Image & Article courtesy : Dinamani |
மிகக் குறைந்த செலவில் பசு, எருமை போன்ற கால்நடைகளை வளர்க்க முடியாத
சூழலில் கூட வெள்ளாடுகளை வளர்க்கலாம். இதற்குத் தேவைப்படும் முதலீடு
மிகவும் குறைவு. வெள்ளாடுகள், இறைச்சி, பால் தேவைக்காக
வளர்க்கப்படுகின்றன. வெள்ளாடுகள் ஆங்காங்கு இருக்கும் புதர்ச் செடிகளில்
மேயும். அசாதாரமாண தட்பவெப்ப சூழ்நிலைகளையும் தாண்டி, கிடைக்கும் புல்
பூண்டுகளைக் கொண்டே உயிர் வாழக் கூடியது. உலகில் மாட்டுப் பாலை விட சில
இடங்களில் ஆட்டுப் பாலையே விரும்பி அருந்துகின்றனர். அதுபோல் ஆட்டு
இறைச்சியும், ஒரு முக்கிய உணவாகும்.
வெள்ளாடு வளர்ப்பின் நன்மைகள்
வெள்ளாடு வளர்ப்பில் முதலீடு மிகவும் குறைவு. இவை அளவில் சிறியதாக உள்ளதால், கொட்டகைப் பராமரிப்புச் செலவு குறைவு. ஆடுகள் மிகக் குறைந்த காலத்தில் 10-12 மாதங்களில் பருவ வயதை அடைந்து விடும்.
இவை, 16-17 மாதங்களில் குட்டி ஈன்று விடும். பொதுவாக ஆடுகள் ஒரு தருணத்தில் 2 குட்டிகள் மட்டுமே போடும். 3 அல்லது 4 குட்டிகள் போடுவது மிகவும் அரிது. வறண்ட நிலங்களில் மற்ற கால்நடைகளை விட வெள்ளாடு வளர்ப்பே சிறந்ததாகும். ஆடுகள், பலவகைப்பட்ட பயிர்களையும் உண்பவை. இவை முட்புதர்கள், வேளாண் பயிர்க் கழிவுகள், வேளாண் உப விளைபொருள்கள் போன்றவற்றை உண்பதால் தீவனப் பராமரிப்புச் செலவு குறைவு. ஆட்டு இறைச்சியில், பன்றி இறைச்சியை விட கொழுப்பு குறைவாகவே உள்ளது.
பசும்பாலை விட வெள்ளாட்டுப் பால் எளிதில் செரிக்கக் கூடியது. இதில், ஒவ்வாமை ஏதும் ஏற்படுவதில்லை. மேலும் வெள்ளாட்டுப் பாலில் சிறிய கொழுப்பு திரள்களே உள்ளன. பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பொருள்கள் அதிக அளவு உள்ளதால், நோய் எதிர்ப்பாற்றல் குறைவு. வெள்ளாடு, செம்மறி ஆட்டுடன் ஒப்பிடும்போது 2.5 மடங்கு பொருளாதார அளவில் மிதவெப்பப் பகுதிகளுக்கு ஏற்றவை.
ஆட்டிலிருந்து கிடைக்கும் தோல், முடி ஆகியவையும் பதனிடு தொழிற்சாலைகளில் பயன்படுகின்றன. கிராமப்புறப் பகுதிகளில் கூலி வேலை செய்வோருக்கும், ஏழைகளுக்கும் இவ்வளர்ப்பு மிகவும் உகந்தது.
வயது முதிர்ந்த ஆடுகளை வாங்கும்போது, அதன் பால் உற்பத்தித் திறனை அறிந்த பின் வாங்குதல் நலம். ஒரு நாளின் உற்பத்தி அளவு என்பது அடுத்தடுத்த இரண்டு கறத்தலில் பாலின் அளவு 0.5 லிட்டர் அதிகமாக இருப்பதாகும். இந்த அளவு, குட்டிகள் ஊட்டியது போல மீதமுள்ள அளவாகும். இளம் ஆடுகளை வாங்கும் போது, அதன் குட்டி ஈனும் உற்பத்தி அளவைப் பார்த்து வாங்குதல் வேண்டும். அதோடு ஆடு எந்த ஒரு உடல் குறைபாடும் இன்றி இருக்க வேண்டும். ஆடுகளின் 120 நாள் பால் உற்பத்தி அளவை வைத்தும், 2 வருட வயதில் அது ஈன்ற குட்டிகள் எண்ணிக்கையை வைத்தும் ஆட்டின் செயல்திறனைக் கணிக்கலாம்.
தமிழ்நாட்டில் மூன்று வகையான வெள்ளாட்டு இனங்கள் உள்ளன. அவை கன்னி ஆடுகள், கொடி ஆடுகள், சேலம் கருப்பு, கன்னி ஆடுகள் ஆகும். இம்மூன்று இனங்களும் இறைச்சி, தோலுக்காகவே பெரும்பாலும் வளர்க்கப்படுகின்றன.
சினை ஆடுகள் பராமரிப்பு
சினை ஆடுகளை மந்தையிலிருந்து பிரித்துத் தனியே பராமரித்தல் வேண்டும். சினை ஆடுகள் ஒன்றை ஒன்று முட்டிக் கொள்ள அனுமதிக்கக் கூடாது. சினையுற்றபின் கரு கலைந்த ஆடுகளுடன் சினை ஆடுகள் எக்காரணம் கொண்டும் கலந்து விடுதல் கூடாது.
குட்டி ஈனுவதற்கு முன்பு ஆட்டின் பின்பாகத்தில் மடியைச் சுற்றிலும் உள்ள முடியையும் வாலையும் வெட்டி விடுதல் நல்லது. அடுத்த குட்டி ஈனுவதற்கு 6-8 வாரங்கள் முன்பே பால் கறப்பதை நிறுத்தி விட வேண்டும்.
பிறந்த குட்டிகளின் பராமரிப்பு
குட்டி பிறந்தவுடன் பஞ்சு அல்லது பழைய துணி கொண்டு குட்டியின் வாயையும் மூக்கையும் நன்கு துடைக்க வேண்டும். குட்டி மூச்சுவிட எளிதாகுமாறு வாயைச் சுற்றியுள்ள திரவத்தை அகற்ற வேண்டும். பின்னங்கால்களையும் பிடித்து தலைகீழாக இருக்குமாறு குட்டியை சில நொடிகள் பிடித்திருக்கலாம்.
இது மூச்சுக் குழல் பாதையை சுத்தம் செய்ய உதவும். குட்டி பிறந்த அரை மணி நேரத்துக்குள் தானாகவே எழுந்து தாயிடம் பால் குடிக்க வேண்டும். இல்லாவிடில் அது எழுந்து நடக்க உதவி செய்தல் வேண்டும்.
தாய், தனது குட்டியை நாக்கினால் தடவி விட அனுமதிக்க வேண்டும். முதல் அரை மணி நேரத்துக்குள் குட்டியை சீம்பால் குடிக்க வைக்க வேண்டும். குட்டி தானாக குடிக்க முடியாவிட்டால் காம்பை எடுத்து வாயில் வைத்துப் பாலை பீய்ச்சி விடுதல் நலம்.
புதிதாகப் பிறந்த குட்டிகளைத் தனியே வைத்துப் பராமரிக்க வேண்டும். தொப்புள் கொடியை சிறிது நேரம் விட்டு நறுக்கிப் பின் உடனே அயோடின் டிஞ்சர் போன்ற தொற்று நீக்கிகளைத் தடவி விட வேண்டும்.
முதல் இரண்டு மாதங்கள் எந்த ஒரு பாதிப்புமின்றி குட்டிகளைக் கவனமாகப் பாதுகாத்தல் வேண்டும். முதல் இரண்டு வாரங்களில் கொம்பு நீக்கம் செய்தல் அவசியம்.
சரியான தடுப்பூசிகளைத் தவறாமல் தகுந்த நேரத்தில் போடுதல் வேண்டும். 8 வார காலத்தில் தாயிடமிருந்து குட்டியைப் பிரித்துத் தனியே வளர்க்கப் பழக்க வேண்டும். குட்டிகளைத் தனியே தரம் பிரித்து அதன் எடைக்கேற்ப சரியான தீவனமளித்தல் அவசியம்.
செய்யக் கூடாதவை
ஆட்டின் வாயில் ஏதேனும் காயமோ, வலியோ இருக்கும்போது தடுப்பு மருந்து அளிக்கக் கூடாது. பண்ணையில் உள்ள கால்நடைகளில் ஏதேனும் ஒன்றுக்கு வாயில் ஏதேனும் வலி இருந்தால் தடுப்பூசி (அ) தடுப்பு மருந்து அளிக்கும்போது வலி அதிகரிக்கும். இவ்வாறு வாய் பிரச்சனை உள்ள ஆடுகளைக் கவனித்து 3 வாரங்களுக்குப் பின் தடுப்பு மருந்து அளிக்கலாம்.
கால் நகங்களை வெட்டுதல்
கால் நகங்களை வெட்டும்போது நன்கு கவனித்து தேவையின்றி வளர்ந்த நகங்களை மட்டுமே நறுக்க வேண்டும். அதிகமாக வெட்டினாலும் காலில் வலி ஏற்படும். வெட்டாமல் விட்டாலும் கீழே, காலை உரசும் போது புண் (அ) ஏதேனும் கிருமித் தொற்று ஏற்படும். நோய் பரவும் வாய்ப்பும் உள்ளது.
குட்டி ஈனும்போது பிரச்சனை
சினை ஆடுகளைத் தனியே வைத்துப் பராமரிக்க வேண்டும். அதன் குட்டி ஈனும் காலத்தை தோராயமாகக் கணித்து, அதற்கேற்றவாறு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பொதுவாக குட்டி ஈனும் தருணத்தில் ரத்தம் விஷமாதல், கருக்கலைதல் (அ) குட்டி இறந்து பிறத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இவற்றைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் நலம்.
மேலும் வெள்ளாடுகள் வளர்ப்பு குறித்து விவரம் தேவைப்படுவோர் தங்களது வட்டாரத்தில் உள்ள கால்நடை மருந்தகங்களையோ, மாவட்டத்தில் உள்ள கால்நடைத் துறை உதவி இயக்குநர் அலுவலகங்களையோ
அணுகலாம்.
Source : Dinamani
No comments:
Post a Comment