இயற்கை விவசாயத்தை அரசு ஊக்குவித்தால், பேச்சுவழக்கில் உள்ள இயற்கை
விவசாயம், எதிர்காலத்தில் நிலத்தையும் மனித உடல் ஆரோக்கியத்தையும் நிச்சயம்
காப்பாற்றும் என்று நெல் திருவிழாவில் விவசாயிகள் தெரிவித்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் கிராமத்தில்
கடந்த 4, 5-ம் தேதிகளில் ‘நமது நெல்லைக் காப்போம்' என்ற பாரம்பரிய நெல்
திருவிழா கிரியேட் அமைப்பு சார்பில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகத்தின்
பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாமல் கேரளம், தெலங்கானா, ஒடிசா ஆகிய
மாநிலங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
நெல் விழாவில் பள்ளி மாணவர்கள்: Image & Article courtesy தி இந்து |
விவசாயம் காப்பாற்றும்
“திருமணத்துக்கு முன்பு மாப்பிள்ளை சம்பாவும், திருமணத்துக்குப் பிறகு
கவுனிஅரிசியும், மகப்பேற்றின்போது பூங்காரும், குழந்தை பிறந்த பிறகு
பால்குடவாரையும், பிறந்த குழந்தைக்குச் சாதம் ஊட்ட வாரன்சம்பா என
மருத்துவக் குணம் நிறைந்த பாரம்பரிய நெல் வகைகள் தமிழகத்தில் நீண்டகாலமாகப்
பயிரிடப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில் அதிக மகசூல் பெற வேண்டும் என்ற
நோக்கத்துடன் ரசாயன உரங்கள் வந்ததால், பாரம்பரிய ரகங்கள் அழிந்தன. இதுவரை
156 நெல் ரகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கவுனி அரிசி : Image courtesy wikipedia |
இது 10-வது ஆண்டு நெல் திருவிழா. இந்த விழாவை மத்திய, மாநில அரசுகளே
நடத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். அதேபோல் ரசாயன உரங்களுக்கு
வழங்கும் மானியத்தைப்போல், இயற்கை சாகுபடிக்கும் மானியம் வழங்க வேண்டும்”
என்றார் நெல் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன்.
விவசாயிகள் தீர்மானிப்பார்களா?
காந்தி கிராமப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மார்க்கண்டன்:
நம்முடைய முன்னோர்கள் மேற்கொண்டது இயற்கை விவசாயம்தான். காலப்போக்கில்
அறிவியல் வளர்ச்சியின் காரணமாகவும், உணவு பற்றாக்குறை காரணமாக அதிக
விளைச்சலைப் பெற ரசாயன உரங்கள் விஞ்ஞானிகளால் புகுத்தப்பட்டன. இதனால்
நிலத்தின் வளம் கெட்டது மட்டுமல்லாமல், மனித உடல்நலமும் கெட்டது.
இயற்கை விவசாயத்தில் விளைவிக்கக்கூடிய பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல்
இப்போது விவசாயிகள் அவதிப்படுகின்றனர். மத்திய, மாநில அரசுகள் இது
குறித்துச் சிந்திக்க வேண்டும். வட்டார அளவில் சந்தைகளை உருவாக்க வேண்டும்.
அதேபோல் விவசாயிகள் விளைவித்த தானியங்களுக்கான விலையை விவசாயிகளே
தீர்மானிக்க வேண்டும். அரசு அதிகாரிகள் விலையை நிர்ணயிக்கக்கூடிய சூழல் மாற
வேண்டும்.
பூச்சிக்கொல்லியைக் கட்டுப்படுத்துவோம்
திருவனந்தபுரம் நமது நெல்லைக் காப்போம் அமைப்பின் ஸ்ரீதர்:
பூச்சிக்கொல்லி என்றைக்கு இங்கே புகுந்ததோ, அன்றே மனிதக் குலத்தில்
வியாதிகள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. தமிழக விவசாயிகள் அளவுக்கு
அதிகமாகப் பூச்சிக்கொல்லியைத் தெளிப்பதால்தான், தமிழகக் காய்கறிகளை
வாங்குவதற்குக் கேரளத்தில் யோசிக்கின்றனர். இதை அரசு கண்காணிக்க வேண்டும்.
ரசாயன உரங்களின் வரவால்தான் மனிதர்களுக்கு அதிக நோய்கள் வருகின்றன. இதைத்
தவிர்க்க விவசாயிகளால் மட்டும்தான் முடியும். ஆரோக்கியமான சமுதாயத்தைப்
படைக்க விவசாயிகள் முன்வருகின்றனர். விவசாயத்தையும் சமுதாயத்தையும்
காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் பூச்சிக்கொல்லியை கட்டுப்படுத்த
வேண்டும்.
இயற்கை கைவிடாது
கிரியேட் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ஆர். பொன்னம்பலம்:
ரசாயன உரங்களால் அதிகம் பாதிக்கப்பட்டது பறவை இனங்கள்தான். மனிதர்கள் எந்த
அளவுக்குப் பாதிப்பை அனுபவித்து வருகிறார்களோ, அதைவிட மோசமாகப் பறவைகளும்
பாதிக்கப்பட்டுள்ளன. நெல் மணிகளை விரும்பி உட்கொள்ளும் சிட்டுக்குருவி
நகர்ப்புறங்களில் இருந்து காணாமல் போய்விட்டது. அதேபோல் தானியங்களை
உட்கொள்ளும் அணிலும் வெகுவாகக் குறைந்துவருகிறது. இதற்கெல்லாம் ரசாயன
உரங்களே முக்கியக் காரணம். ரசாயன உரத்தைப் பயன்படுத்துவதைக் கொஞ்சம்
கொஞ்சமாகக் கைவிட்டு இயற்கைக்கு மாறினால், விவசாயிகளை இயற்கை கைவிடாது.
நிலத்தை நலமாக்குவோம்
வேளாண் அலுவலர் பூச்சி நீ. செல்வம்:
இந்தியாவில் 22,292 பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்ததாகக் குறிப்பு உள்ளது.
ரசாயன உரங்களின் வரவால் இவற்றையெல்லாம் இழந்துவிட்டோம். மக்கள்தொகைப்
பெருக்கத்துக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதால்,
மண்ணில் ரசாயனத்தைப் பயன்படுத்தத் தொடங்கினோம். அதனால் பாரம்பரிய,
மருத்துவக் குணம் வாய்ந்த நெல் வகைகளை இழந்து விட்டோம்.
மண்ணின் வளத்தைக் காப்பாற்றியாக வேண்டிய தருணத்தில் உள்ளோம். இயற்கை
விவசாயத்துக்கு மாற வேண்டுமானால் கோடைமழையில் நிலத்தை உழுது நவதானியங்களை
விதைத்து, பூக்கும் தருணத்தில் அதை மீண்டும் உழுது இயற்கை விவசாயத்தைத்
தொடங்க வேண்டும். அப்போதுதான் மண் வளமாக இருக்கும். நிலத்தை வளமாக்குவதைக்
காட்டிலும் நலமாக மாற்றினாலே போதும். விவசாயம் செழிக்கும்.
source:tamil.thehindu.com
No comments:
Post a Comment