இயற்கைவழி வேளாண்மையில் நெல் பயிரிடுவதற்கு பாப்பான்குளம் ராதாகிருஷ்ணன்
பயன்படுத்திய இயற்கை ஊட்டக் கரைசல்களில் மூன்றாவது முறை, தொல்லுயிரியைத்
தயாரிக்கும் முறை:
ஒரே இடத்தில் சாணத்தையும் குப்பையையும் கொட்டி வைத்தால் செடி எடுத்துக்
கொள்ளாது. அதை முறைப்படி செடிகள் எடுத்துக்கொள்ளும் ஊட்டமாகத் தர வேண்டும்.
அவ்வாறு செய்வதற்காகவே நுண்ணுயிர்கள் இருக்கின்றன. இவற்றில் சிறந்து
விளங்குபவை தொல்லுயிரிகள். காற்றில்லாத இடத்தில் வாழும் ஒரு வகை
நுண்ணுயிரிகள், தொல்லுயிரிகள் என்று அழைக்கப்படுகின்றன. இதுதான் உலகின்
முதல் உயிரினம் என்று கருதப்படுகிறது.
Image & Article courtesy : tamil.thehindu.com |
இவற்றை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் நல்ல விளைச்சலை எடுக்க முடியும்.
இவற்றைச் சிறப்பாகக் கையாண்டால் செயற்கை உரங்கள் தேவைப்படாது. எளிய அமைப்பு
ஒன்றின் மூலம் இதை உருவாக்கலாம். 200 லிட்டர் கொள்ளளவு உள்ள ஒரு கலனை
(பீப்பாய் அல்லது தொட்டி எதுவாகவும் இருக்கலாம்) எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதனுள் கரைசலை ஊற்றுவதற்கான இரு குழாய் அமைப்பை உருவாக்க வேண்டும்.
தொல்லுயிரியை வடித்து எடுப்பதற்கான குழாய் ஒன்றை அமைக்க வேண்டும். இது
தவிரக் கலத்தை எப்பொழுதாவது தூய்மை செய்ய வேண்டுமெனில், அதற்காக ஒரு
வெளியேற்றக் குழாய் அமைக்க வேண்டும். கலனைக் காற்றுப் புகாத வண்ணம் அமைக்க
வேண்டும். இதற்காக இடுகுழாயை, கழிவறையில் பயன்படுத்தும் நீர் அடைப்பு
முறைக் குழாயைப் போன்று பயன்படுத்த வேண்டும். கலத்தின் மேல்புறம் ஒரு
காற்றுப் போக்கி இருக்க வேண்டும்.
சாணவளிகலன் கழிவு 75 லிட்டர், நீர் 75 லிட்டர், அன்னபேதி 100 கிராம்
இவற்றைச் சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ள வேண்டும் அல்லது 50 கிலோ சாணம், 100
லிட்டர் நீர், 100 கிராம் அன்னபேதி ஆகியவற்றைக் கலக்கிக்கொள்ள வேண்டும்.
இதில் ஏதாவது ஒரு கலவையை இடுகுழாய் வழியாக ஊற்ற வேண்டும். பின்னர் 35
லிட்டர் கொள்ளளவு கொண்ட மற்றொரு கலனில் நீர் - 20 லிட்டர், ஈஸ்ட் (தயிர்)
100 கிராம், பனங்கருப்பட்டி அல்லது நாட்டுவெல்லம் மூன்று கிலோ,
விளக்கெண்ணெய் - 250 மி.லி. ஆகியவற்றைக் கலந்து மூன்று மணி நேரம் ஊறவிட
வேண்டும். பின்னர் 15 நிமிட இடைவெளிவிட்டு, இதைக் கலனில் இட வேண்டும்.
மூன்று மணி நேரத்தில் விளக்கெண்ணெய் நன்றாகக் கரைந்துவிடும். பின்னர் 200
லிட்டர் கலனில் இந்தக் கலவையை ஊற்ற வேண்டும்.
இருநூறு லிட்டர் கலன் முழுவதும் நிரம்பாவிட்டால், மேலும் கூடுதல் தண்ணீர்
சேர்த்துக் கலனை நிரப்ப வேண்டும். காற்றுப் புகாதவாறு நீர் நிரம்பியிருக்க
வேண்டும். இவ்வாறு முழுவதும் ஊற்றிய பிறகு ஏழு நாட்கள் செரிக்கவிட
வேண்டும். நன்கு செரித்த பின்பு தொல்லுயிரிகள் பெரிதும் பெருகி இருக்கும்.
இதன் பின்னர் நாள்தோறும் கரைசலை எடுத்துக்கொண்டே இருக்கலாம்.
இரண்டு லிட்டர் கரைசல் ஊற்றினால் இரண்டு லிட்டர் தொல்லுயிரிக் கலவை
கிடைக்கும். இது நீர்போல் தெளிவாக இருக்கும். நாம் ஊற்றும் கரைசல் கட்டியாக
இருக்கும். இவ்வாறு பெற்ற கலவையை ஒரு லிட்டருக்கு நான்கு லிட்டர் என்ற
அளவில் நீருடன் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். அல்லது தண்ணீர்
பாயும் வாய்க்கால்களில் ஊற்றிவிடலாம். இதனால் செடிகள் நன்கு
வளர்ச்சியடையும். தொல்லுயிரியானது தானும் செடிக்கு உணவாக மாறுகிறது. பல
நுண்ணுயிரிகளுக்கும் உணவாகிறது.
நீலப்பச்சைப் பாசியைப் போன்ற நுண்ணுயிர்களை வளர்க்கவும் தொல்லுயிரியை
பயன்படுத்தலாம். நம்மாழ்வாரின் அண்ணன் இயற்கை வேளாண் அறிஞர்
கோ.பாலகிருட்டிணன், இது தொடர்பான தன்னுடைய ஆய்வில் சாதாரண மருதோன்றி இலை
ஆறு மடங்கு பெரிதாகியதைப் பதிவு செய்துள்ளார். இவ்வாறாக இலைப்பரப்பு
பெரிதாவதால் ஒளிச்சேர்க்கை அதிகப் பரப்பில் நடக்கிறது. இதனால் விளைச்சல்
பெருகுகிறது. ஏக்கர் ஒன்றுக்குத் தொல்லுயிரி 200 முதல் 300 லிட்டர் மற்றும்
அமுதக் கரைசல் 30 முதல் 50 லிட்டர் ஆகியவற்றைத் தண்ணீர் பாய்ச்சும்போது
கலந்துவிடலாம்.
நன்றி : தி இந்து
No comments:
Post a Comment