Monday 6 March 2017

தேனீ வளர்க்கலாம் வாங்க : முதல் பகுதி

Image courtesy : Alvesgaspar (Wikipedia)


தேனின் மருத்துவகுணங்கள் பற்றி அறியாதவர்கள் இல்லை என்று சொல்லுமளவிற்கு பலன்கள் ஆயிரம் கொண்டது. மருத்துவத்திற்காக மட்டுமின்றி தின உணவு தேவைகளுக்காகவும் பயன்பட்டு வருகிறது. சுத்தமான தேனிற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வியாபார நோக்கத்திற்காகவே மட்டுமின்றி ஒரு பயனுள்ள பொழுது போக்காகவும் தேனீ வளர்ப்பு விளங்குகிறது.

தேனீ வளர்ப்பை வெற்றிகரமாக மேற்கொள்ள வேண்டும் என்றால், முதலாவதாகத் தேனீக்களைப் பற்றிய அறிவு மிகவும் அவசியம். தேனீக்களுக்கும் மற்ற வளர்ப்புப் பிராணிகளுக்கும், ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது.  தேனீ வளர்க்க விரும்புவர்கள் தேனீக்களின் தன்மைகள், அவை வளரும் விதம், அவற்றின் வாழ்க்கை முறை, அவைகளைக் கையாளும் விதம், அவைகளின் வளர்ச்சியைப் பாதிக்கும் சூழ்நிலைகள் மற்றும் அவைகளைத் தாக்கும் எதிரிகள், நோய்கள் ஆகியன பற்றி அவசியம் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். அப்பொழுது தான் தேனீக்களின் தேவையை அறிந்து உரிய நேரத்தில் தகுந்த பராமரிப்பு முறைகளை மேற்கொள்ள இயலும்.
தேனீக்களைப் பயமின்றியும், தன்னம்பிக்கையுடனும் பொறுமையாகவும், நிதானத்துடன், கையாளும் கலையைக் கற்றுக் கொண்டுவிட்டால், நாளடைவில் தேனீக்கள் கொட்டிவிடும் என்ற மன அச்சம் அகன்று விடும். தேனீப் பெட்டிகளை முறைப்படி அச்சமின்றி ஆய்வு செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் கூட்டினுள் என்ன நடக்கின்றது என்பதைக் கண்டு அறிய முடியும்.
தேனீக்களைப் பற்றி புத்தகங்கள் படித்தும், இணைய தளங்களைப் பார்த்தும், பிறரிடமிருந்து கேட்டும் அறிந்து கொள்வதைவிட, நாமே வளர்த்துப் பார்த்துப் பெறும் அறிவு மிகச் சிறந்தது. இந்த அனுபவ அறிவே ஒருவரைத் தேனீ வளர்ப்புக் கலையில் சிறந்த வல்லுனராக்கும்.
தேனீ வளர்க்க விரும்புவோருக்குக் கூரிய கண் பார்வை மிகவும் அவசியம். அப்பொழுதுதான் அடை அறைகளில் இருக்கும் முட்டைகள், வளரும் புழுக்கள், ராணித் தேனீ மற்றும் செவ்வுண்ணி போன்ற உருவில் சிறிய தேனீக்களின் எதிரிகளையும் காண இயலும். குறைபாடுள்ள கண்களை உடையவர்கள் அவசியம் கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும்

தேனீ வளர்ப்பு நுட்பங்களை அனுபவம் மிக்க தேனீ வளர்ப்போரிடமிருந்தோ அல்லது தேனீ வளர்ப்பு பயிற்சிகளில் கலந்து கொண்டோ நன்கு அறிந்து கொள்ள இயலும்.

இந்தியத் தேனீ - ஓர் அறிமுகம்
தமிழகத்தில் வணிக ரீதியாக வளர்க்கப்படும் அடுக்குத் தேனீ இனம் இந்தியத் தேனீ இனமாகும். இவை மலைகளிலும் சமவெளிகளிலும் வாழவல்லவை. மழைவாழ் ரகத் தேனீக்களின் குணாதிசயங்கள் சமவெளி ரகத்திலிருந்து சற்று வேறுபடுகின்றன.

இந்தியத் தேனீயின் சிறப்பியல்புகள்
  • நாட்டுத் தேனீ இனம் என்பதனால் பலவிதச் சூழலிலும் வெற்றிகரமாக இயற்கையோடு இயைந்து வாழவல்லவை.
  • இருட்டில் வாழ்பவை.
  • பல அடைகளை அடுக்கடுக்காகவும் ஒன்றுக்கு ஒன்று இணையாகவும் கட்டுகின்றன.
  • பொதுவாக சாந்த குணம் படைத்தவை.
  • சினமுற்ற தேனீக்களைப் புகை கொண்டு எளிதாகக் கட்டுப்படுத்த இயலும்.
  • கொட்டிய தேனீயில் கொடுக்கு முறிவு சில நேரங்களில் மட்டுமே ஏற்படும்.
  • கொட்டினால் ஏற்படும் வலி சற்று குறைவாக இருக்கும்.
  • கொட்டிய பின்னர் நேரடியாகப் பறக்காமல் சுற்றி வந்து உள் இறங்கிய கொடுக்கை விட்டு விடாமல் லாவகமாக விடுவித்துக் கொள்கின்றன
  • சட்டங்களை ஆய்வு செய்யும் பொழுது தேனீக்கள் சில நேரங்களில் அடையின் மேல் அங்குமிங்கும் ஓடும்
  • விசிறும் தேனீக்கள் இறக்கைகளைக் கொண்டு விசிறும் பொழுது வயிறு நுழைவு வழியைப் பார்த்த நிலையில் நின்று செயல்படுகின்றன
  • தேனீக் கூட்டத்தின் வளர்ச்சி சிறிய பெட்டிகளில் விரைவாக நடைபெறுகின்றது. புழு அறை பெரிதாக இருக்கும் தேன் அறைகளில் பணித் துவக்கம் தாமதமாகும்
  • கூட்டிற்குள் மகரந்த வரத்து வெகுவாகக் குறையும் பொழுது புழு வளர்ப்புப் பணி தடைப்பட்டுக் கூட்டம் ஓடி விடும்
  • இவை பாதகமான சூழ்நிலையிலிருந்து விடுபட்டு வாழ அடிக்கடி கூட்டை விட்டு ஓடி விடுகின்றன
  • இன விருத்திக்காக இவை அடிக்கடி குடி பெயர்ந்து செல்கின்றன. ஒரு கூட்டில் ஆண்டுக்கு 5 முதல் 6 முறை கூட்டம் பிரிதல் நடைபெறுகின்றது. இதனால் கூட்டத்தின் வலு பெரிதும் குறைகின்றது
  • ராணியற்ற கூட்டத்தில் பணித் தேனீக்களின் உடல் நிறம் சற்று கருமையாக மாறுகின்றது
  • ராணி இழப்பு நேரிட்ட கூட்டத்தில் ஒரு வாரத்தில் பணித் தேனீக்கள் முட்டையிடத் தொடங்குகின்றன
  • மதுர வரத்து காலங்களில் பழைய கறுத்த அடைகளைக் கடித்து புதுப்பிக்கின்றன
  • இவ்வாறு அடையைப் புதுப்பிக்கும் பொழுது அப்பலகையில் விழும் அடைத் துகள்கள் நீக்கப்படாது இருப்பதால் மெழுகுப் பூச்சியின் தாக்குதல் கூடுதலாகக் காணப்படும்
  • ‘வரோவா’ உண்ணிகளைத் தாக்கியும் நீக்கியும் தங்களைக் காத்துக் கொள்ள வல்லவை
  • பச்சைக் குருவி, கருங்குருவி போன்ற பறவைகளின் பிடியில் எளிதில் சிக்காமல் லாவகமாக, வளைந்து, விழுந்து, எழுந்து, பறந்து தப்பிக்கின்றன
  • கூட்டை நெருங்கும் எதிரிகளைக் கூட்டமாகச் சேர்ந்து ஒரு சீறும் ஒலி எழுப்பி விரட்டுகின்றன
  • புழுக்கள் வைரஸ் நோயால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன
  • உணவுச் செடிகள் குறைவாகவும், பரவலாகவும் உள்ள இடங்களிலும் இவை வாழவல்லவை
  • உணவு வரத்து குறையும் பொழுது அதற்குத் தக்கபடி தேனீக்களின் உற்பத்தியைக் குறைக்கின்றன. மேலும் அத்தகைய தருணத்தில் இடப்படும் எல்லா முட்டைகளும் தேனீக்களாக வளர்க்கப்படுவதில்லை. புரதத் தட்டுப்பாடு தோன்றும் பொழுது முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்களைத் தேனீக்களே உண்டு விடுகின்றன
  • குறைவான வெளிச்சம் இருக்கும் பொழுது வழி அறிந்து புலரும் பொழுதே வெளியில் சென்று உணவு திரட்டி வருகின்றன
  • விடியலுக்கு முன் துவங்கும் உணவு திரட்டும் பணி அந்தி சாயும் நேரம் வரையிலும் தொடர்கின்றது
  • பணித் தேனீக்கள் பிசின் சேகரிப்பது இல்லை
  • பயிரில் கூடுதலாக மகரந்தச் சேர்க்கை நடைபெற உதவுகின்றன
  • பணித் தேனீக்கள் மலரின்பால் கூடுதல் விசுவாசம் காட்டுகின்றன
  • வயல்வெளித் தேனீக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று உணவு திரட்டி வருகின்றன
  • வயல் வெளித் தேனீக்கள் ஒரு மணிக்கு 25 கிலோ மீட்டர் தூரம் பறக்க வல்லவை
  • உருவில் சற்று பெரியவை
  • உடல் நிறம் சற்று கூடுதலான கருமையுடன் இருக்கும்
  • பொதுவாக இவை அடைகளை நுழைவு வழிக்கு இணையாகவும் சில நேரங்களில் குறுக்காவும் கட்டும்
  • கொட்டும் தன்மை சற்று கூடுதலாக இருக்கும்
  • கடுங்குளிரிலும் செயலாற்ற வல்லவை
  • தேன் சேகரிக்கும் ஆற்றல் சற்று கூடுதலாக இருக்கும்
 நன்றி : தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக இணையதளம்

No comments:

Post a Comment