Friday 10 March 2017

தேனீப் பண்ணை வைக்க இடதேர்வு : தேனீ வளர்க்கலாம் வாங்க பகுதி-IV



இடத் தேர்வு: தேனீப் பண்ணை அமைக்கத் தெரிவு செய்யும் இடம் தேனீக்களுக்கும் தேனீ வளர்ப்போருக்கும் ஏற்றதாக அமைத்தல் அவசியம். தேனீக் கூட்டங்கள் எங்கெங்கு இயற்கையில் அதிகமாகக் காணப்படுகின்றதோ அந்த இடங்கள் பொதுவாகத் தேனீக்கள் வளர்ப்பதற்கு ஏற்றவை
  • தேனீ வளர்ப்பு நல்ல வெற்றி பெறவும் அதிகத் தேன் மகசூல் பெறவும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தைச் சுற்றிலும் இரண்டு கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் தேனீக்கு மதுரம் மற்றும் மகரந்தம் தரும் மரம், செடி, கொடிகள் இருத்தல் வேண்டும்
  • தேனீக்களுக்குத் தேனை உற்பத்தி செய்ய மதுரமும், புழுக்களை வளர்க்க மகரந்தமும் அதிக அளவு தேவைப்படுகின்றன. ஒரு இடத்தில் தேனீக்கு உணவு தரும் சில மரம், செடி, கொடிகள் இருப்பதையோ, அல்லது சில ஏக்கர் இருப்பதையோ கொண்டு அந்த இடம் வணிக ரீதியாக தேனீ வளர்க்க வேண்டும் என்றால் அதன் அருகில் பல நூறு ஏக்கரில், தேனீக்களுக்கு உணவு தரும் பயிர்கள் இருத்தல் வேண்டும். அப்பயிரிகளிலிருந்து தரமான மதுரம் உற்பத்தி செய்யும் மலர்கள் மிகுந்த எண்ணிக்கைகளில் பூத்து இருக்க வேண்டும். ஓர் இடத்தில் கிடைக்கும் மதுர அளவைப் பொறுத்து அவ்விடத்தில் வைக்கப்படும் தேனீக்கூட்டங்களின் எண்ணிக்கையை முடிவு செய்ய வேண்டும்
  • தேனீக்களுக்குத் தூய்மையான தண்ணீர் அவசியம் தண்ணீர் கூட்டின் வெப்ப நிலையைக் குறைக்கவும் அவசக் கூழ் உற்பத்திக்கும் தேனின் கெட்டித் தன்மையைக் குறைக்கவும் தேவைப்படுகின்றது. ஆகவே தெரிவு செய்யப்பட்ட இடத்திற்கு அருகே ஒரு கிணறோ, ஓடையோ, சுனையோ அல்லது வாய்க்காலோ இருத்தல் நலம்
  • தேனீக்களின் வளர்ச்சிக்கு உகந்த பருவ நிலை நிலவும் இடங்களைத் தெரிவு செய்ய வேண்டும். அதிக வெயில் அதிவேகமான காற்று மற்றும் கன மழை ஆகியவை தேனீக்களைப் பாதிக்கும் அதிக காற்றும் மழையும் பணித் தேனீக்களின் உணவு திரட்டும் திறனையும் அவைகள் ஆயுட்காலத்தையும் பாதிக்கின்றன. அதிக சூரிய வெப்பம் காரணமாக மெழுகு அடை உருகி விடும்
  • இடம் போதிய வடிகால் வசதியுடனும் இருக்க வேண்டும் வடிகால் வசதியற்ற இடங்களில் காற்றின் ஈரப்பதம் எப்பொழுதும் கூடுதலாக இருக்கும். இதனால் தேன் முதிர்வது பாதிக்கப்படும்
  • பயிர் பாதுகாப்பு மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படும் இடங்களில் வெற்றிகரமாகத் தேனீ வளர்க்க இயலாது
  • தேனீக்களை வளர்க்க விவசாய நிலம் தேவையில்லை
  • கால்நடைகள் தேனீக்களின் கொட்டிற்கு இலக்காவதால் மேய்ச்சல் நிலங்களுக்கு அருகே தேனீப் பண்ணையைப் பள்ளி, சந்தை போன்ற பொது இடங்களிலிருந்து போக்குவரத்து சாலையை விட்டும் குறைத்து 100 மீட்டர் தள்ளியே அடைக்க வேண்டும். தேனீப் பண்ணையை வீட்டிற்கு அருகில் அமைக்க நேரிட்டால் குறைந்தது 50 மீட்டர் இடைவெளி தர வேண்டும். இதனால் தேனீக்களால் மனிதர்களுக்குக் கூடிய வரை எவ்விதத் தொந்தரவும் இருக்காது
  • ஒரு தேனீப் பண்ணைக்கும் மற்றொரு தேனீப் பண்ணைக்கும் குறைந்தது இரண்டு கிலோ மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்
  • சாலை வசதி உள்ள இடம் போக்குவரவிற்குப் பெரிதும் உதவியாக இருக்கும்
தேனீப் பெட்டிகளை வைக்கும் விதம்:
  • தேனீப் பெட்டிகளை நிழலில், இயன்றால் கிழக்குப் பார்த்து வைத்தல் வேண்டும். காலை வெயில் பெட்டியின் மேல்படும் பொழுது தேனீக்கள் அதிகாலையில் தங்கள் பணியைத் துவங்கும்
  • தேனீ பெட்டிகளை ஓர் ஓடு போட்ட தாழ்வாரம் அல்லது கீற்றுக் கொட்டகையின் கீழ் வைக்கலாம். இல்லையெனில் மரம் அல்லது புதர் நிழலில் அடிக்கும் வெய்யிலிருந்து பாதுகாக்க அவசியம் நிழல் செய்து தர வேண்டும்
  • தேனீப் பெட்டிகளுக்கு இடையே ஆறு அடி இடைவெளி கொடுக்கலாம். தேனீப் பெட்டிகளை அடுத்தடுத்து நெருக்கமாக வைத்தலைத் தவிர்க்க வேண்டும். இதனால் பணித் தேனீக்களை கூடுமாறிச் செல்வது தடுக்கப்படும்
  • தேனீக்களை வீட்டில் வைத்து வளர்க்க விரும்புபவர்கள் தேனீபு் பெட்டிகளை கொல்லைப் புறத்திலோ அல்லது மாடியிலோ வைக்கலாம். தேனீக்கள் விளக்கு ஒளியை நாடிச் செல்வதால் தேனீப் பெட்டிகளில் மீது இரவில் வெளிச்சம் படாதவாறு வைக்க வேண்டும்
  • தேனீப் பெட்டிகளை சமதளமாக உள்ள தரையில் வைக்க வேண்டும்
  • எறும்புப் புற்று அல்லது எறும்புக் கூடு உள்ள இடங்களிலும் வாய்க்காலின் உள்ளும் தேனீபு் பெட்டிகளை வைக்க கூடாது
  • தேனீபு் பெட்டிகளை வைக்கும் தாங்களின் கால்களை நீர் ஊற்றிய கிண்ணங்களில் வைக்க வேண்டும் அல்லது வேப்ப எண்ணெய் கலந்த ‘கிரீஸை’ தாங்கியின் கால்களில் தடவி வைக்க வேண்டும். இல்லையெனில் கிழிந்த துணியை தாங்கியின் காலைச் சுற்றிக் கட்டி அத்துணியின் கழிவு எண்ணெயைத் தடவ வேண்டும். இதனால் எறும்புத் தொல்லையைத் தவிர்க்கலாம்
  • தேனீப் பெட்டியை தாங்கியுடன் சேர்த்துக் கயிறு கொண்டு கட்டி வைப்பது நல்லது இதனால் ஒரு வேளை தேனீப் பெட்டி சாய நேரிட்டாலும் பெட்டியின் பாகங்கள் தனித்தனியே பிரித்து விழாது
நன்றி : தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக இணையதளம்

No comments:

Post a Comment