Saturday, 5 March 2016

ஏன் வீழ்ந்தன நம் தானியங்கள்? (தி இந்து கட்டுரை)


‘கருங்கால்
வரகே இருங்கதிர்த்தினையே
சிறுகொடிக்கொள்ளே பொறிகிளர் அவரையொடு
இந்நான்கல்லது உணவும் இல்லை'
- என்று மாங்குடிக் கிழாரால் (புறநானூறு: 335) உயர்த்திக் கூறப்படும் வரகு, தினை போன்ற தவசங்கள் (தானியங்கள்), தமிழகத்தின் வானவாரி (மானம்பாரி) நிலத்தில் விளைந்து மிகுந்த பயனைத் தந்தவை. இன்றைய காலகட்டத்தில் வெறுத்து ஒதுக்கப்பட்டுப் புறக்கணிக்கப்பட்ட இவை, பல பன்னாட்டு நிறுவனங்களால் ஊட்ட மாவுக்காகவும், ஊட்டக் குடிநீராகவும் (Health Drinks) விரும்பி வாங்கப்படுகின்றன.
தானியங்களைப் பொறுத்த அளவில் நஞ்சை (நன்செய்) நிலத்தில் விளைபவை என்றும் புஞ்சை (புன்செய்) நிலத்தில் விளைபவை என்றும் பொதுவாகப் பிரிக்கப்படுகின்றன. ஆறுகள், குளங்களின் வழியே நீரைப் பெற்று உறுதியான பாசன வசதியைக் கொண்ட நிலங்களை, நஞ்சை நிலங்கள் எனலாம். இங்கு விளையும் தானியங்கள் மிகுந்த நீரை எடுத்துக்கொண்டு அதிக அளவு விளைச்சலைக் கொடுக்கும். நெல், கோதுமை, மொக்கைச் சோளம் எனப்படும் மக்காச் சோளம் ஆகியன நன்செய்க்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுப் பன்னெடுங்காலமாக விளைவிக்கப்படுகின்றன.
பாதிக்கு மேற்பட்ட உணவு
வீரிய விதைகள் எனப்படும் ஒட்டு விதை ஆராய்ச்சியும் இந்தப் பயிரினங்களில்தான் நடந்தேறியுள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டுமல்லாது உலகம் முழுமைக்கும் பெருமளவு உணவை வழங்குவது என்னவோ, மானாவாரி வேளாண்மைப் பயிர்களே. குறிப்பாக, இந்தியாவில் பாதிக்கு மேற்பட்ட உணவு, மானாவாரி நிலப்பரப்பில் இருந்தே கிடைக்கிறது. அதாவது இந்தியாவில் மொத்த உணவு தானிய விளைச்சல் பரப்பான 14 கோடி ஹெக்டேர் பரப்பளவில் 8.5 கோடி ஹெக்டேர், அதாவது 65 விழுக்காடு நிலத்தில் உணவு தானியங்களே விளைகின்றன.
மானாவாரி நிலங்களுக்கே உரிய புஞ்சைத் தானியங்களான சோளம், கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, காடைக்கண்ணி போன்றவை மிகக் குறைந்த மழைநீரில் வளர்ந்து விளைச்சல் தருபவை. இவற்றில்கூட வரகு, சாமை, தினை, குதிரைவாலி, காடைக்கண்ணி ஆகிய ஐந்தும் சிறுபுஞ்சைத் தானியங்கள் (minor millets) என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை அருந்தானியங்கள் என்றும் அழைக்கலாம். ஏனெனில் அவை அரியவையாகவும், அருமையானவையாகவும் இருப்பதுதான்.
குறைந்த நீரே போதும்
உண்மையில் இவை சிறுதானியங்களன்று, பெருமைக்குரிய தானியங்கள். ஏனெனில் இவற்றில் இருக்கும் ஊட்டங்கள் மிகச் சிறப்பானவை. மிகக் குறைந்த நீர், மிக எளிய தொழில்நுட்பம், மிகக் குறைந்த இடுபொருள் செலவு, மிக அதிக ஊட்டம் என்று எல்லா வகையான சிறப்புக் கூறுகளைக் கொண்டிருக்கும் இந்தத் தானியங்களை நமது வேளாண் அறிவியலாளர்களும், அரசுத் துறைகளும் புறக்கணித்துள்ளன.
குறிப்பாக ஒரு கிலோ நெல் விளைவிக்கத் தேவைப்படும் நீர் 1,550 லிட்டர், அதேபோல ஒரு கிலோ கோதுமை விளைவிக்க 750 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. ஆனால், புஞ்சைத் தானியங் களுக்கு இதில் 10-ல் ஒரு பங்கு நீர்கூடத் தேவையில்லை. பெரிய அணைகள் தேவையில்லை. காடுகளும் பழங்குடிகளும் அழிய வேண்டியதில்லை. ஆழ்துளைக் கிணறு மட்டுமல்ல திறந்த கிணறும் கூடத் தேவையில்லை. ஒரு கிலோ தினை சாகுபடி செய்ய, எவ்வளவு நீர் தேவைப்படும் என்ற ஆய்வுகூட நடத்தப்படவில்லை என்பதுதான் வேடிக்கை. இந்தத் தானியங்கள் மழை நீரை நம்பியே விளைகின்றன.
திட்டமிட்ட புறக்கணிப்பு
பசுமைப் புரட்சியால் பெரிதும் பாதிக்கப் பட்டவை இந்தப் புஞ்சைப் பயிர்கள்தான். பசுமைப் புரட்சியில் நெல்லையும் கோதுமை யையும் குறிவைத்தே ஆராய்ச்சிகள் நடந்தேறின. அத்துடன் அரிசிச் சோறு உண்பதே உயர்ந்த பண்பாடு என்ற பரப்புரையும் விரிவாக்கப்பட்டது. குறிப்பிட்ட மேட்டுக்குடி மக்களின் உணவாக இருந்த அரிசி, யாவருக்குமான உணவாக மாற்றப் பட்டது. பள்ளி உணவுத் திட்டம், பொது வழங்கல் திட்டம் என்று யாவற்றிலும் அரிசியும் கோதுமையுமே கொடுக்கப்பட்டன. ஆராய்ச்சிக்கான ஒதுக்கீடுகள், சாகுபடிக்கான ஒதுக்கீடுகள் என்று அளவற்ற பணம் இதில் முதலீடு செய்யப்பட்டது. இதன் விளைவாக மக்களின் பயன்பாட்டில் இருந்து புஞ்சைத் தானியங்கள் முற்றிலுமாக ஒதுக்கப்பட்டன.
பழங்குடி மக்கள், ‘நாகரிகம்' தொடாத பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் மட்டுமே தானியங்களின் பயன்பாடு எஞ்சியிருந்தது. தமிழகத்தில் நாமக்கல், தருமபுரி, மதுரை போன்ற மிக அரிதான இடங்களில் மட்டுமே சாமை, குதிரைவாலி, தினை போன்றவை பயிரிடப்படுகின்றன. இன்றைக்கு மதுரைப் பகுதி மக்கள் தாங்கள் விளைவித்த தானியங்களை விற்றுவிட்டு, நியாய விலைக் கடைகளில் ‘விலையில்லா' அரிசியை வாங்கிச் சமைக்கின்றனர்.
இப்படிப் புறக்கணிக்கப்பட்ட தானியங்களால் ஏற்பட்ட சூழலியல், திணையியல், பொருளியல், பண்பாட்டியல் கேடுகளை இதுவரை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பது வேதனைக்குரியது.

நன்றி : தி இந்து

No comments:

Post a Comment