125 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, தனது ஓட்டத்தை அந்த இரு மாவட்டங்களுக்குள் அடக்கிக் கொள்கிறது. தாமிரபரணியின் புகழ் வரலாறு, பல பக்கங்களைக் கொண்டது. ‘தாமிரபரணி மகாத்மியம்’ என்று தனியாக ஒரு நூல் உருவாகும் அளவுக்கு அதன் பெருமைகள் ஏராளமாக நிரம்பிக் கிடக்கின்றன.தாமிரபரணியின் பிறப்பிடம், அமைந்துள்ள மலை மீது அமர்ந்துதான் அகஸ்திய முனிவர் தமிழ் மொழியை உருவாக்கினார் என்று புராணங் கள் கூறுகின்றன.இப்போது உள்ளது போன்ற தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தாமிரபரணி ஆற்றின் புகழ், இந்தியா முழுவதும் பரவி இருந்தது என்பதே அந்த நதியின் பெருமைக்கு தக்க சான்றாக இருக்கிறது.

மகாபாரத இதிகாசம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.அந்த மகாபாரதத்திலேயே தாமிரபரணியின் புகழ் பாடப்பட்டு இருக்கிறது. பாண்டவர்களில் ஒருவரான தர்மர், வனவாசத்தின் போது வசிப்பதற்கு ஏற்ற இடத்தைக் கூறும்படி தவும்யர் என்ற முனிவரிடம் கேட்கிறார். முனிவர் தவும்யர், பல இடங்களைப் பற்றி விரிவாகச் சொல்லும்போது கீழ்க்கண்டவாறு கூறுகிறார்– ‘‘குந்தியின் புதல்வனே! தாமிரபரணியைப் பற்றிச் சொல்வேன், அதனைக் கேள்! மோட்ச பலனை விரும்புகிற தேவர்களால் எந்த இடத்தில் ஆசிரமத்தில் தவம் செய்யப்பட்டதோ, கோகர்ணம் என்று மூவுலகிலும் பிரசித்தி பெற்ற அந்த தாமிரபரணி என்ற ஷேத்திரம் இருக்கிறது. அவ்விடத்தில் குளிர்ந்த ஜலமுள்ளதும், அதிக ஜலமுள்ளதும், புண்ணியமானதும், மங்களகரமானதும், மனதை அடக்காத மனிதர்களால் அடைய மிக அரியதுமான மடு இருக்கிறது. அந்த இடத்தில் உள்ள தேவசஹம் என்கிற மலையில் மரங்களாலும், புல் முதலியவைகளாலும் நிறைந்தும், கனிகளும் கிழங்குகளும் உள்ளதும், புண்ணியதுமான அகஸ்தியருடைய ஆசிரமம் இருக்கிறது’’.இவ்வாறு தாமிரபரணி குறித்தும், அது உருவாகும் மேற்குத் தொடர்ச்சி மலை குறித்தும், மகாபாரதத்தில் கூறப்பட்டு இருப்பதால், அந்தக்காலத்திலேயே தாமிரபரணி நதியின் புகழ், இந்தியா முழுவதும் பரவி இருந்தது என்பதைத்தெரிந்து கொள்ளலாம்.

 இந்துக்களின் புனித நூலான வேதம், எழுதிவைக்கப்படாமலேயே, வாயால் மட்டும் ஓதப்பட்டு பல ஆயிரம் ஆண்டுகளாக, பரம்பரை பரம்பரையாக நீடித்து வருகிறது. எழுதிவைத்துப் படித்தால், உச்சரிப்பும் அதனால் ஏற்படும் ஒலியும் மாறுபடலாம் என்ற அச்சத்தால், அதனை எழுதி வைக்காமல் மனப்பாடம் செய்து ஓதியதோடு, அதை ஒருவர் மற்றொருவருக்கு அப்படியே கற்றுக் கொடுத்தனர்.வேதத்தின் உயிர் நாடியே அதை ஓதும்போது ஏற்படும் ஒலி தான் என்பதாலேயே அதனை எழுத்தில் பதியவில்லை.இதன் காரணமாகவே வேதத்தை ‘எழுதாக்கிளவி’ என்று தமிழில் அழகாகக் கூறுவது உண்டு. வேதம் ஏராளமான சுலோகங்களைக் கொண்டது. அவ்வளவையும் ஒருவரே படித்து மனப்பாடம் செய்வது என்பது கலிகாலத்தில் இயலாதது என்பதால், முனிவர் வியாசர், வேதத்தை யஜுர், சுக்ல, அதர்வண, சாம என்று நான்காக பிரித்துக் கொடுத்தார்.இதையும் மக்கள் புரிந்துகொள்வது சிரமம் என்பதால், வேதத்தின் முழு சாரம்சத்தையும் தொகுத்து ‘ஸ்ரீமத் பாகவதம்’ என்ற பெயரில் எளிய சுலோகங்களால் ஆக்கித் தந்து இருக்கிறார், முனிவர் வியாசர்.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தி இயற்றப்பட்ட, பெருமை மிகு ஸ்ரீமத் பாகவதத்திலும் தாமிரபரணி ஆறு பற்றிய குறிப்பு காணப்படுகிறது. ஸ்ரீமத் பாகவதத்தின் பதினோறாவது காண்டம், ஐந்தாவது அத்தியாயம், முப்பத்தி எட்டாவது சுலோகத்தில் முனிவர் நாரதர், நிமிச் சக்கரவர்த்தியிடம் ‘‘இந்த கலியுகத்தில் பல நாராயண பக்தர்கள் இருப்பார்கள். இந்த பக்தர்கள் பல்வேறு இடங்களில் தோன்று வார்கள். என்றாலும், குறிப்பாக தென்இந்தியாவில் அநேகம் பேர் தோன்றுவார்கள். இந்த கலியுகத்தில் திராவிட தேசத்து புண்ணிய நதிகளான தாம்ரபரணி, கிருதமாலா, யஸ்வினி, மிகவும் புண்ணியம் வாய்ந்த காவேரி மற்றும் பிரதீசி, மகாநதி ஆகிய நதிகளின் நீர்களைப் பருகுபவர்கள், கிட்டத்தட்ட பரமபுருஷராகிய வாசுதேவரின் தூய இருதயம் படைத்த பக்தர்களாக இருப்பார்கள்’’. இவ்வாறு ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டு இருக்கிறது. ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சிக்கு இந்த விவகாரம் நேரடியாக தொடர்பு உடையது அல்ல என்றாலும், தாமிரபரணி நதி நாகரிகம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்ற அதன் கால வரலாற்றை மெய்ப்பிக்க, தாமிர பரணி நதி பற்றிய குறிப்பு காணப்பட்ட மகாபாரதத்தின் காலம் என்ன என்பதை இங்கே சற்றுப் பார்க்கலாம். ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள் எப்போது எழுதப்பட்டன என்பதற்கு ஆதார பூர்வமான தகவல் கிடைக்கவில்லை என்றாலும், அந்த இதிகாசங்களில் காணப்படும் நட்சத்திர வரிசைகள், எந்தக் காலத்தில் அவ்வாறு இருந்து இருக்கும் என்ற வானவியல் ஆராய்ச்சி மூலம் அவற்றின் காலத்தை நிர்ணயம் செய்து இருக்கிறார்கள். ‘‘ராமாயண கதாநாயகன் ராமர் பிறந்தது கி.மு.5114, ஜனவரி மாதம் (அப்போது ஆங்கில மாத பெயர் இல்லை என்றாலும் இப்போதைய கணக்குப்படி மாதத்தின் பெயர் சொல்லப்படுகிறது) 10–ந் தேதி பகல் மணி 12.05. என்றும், குருஷேத்திரத்தில் மகாபாரத யுத்தம் கி.மு.3139 அக்டோபர் 13–ந் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்றது’’ என்றும் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற கலாசார மாநாடு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. இந்த தேதிகள் சரியானதுதானா என்ற வினா தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. ஆனாலும், மகாபாரத இதிகாசம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்பதிலும், அந்தக் காலத்திலேயே தாமிரபரணி ஆறு புகழ் பெற்று விளங்கியதால் தான் மகாபாரதத்தில் அது பற்றி பேசப்பட்டு இருக்கிறது என்பதிலும் சிறிதும் சந்தேகம் இல்லை.பழங்கால தமிழ் இலக்கியங்களில் ‘பொருநை’ என்ற பெயரில், தாமிரபரணி ஆற்றின் புகழ் பல இடங்களில் பாடப்பட்டு இருக்கிறது.மாமன்னர் அசோகரின் பாறைக் கல்வெட்டுக்களிலும் தாமிரபரணி ஆறு இடம்பிடித்து இருக்கிறது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, வெளிநாட்டினர் பலர், இந்தியாவின் புகழ் மிக்க வரலாறு பற்றிக் கேள்விப்பட்டு, அதனை நேரில் பார்க்க இங்கே வந்து சுற்றுப்பயணம் செய்து, தாங்கள் கண்டவற்றை ஆவணமாகப் பதிவு செய்து இருக்கிறார்கள். அவ்வாறு வந்தவர்களில் கி.மு. 5–ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹொரோட்டஸ், பிளினி ஆகியோரின் குறிப்புகளிலும் தாமிரபரணி கூறப்படுகிறது.கி.பி. 5–ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிளாடியஸ் தாலமி, தனது ‘ஜியாக்ரபி’ என்ற புத்தகத்தின் 7–ம் பாகம் முதல் அத்தியாயத்தில் தாமிரபரணி ஆறு பற்றியும், கொற்கை நகர் பற்றியும் குறிப்பிட்டு இருக்கிறார்.தாமிரபரணி ஆறும், அந்த நதிக்கரையில் இருந்த புகழ்மிக்க நாகரிகமும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் இவைபோல ஏராளம் இருக்கின்றன.

நன்றி : தினதந்தி

No comments:

Post a Comment