Friday 8 April 2016

அங்கக வேளாண் பண்ணை -அனுபவ விவசாயியின் பகிர்வு - I (கோவை வணிகம் மாத இதழ்)

Image & Article courtesy : kovaivanigam.com
அங்கக வேளாண் முறை என்பது அதிக செலவு என்று ஒரு பொதுவான கருத்து விவசாயிகளிடம் இருந்து வருகிறது. எளிய தொழில்நுட்ப முறையைப் பின்பற்றி நுண்ணுயிர்களைப் பெருக்கிக் குறைந்த செலவில் நிறைவான வருமானம் பெற்றிட முடியும் என்கிறார் கோவை மாவட்ட, தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி திரு.L.விஸ்வநாதன் அவர்கள்.

அனுபவ பாடம்

1965ல் விவசாயத்திற்கு வந்தேன், அப்போது எனக்கு 16 வயது. பணம் மட்டும் எனது நோக்கமல்ல, எந்தப் பயிராக இருந்தாலும் ஆத்ம திருப்தியுடன் வளர்க்க வேண்டும் என்பதையே பிரதானமாகக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் மக்களுக்கும் பணம் பிரதானமாக இருந்ததில்லை. தானியச் சாகுபடியும், பருத்தியும் முக்கிய பயிராகப் பயிர் செய்யப்பட்டன. ராகி, சோளம், தினை ஆகியவைகள் தை மாதத்தில் விதைப்போம் சித்திரை வைகாசி மாதங்களில் அறுவடை செய்திடுவோம். ஆனி, ஆடியில் பருத்தி பயிர் செய்வோம், மார்கழி தையில் பருத்தி வெடிக்கும். இப்படியே நம் பாரம்பரியப் பயிர்ச் சுழற்சி முறை இருந்தது. இரசாயனம் எட்டிப் பார்க்காத காலம். 

குறிப்பிட்ட மாதத்தில் மழை பொழியும், கோடை காற்று வீசும்… பருவ நிலை சமனாக இருந்தது. அந்தக் காலத்தில் தோட்ட விவசாயத்தை விட மானாவாரி விவசாயமே அதிக நிலப்பரப்பில் செய்யப்பட்டது. 70% மானாவாரி 30% தோட்ட விவசாயம். மானாவாரியில் சோளம், நிலக்கடலை, தினை, வரகு… போன்ற பயிர்கள் சாகுபடி  செய்தனர். மேலும், மஞ்சச் சோளம் பயிர் செய்யப்பட்டது.
அன்று வள்ளக் கணக்கில் மட்டுமே அளவிடப்பட்டன. விவசாயக் கூலி ஆட்களுக்கு மாதம் 1 சலகை தானியமும் மற்றும் ரூ.5/- கூலியாக வழங்கப்பட்டன. ஆசாரி, கொல்லர்… ஆகியோர்களுக்கு 1 சலகையும் (விவசாய நிலப்பரப்பளவிற்கு ஏற்றாற் போல் ஏர், கலப்பை, நுகம், வண்டி, மம்முட்டி, கொத்து… போன்ற உபகரணங்களைக் கணக்கிட்டு) வருடத்திற்கு வழங்கப்பட்டன. உதாரணமாக: பெரிய பண்ணைகளுக்கு 5 ஏர்… போன்று பல உபகரணங்கள் இருக்கும், இங்கு 5 சலகைகள் கொடுக்கப்பட்டன. இரும்பு வேலை செய்தால் கொல்லர், மர வேலைகளை உழி வைத்து செய்பவர் தச்சர். உதாரணமாக: மண்வெட்டிகளுக்குப் புடி போடுவது, மாட்டு வண்டிகளுக்குப் பாடி கட்டுவது போன்ற மர வேலைகள்…

4 படி (நாழி என்ற முகத்தளவை)= 1 வள்ளம்.
1 வள்ளம் = 3 1/2 கிலோ.
30 வள்ளம்  = 1 சலகை.
1 சலகை = 1 குவிண்டால்.
1 குவிண்டால் = 100 கிலோ.
4 சலகை மஞ்ச சோளத்தை விலைக்கு விற்றால் 1 பவுன் தங்கத்தை வாங்க முடியும்.

4 குவிண்டால் மஞ்ச சோளத்தின் சந்தை விலையே தங்கத்தின் 1 பவுனின் விலை. 1 குவிண்டால் மஞ்சச் சோளம் ரூ.75/-க்கு விற்றால் 1 பவுன் தங்கத்தின் விலை ரூ.300/- என்றிருந்தது.

சோளத்தில் வெள்ளை, மஞ்சள், கேசரி ஆகிய ரகங்கள் இருந்தன. மஞ்சச் சோளம் ஆடி மாதம் விதைத்து தை மாதத்தில் அறுவடை செய்யப்பட்டது, கேசரி சோளம் 100 – 120 நாள் பயிர். கேசரி சோளம் பெரும்பாலும் தோட்டப் பயிராகவே செய்யப்பட்டது. 

மஞ்சச் சோளம் மானாவரியாகவே பயிர் செய்யப்பட்டது. 30% விவசாய நிலங்களே கிணறு தோண்டி விவசாயம் செய்யப்பட்டன, மீதமுள்ள பகுதிகள் மானாவரியாகவே இருந்தன. கிணறு தோண்டினால் 20 அடியில் தண்ணீர் கிடைக்கும். இதனால், 3 க்ஷிஸ்ரீ மோட்டரில் (பம்பு செட்) தண்ணீர் பாய்ச்சினாலே 2 நபர்கள் தண்ணீர் கட்டுவார்கள். 1 நாளைக்கு 2 ஏக்கர் வரை நீர் பாய்ச்ச முடியும். 1985க்குப் பின்பு தான் போர்வெல் அமைப்பதும், சப்மெர்சிபிள் பம்பும் சந்தைக்கு வரத் துவங்கியன. 

 பருவ நிலையை நன்கு அறிந்தவர்கள் தோட்ட விவசாயிகள் எடுக்கும் அறுவடையைக் காட்டிலும் அதிகமாகவே எடுத்து வந்தனர். இதற்குப் பருவநிலை சமன் பாட்டில் இருந்ததே காரணம் என்கிறார். மஞ்ச சோளத்தை 4 நபர்கள் சேர்ந்து 1 நாளைக்கு 1 ஏக்கர் அறுவடை செய்திட முடியும் (ஒரு கூலி ஆள் 1/4 ஏக்கர் வரை அறுவடை செய்திடுவார்). மஞ்சச் சோளத்தை விதைத்து 3வது நாள் இடை சால் ஓட்டி துவரை, அவரை, சணப்பு… போன்றவைகளை தனித்தனியாகச் சாலில் விதைத்து விடுவோம்.இவை சோளப் பயிர்க்குள் மெதுவாகவே வளர்ந்து வரும், சோளப் பயிர் அறுவடை முடிந்தவுடன் ஒரு மாதத்தில் நன்கு வளர்ந்து விடும். சணப்பை மட்டும் அறுத்து விதையை எடுத்து சேகரித்து வைத்துக் கொள்வோம்(எதிர்வரும் காலத்திற்கு பசுந்தாள் உரப்பயிர்களை     விதைப்பதற்காக சேமித்து வைத்துக் கொள்வோம். இம்முறை தானியங்களுக்கும் பொருந்தும்). எப்போதும் விதைகளை நாங்கள் விலை கொடுத்து வாங்கியதில்லை. சில சூழ்நிலைகளில் விவசாயிகளிடையே பண்டமாற்று முறையில் விதை தானியங்களை பரிமாற்றிக் கொள்கொள்வதுமுண்டு. ஆனால், விலை கொடுத்து விதை தானியங்களை வாங்கியதே இல்லை என்றார். 

அறுவடை செய்த மஞ்ச சோளத்தை வீட்டிற்கு அருகில் குழி வெட்டி சேமித்து வைத்துக் கொள்வோம். ராகி, தினை, வரகு… போன்றவைகளை வீட்டிற்குள் 6 அடிக்கு 6 அடி என்று சிறிய அறை கட்டி  சேமித்து வைத்துக் கொள்வோம். ராகி, தினை, வரகு, சாமை… போன்ற தானியங்கள் செல்லு பிடிக்காது, கெட்டுப் போகாது. தண்ணீர் படாமலும், ஈரப்பதம் இல்லாமலும் பார்த்துக் கொண்டால் எத்தனை வருடங்களானாலும் பாதுகாக்கலாம். வரகு முளைப்புத் திறன் பாதிக்காது, ராகி ஒரு வருடத்திற்கு மேல் வைத்தால் முளைப்புத் திறன் பாதிக்கும் என்கிறார்.

 பட்டி மாடு
ஒரு குடும்பத்தில் 20 பட்டி மாடுகளுக்கு குறைவில்லாமல் இருக்கும். 4 முதல் 5 குடும்பத்தின் பட்டி மாடுகளை ஒரு கூலி ஆள் ஓட்டிச் சென்று மேய்த்து வருவார்.

இட்லி, தோசை, பொங்கல்… போன்றவைகள் விசே­ச நாட்களில் மட்டுமே சமைக்கப்பட்டன. சிறுதானியங்களே எங்களின் உணவுப் பட்டியலில் இருந்தன (ராகி, சோளம், கம்பு, தினை, வரகு, குதிரை வாலி… போன்ற தானியங்கள்). நெல் வயல்கள் வைத்திருப்போர் மட்டுமே அரிசி சோறினை உண்டனர். ஆனால், இன்று சிறு தானிய உணவு இயற்கை உணவானது. நாங்கள் ஆராக்கியமாக இருந்தோம், மருத்துவமனை இல்லை. அன்று ஒரு விவசாயி காசு கொடுத்து அரிசி வாங்கினால் மற்றவர்கள் அவர்களைக் கேவலமாகப் பார்ப்பார்கள், இன்று செலவு செய்து வாங்குவது நாகரீகமாகிவிட்டது.

தொடரும்........
நன்றி : கோவை வணிகம் மாத இதழ்

No comments:

Post a Comment