Saturday, 1 October 2016

வேர் உட்பூசணம் என்னும் பயிர்களின் நண்பன்

பயிர்களின் வேர்கள் நிலத்தில் பதித்து சத்துக்களை கிரகித்து வளர்கின்றன. இந்த வேர்கள் குறிப்பிட்ட அளவு ஆழத்திற்கு மட்டுமே செல்லும். அப்படி செல்லும் இடத்தில் கிடைக்கும் சத்துக்களை மட்டுமே எடுத்துக்கொள்ளும். ஆனால் வேர் உட்பூசணங்களை பயிர்களுக்கு இடும் போது அவை தாவரங்களுக்கு எளிதில் கிடைக்காத சில நுண்ணிய சத்துக்களை கூட கிரகித்து பயிர்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. இந்த வேர் பூசணங்கள் என்பது ஒரு வகை நுண்ணுயிர் வகையை சேர்ந்தது. இது பயிர்களின் வேர்களில் வாழ்ந்து கொண்டு பயிர்களுக்கு தேவையான சத்துக்களை மண்ணிலிருந்து எடுத்து தான் சாந்து வாழும் பயிர்களுக்கு அளிக்கின்றன.

நுண்ணுயிரிகள்:

கண்ணுக்கு புலப்படாத மிகச்சிறிய உயிரினங்களை நுண்ணுயிரிகள் என்று அழைப்பர். இவற்றில் தாவர வேர்களில் கட்டாய கூட்டு வாழ்க்கை நடத்தும் வேர் உட்பூசணம் முக்கியமானதாகும். இந்த வேர் உட்பூசணம் என்ற நுண்ணுயிர் மண்ணில் ஸ்போர் எனப்படும் குறுகற்றையான பூஞ்சாணமாகவும், இழைத்துண்டுகளாகவும் காணப்படும். இப்படியான நுண்ணுயிரியான வேர் உட்பூசணங்கள் மண்ணில் இருக்கும் பயிரின் வேர்களை சார்ந்து வாழ்கின்றன.

இவை வளர தேவையான ஒத்த பயிர்கள் வளரும் போது வேர்ப்பூசண வித்துக்கள் முளைத்து அந்த பயிரின் வேரை சூழ்கின்றன. பிறகு சிறிதுசிறிதாகதான் சார்ந்த பயிரின் வேரினுள் நுழைகிறது. வேரிலிருந்துகிளம்பும் பூஞ்சண இழைகள் மண்ணில் சென்று சத்து நிரம்பிய நுண்ணூட்டங்களை கிரகிக்கின்றன. இவற்றால் உறிஞ்சப்படும் சத்துக்கள் வேர் இலைகளில் ஊட்டங்களாக சேமிக்கப்படுகின்றன.

வேர் உட்பூசணத்தின் செயல்பாடு:

இந்த பூசண வேர்த்தூவிகள் மண்ணில் வெகு துரத்திற்கு சுலபமாக பரவி விடுகிறது. இப்படி பரவும் திறன் இருப்பதால்,வேர்கள் பரவ முடியாத தூரத்தில் உள்ள சத்தை கூட இந்த பூசணம் உறிஞ்சி செடிகளுக்கு தருகிறது. இது தவிர, வேர் உட்பூசணம் தாவரத்தின் வேர்களுக்குள் நுழைந்து வேர் இழைகளை உண்டாக்கி, வேர்களுக்கு எட்டாத மணிச்சத்தை தனது இழைகளின் மூலம் பயிருக்கு கொண்டுவந்து சேர்க்கின்றன. மணிச்சத்தை பயிர்களுக்கு கொடுப்பதுடன் கந்தகம், துத்தநாகம் மற்றும் சுண்ணாம்பு சத்து போன்ற சத்துக்களையும் மண்ணிலிருந்து பயிர்களுக்கு எடுத்து கொடுக்கிறது. இதர நுண்ணுயிர்களைப்போல் வேர் உட்பூசணத்தை சர்க்கரை கரைசல் ஊடகங்களில் வளர்க்கமுடியாது. இது தாவர வேர்களிலேயே வளரக்கூடியது. எனவே வேர் உட்பூசணம் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட வெர்மி குலைட் அல்லது கிருமி நீக்கப்பட்ட மணல் மண் கலந்த பாத்திகளில் வளர்க்கப்பட்ட சோளம் அல்லது புல் வகைகளின் வேர்களில் வளர்க்கப்படுகிறது. பூசண வேரில் நன்கு வளர்ந்த பின் பயிரில் வளரும் வேரும் பரவிய மண்ணும் எடுக்கப்பட்டு துகள்களாக்கி பாலித்தீன் பைகளில் கொடுக்கப்படுகிறது. இந்த கலவையை வயலில் இட பரிந்துரைக்கப்படுகிறது.

பயன்படுத்தும் முறை:

ஒரு சதுர மீட்டர் நிலப்பரப்பிற்கு 100 கிராம் வேர் உட்பூசணங்கள் போதுமானது. விதைப்பதற்கு முன் நாற்றங்காலில் மண்ணிற்கு கீழே 2 முதல் 3 செ.மீ. ஆழத்தில் இடவும். பாலித்தீன் பைகளில் வளரும் நாற்றுகளுக்கு ஒரு பைக்கு 10 கிராம் வேர் உட்பூசணம் போதுமானது. பைகளுக்கு தேவைப்படும் மண் கலவையை தயார் செய்யும்போது, 100 கிலோ மண் கலவைகளில் 10 கிலோ வேர் உட்பூசணங்கள் வளர்ந்து பாலித்தீன் பைகளில் இடவும். வளர்ந்த பயிர்களுக்கு ஒரு பயிர்களுக்கு சுமார் 200 கிராம் வேர் உட்பூசணம் தேவைப்படும்.

பயன்கள்:

குறுகிய கால பயிர்களுக்கான பயறுவகைகள், நிலக்கடலை போன்றவற்றின் மகசூலை அதிகபடுத்தப்படுகின்றன. வளர்ச்சி ஊக்கிகளை சுரந்து பயிர்வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. வேரைத்தாக்கும் பூஞ்சாண நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. மண்ணின் கட்டடமைப்பை அதிகரிக்கிறது. நிலத்தின் களர், உவர் தன்மையை தாங்கி பயிரை நிலை நிறுத்துகிறது.

நன்றி: M S Swaminathan Research FoundationM S Swaminathan Research Foundation

No comments:

Post a Comment