Sunday, 5 June 2016

ஆறுகளும் ஆன்ட்டிபயாடிக் மருந்துகளும்

கூவமும் அடையாறும் சுத்தமாகப் போகுது... சென்னையின் கனவு நனவாகப் போகுது!

சென்னை ஐ.ஐ.டி. உட்பட உலகின் 8 நாடுகளைச் சேர்ந்த 15 பல்கலைக்கழகங்கள் இணைந்து HEARD (Halting  Environmental Antibiotic Resistance Dissemination) திட்டத்தின் கீழ் மனிதனின்  ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும் மாசடைந்த நீர்நிலைகளின் நீர் மாதிரிகளை ஆராயும் முயற்சியில்  இறங்கியுள்ளனர்.
இந்தியா முழுவதற்குமான மாதிரியாக, நம் சிங்காரச் சென்னையில் உள்ள கூவம், அடையாறு மற்றும் பள்ளிக்கரணை  சதுப்புநிலங்களின் நீர் நிலைகளை இவர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளனர். பல்வேறு தனியார் சுகாதார  அமைப்புகளைச் சார்ந்தவர்கள், சென்னை மாநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு  வாரியம் மற்றும் பொது சுகாதாரத்துறையைச் சார்ந்த உறுப்பினர்களுடன் இந்த திட்டத்தில் இணைந்து செயல்படப்  போகிறார்கள். கடந்த ஐந்தாண்டுகளில் பல்கிப் பெருகியுள்ள நுண்ணுயிர்கள் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கக்கூடிய  தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் உருவாக்கக்கூடிய ஆராய்ச்சிப் பணியை இப்பல்கலைக் கழக உறுப்பினர்கள்  மேற்கொள்ள இருக்கிறார்கள்.
இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான சென்னை ஐ.ஐ.டி. சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியரான இந்துமதி நம்பி,  “எங்களின் இந்த ஆய்வு, எதிர்காலத்தில் சாத்தியமாகும் சிகிச்சை முறைகளைப் பற்றிய விவாதங்களுக்கு வழிவகுக்கும்.  இப்போது சென்னை நகர மக்கள் இந்த ஆறுகளின் மாசடைந்த நீரினால் பரவும் தொற்று நோய்களுக்காக அளவுக்கு  அதிகமான ஆன்ட்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் நிலையில் உள்ளனர்.
Image & Article courtesy : Dinakaran
ஆற்றல்மிக்க ஆன்ட்டிபயாடிக் மருந்துகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது அதற்கு உடல் பழகி, குறிப்பிட்ட  ஆன்ட்டிபயாடிக்கின் எதிர்ப்புசக்தி குறைகிறது. இந்த எதிர்ப்பு சக்தியை சமாளிக்க புதிய ஆன்ட்டிபயாடிக் மருந்துகளின்  வரவு சந்தையில் அதிகரிக்கத் தொடங்கும். இவற்றின் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது மிக முக்கியம்” என்கிறார்.
“எதிர்காலத்தில் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்துக்கு  மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கப்போகும்  சுற்றுச்சூழல் சீர்கேடு சம்பந்தமான இந்த முழுமையான ஆராய்ச்சி அவசரத் தேவையாகும். பாக்டீரியா தாக்குதல்  ஆபத்தான நிலையில் இல்லை என்றாலும், மாசடைந்த நீர் ஆதாரங்களை சுத்தப்படுத்த வேண்டியதன் அவசியத்தை  புரிந்து கொள்ள வேண்டும்.
ஆராய்ச்சியாளர்கள் காணும் தீர்வுகளை எதிர்காலத்தில் ஆக்கபூர்வமாக செயல்படுத்தும் வகையில் ஒரு கூட்டமைப்பை  உருவாக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் கண்டுபிடிப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளமுடியும்”  என்று  தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலர் டாக்டர் ஜே.ராதாகிருஷ்ணன் பரிந்துரைத்தார்.எப்படியோ இந்த ஆராய்ச்சி  மூலம் நம் கூவத்தையும் அடையாற்றையும் மீட்டெடுப்பது நமக்கு மகிழ்ச்சி தரும் செய்தி!.

source:dinakaran

No comments:

Post a Comment