Saturday, 9 April 2016

அங்கக வேளாண் பண்ணை -அனுபவ விவசாயியின் பகிர்வு - II (கோவை வணிகம் மாத இதழ்)

அங்கக வேளாண் பண்ணை -அனுபவ விவசாயியின் பகிர்வு - I (கோவை வணிகம் மாத இதழ்) பதிவின் தொடர்ச்சி.....
Image & Article courtesy : kovaivanigam.com
1972ற்குப் பின்பே பூச்சிக் கொல்லி சந்தையில் விற்கத் துவங்கினர். பருத்தி 1 பொதி என்பது 130 கிலோ. 1 ஏக்கருக்கு 10 பொதி பருத்தி விளையும். 1978-80களில் 1 குவிண்டால் பருத்தியின் விலை ரூ.350/-ஆக இருந்தது. அதே, காலகட்டத்தில் விவிஎஸ் வரலட்சுமி (ரகம்), பருத்திக்கு ரூ.1,400/- என்று சந்தையில் விற்கப்பட்டது, காரணம் இதன் நூலின் தன்மை மிகவும் நைசாக இருந்தது.

பூச்சிக் கொல்லியின் பயன்பாடு 5 வருடங்களில் அதிகமானது. அந்த காலகட்டத்தில், பூச்சிகள் எந்தப் பூச்சி கொல்லிக்கும் கட்டுப்படாமல் பருத்திச் சாகுபடியையே விவசாயிகள் கைவிட்டனர். இதன் பிறகே கரும்பு, சிக்கரிக் கிழங்கு… போன்றவைகளைச் சாகுபடி செய்யத் துவங்கினர்.

1980களுக்குப் பின்பு தான் மஞ்சள் கோவை மாவட்டத்தில் பயிர் செய்யப்பட்டது. அன்றைய சந்தை விலை 1 குவிண்டால் ரூ.2,000/-. இந்தக் காலகட்டத்தில் ஒரு ஏக்கர் விவசாய பூமியின் விலை ரூ.10,000/-.

1985களுக்குப் பிறகு விவசாய கூலி ஆட்கள் தானியங்களுக்குப் பதிலாக பணமாக வாங்கத் துவங்கினர். தானியங்களுக்கு மதிப்பு குறையத் தொடங்கிய காலம். இங்கு தானியங்களை விற்று விவசாய கூலி ஆட்களுக்குப் பணமாகக் கொடுக்கும் பொழுது நஷ்டம் ஏற்பட்டது.

இதுவே, தானிய விவசாயத்தை கைவிடுவதற்கு காரணம் என்கிறார். இதைத் தொடர்ந்து விவசாயிகள் பணப்பயிரினைத் தேடத் தொடங்கினார்கள். மஞ்சள், சின்ன வெங்காயம், தக்காளி… போன்றவைகளைச் சாகுபடி செய்தனர்.

தானியச் சாகுபடி குறைகிறது, அரசு நியாய விலைக் கடைகளை அறிமுகம் செய்கிறது. இங்கு அரிசி வழங்கப்பட்டது, மக்கள் தானியங்களைப் புறக்கணிக்கத்துவங்கினர். நெற்பயிர் சாகுபடி செய்த விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகாத நிலை உருவாகிறது, சுருக்கமாகச் சொன்னால் தானியங்களுக்கு ஏற்பட்ட நிலை நெல்லுக்கும் வந்தது. இன்று நெல் சாகுபடியில் நடவு செய்வதற்கும், அறுவடை செய்வதற்கும் இயந்திரங்கள் வந்துள்ளமையால் ஓரளவு விலை கட்டுபடியாகிறது என்கிறார்.

பொதுவாக விவசாயிகள் உரத்திற்கும், பூச்சிக் கொல்லிக்கும் நிறைய செலவு செய்து அதிக விலைக்கு விற்றால் மட்டுமே அவர்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்கும். நான் செலவைக் குறைத்து அங்கக முறையில் சாகுபடி செய்கிறேன். அதற்காக, அதிக விலை எல்லாம் எதிர்பார்ப்பதில்லை, பொருளுக்குரிய சந்தை மதிப்பு கிடைத்தாலே எனக்குப் போதும் என்கிறார்.

1990ம் வருடம் முதல் இரசாயனங்களின் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டு, 1995ம் வருடம் முதல் முழுமையாக அங்கக வேளாண் பண்ணையாக மாற்றினேன். இரசாயனங்கள் பயன்படுத்திய காலத்திலும் அதிகமாகப் பயன்படுத்தியதில்லை என்பது முக்கிய குறிப்பாகும்.

வேப்பம் புண்ணாக்கு, கொட்டைமுத்து / ஆமணக்கு புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்கு… போன்றவைகளைப் பயன்படுத்தத் துவங்கினேன். கடலைப் புண்ணாக்கை நீரில் ஊற வைத்துப் பயிர்களுக்கு ஊற்றியதில் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது, வேப்பம் புண்ணாக்கு நூற்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்தியது, கொட்டைமுத்துப் புண்ணாக்கு இடுவதால் மண்ணில் பசவுத் தன்மை அதிகரித்தது. மேலும், மண்ணின் கெட்டித் தன்மை நீங்கி இலகுவாகியது. இப்படி ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பயன்படுத்தத்துவங்கினேன்.

இதனைத் தொடர்ந்து சாணம், கோமியம்… சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி போன்றவைகளைத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திலிருந்து வாங்கிப் பயன்படுத்தத் துவங்கினேன்.

திராட்சை உற்பத்தியாளர் சங்கத்தில் உறுப்பினராகவும், முன்னாளில் இயக்குநர் பொறுப்பில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இங்கு இருந்த விற்பனை வளாகத்தில் எனது பழத்திற்குத் தனி வாடிக்கையாளர்கள் இருந்தனர். இதுவே என் பொருளின் தரத்திற்கு சான்று. திராட்சைப் பழம் விற்பனை செய்யும் அட்டைப் பெட்டிகளில் பண்ணை மற்றும் விவசாயியின் பெயர்… போன்றவைகள்  அச்சிடப்பட்டிருக்கும். அங்கக வேளாண் முறையில் உற்பத்தி செய்வதால் மறுதிங்களானாலும்  திராட்சையின் காம்பு வாடுவதில்லை, ருசி மாறுவதில்லை… என்று எனது பழத்திற்குப் பாராட்டுகளும் வரவேற்பும் குவிந்தன.

அங்கக வேளாண்மைக்கென்று அரசிடம் சான்றுகள் எதுவும் வாங்கவில்லை, பொருளின் தரம், நுகர்வோரின் ஆதரவு போன்றவைகளே எனக்குச் சான்றாக இருந்தன.

சுமார் 14 வருடங்கள் திராட்சை சாகுபடி செய்தேன். நிலத்தடி நீர் மட்டம் 350 அடிக்கும் கீழ் செல்லும் போது நீரின் தன்மை / சுவை (PH Level) மாறுகிறது (900 அடியில் நீரை எடுத்து திராட்சை சாகுபடிக்கு பயன்படுத்தியதால் பயிர் கருகியது). இதனால், 1998ம் வருடம் திராட்சைச் சாகுபடியை நிறுத்தினோம். இதனைத் தொடர்ந்து மல்பெரிப் பயிரைத் தேர்வு செய்தோம். உழவில்லா சாகுபடிப் பயிரையே தேர்வு செய்தோம். சீனப் பட்டு இறக்குமதியால் பட்டுப் புழு வளர்ப்பிலும் நஷ்டமே கிடைத்தது. தொடர் நஷ்டத்தினால் கடன் சுமை ஏறியது. இன்றைய சூழலில் அங்கக வேளாண் முறைக்குப் பதிவு செய்துள்ளேன், தற்போது வேளாண் துறை அதிகாரிகளின் ஆய்வில் உள்ளது என்றும் கூறுகிறார். விவசாயிக்குக் கற்றலும், புதிய முயற்சிகளும் மிக முக்கியம் என்கிறார்.

வேளாண் அறிஞர்கள் நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கர் போன்றோரின் கருத்தரங்கினில் பங்கேற்றும், இயற்கை விவசாயம் குறித்த புத்தகங்களை வாசித்தும், நிறைய தகவல்களைச் சேகரித்துப் பயன்படுத்திப் பயன் அடைந்துள்ளேன்.


தொடரும்........
நன்றி : கோவை வணிகம் மாத இதழ்

No comments:

Post a Comment