Friday, 11 March 2016

ஒரு ரூபாயில் ஒரு கிலோ உரம் - மண்புழுக்கள் செய்யும் மாயம்

Image & Article courtesy :தி இந்து
மண் புழு உரம், இயற்கை வேளாண்மையின் ஒரு முக்கிய அங்கம். கால்நடைகளின் சாணம், இலை, தழை, பாசி வகைகள், கோழி எச்சம், மாட்டுச் சாணம், தென்னை நார்க் கழிவு போன்ற கழிவுகளை உண்டு மண்புழுக்கள் உரமாக வெளியேற்றுகின்றன. கழிவுப் பொருட்கள் அவற்றின் உடலில் செரித்த பிறகு, சத்து மிகுந்த கழிவாக வெளியேற்றுகிறது. இக்கழிவுடன் மண்புழுவின் உடலில் இருந்து வெளிவரும் தாவர வளர்ச்சி ஊக்கிகள், என்சைம்கள், ஹார்மோன்கள் ஆகிய திரவங்களும் வெளியேறுகின்றன. எனவே, பயிர் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் ஒருங்கே அடங்கியுள்ள சிறந்த இயற்கை உரமாக மண்புழு உரம் கருதப்படுகிறது. 

விலங்குக் கழிவுகள்
திண்டுக்கல் கால்நடை மருத்துவ ஆராய்ச்சி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டாக்டர் எஸ். பீர் முகமது மண்புழு உரம் குறித்து விளக்குகிறார்: 
உலகில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மண்புழு இனங்கள் உள்ளன. இவற்றில் உரத்துக்காகவும், இனப்பெருக்கத்துக்காகவும் பயன்படுபவை மிகச் சில. இதில் மண்ணின் மேற்பரப்பில் வாழும் புழுக்களே, மண்புழு உரம் தயாரிக்க மிகவும் ஏற்றவையாகக் கருதப்படுகின்றன. பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேடஸ், டிராவிடாலில்சி, யூடிரிலஸ்யூஜினே, அய்சினியாபிட்டிடா ஆகிய மண் புழுக்கள் அதிகம் உற்பத்தியாகக் கூடியவை.
இவற்றில், யூடிரில்லங் யூஜினே எனப்படும் ஆப்பிரிக்க நாட்டு மண்புழு பொருளாதார ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் புழு வெளியேற்றும் கழிவு அதிகமாக இருப்பதால் மண்புழு உர உற்பத்திக்கு மிகவும் ஏற்றதாகக் கருதப்படுகிறது.
மாடு, ஆடு, குதிரை, யானை, கோழி உள்ளிட்ட விலங்குக் கழிவுகள், கரும்பு, வாழை இலை, நெல், கோதுமை, தினை, ஆகாயத் தாமரை, தென்னை, மரக் கழிவுகள் உள்ளிட்ட பண்ணைக் கழிவுகள், ரசாயனம் கலக்காத ஆலைக் கழிவுகள், சுத்திகரிப்பு ஆலையில் இருந்து வரும் கழிவுகள், பேப்பர் மற்றும் பருத்தி ஆலைக் கழிவுகள், சர்க்கரை ஆலையில் இருந்து வரும் கரும்புச் சக்கைகள் உள்ளிட்ட ஆலைக் கழிவுகளில் இருந்தும் மண் புழு உரம் தயாரிக்கலாம்.
தயாரிக்கும் முறை
தோட்டங்களில் குழி வெட்டியும், தொட்டிகள் அமைத்தும் மண்புழு உரம் தயாரிக்கலாம். தொட்டிகள் அமைத்துத் தயாரிக்க 10 அடி நீளம், 7 அடி அகலம், 3 அடி உயரம் கொண்ட தொட்டிகள் அமைக்க வேண்டும். இந்தத் தொட்டிகளில் மேற்குறிப்பிட்ட கழிவுகளுடன் மாட்டுச் சாணம் கலந்து மண்ணைத் தொட்டியில் நிரப்ப வேண்டும். இதில் ரசாயனம் கலந்த பொருள்கள், கல், கண்ணாடி, பிளாஸ்டிக், பீங்கான் போன்ற பொருட்கள் இல்லாமல் கழிவுகளை அடுக்கடுக்காகப் போட வேண்டும்.
தொட்டியில் கழிவுகள் இட்டவுடன் நீர் தெளிக்க வேண்டும். ஈரப்பதம் 40 முதல் 50 சதவீதம்வரை பராமரிப்பது புழுக்களின் வளர்ச்சிக்கு நல்லது. தொட்டிகளின் மேல் பகுதி வழியாகப் பல்லிகள், பறவைகள், எலி, தவளைகள் புழுக்களைச் சாப்பிட்டுவிடாமல் இருக்கக் கம்பி வலைகள் அமைப்பது பாதுகாப்பைத் தரும்.
ஒவ்வொரு தொட்டிக்கும் குறைந்தது 2,000 புழுக்களை விட வேண்டும். ஈரப்பதம் குறையாமல் தண்ணீர் தெளித்து வரவேண்டும். இந்தப் புழுக்கள் ஒரு நாளைக்கு 5 கிலோ கழிவை எருவாக மாற்றும். 1 டன் ஈரக் கழிவுகளில் ஏறக்குறைய 300 கிலோ மண்புழு உரம் கிடைக்கும். 1 கிலோ உரம் உற்பத்தியாகச் செலவு 1 ரூபாய்தான்.
தொட்டியில் இருந்து 50 – 60 நாட்களில் மண்புழு உரம் எடுக்கலாம். எடுப்பதற்கு, சில நாட்களுக்கு முன்பு தொட்டிகளுக்குத் தண்ணீர் தெளிப்பதை நிறுத்த வேண்டும். ஈரப்பதம் இல்லாதபோது புழுக்கள் தொட்டியின் அடிப்பகுதிக்குச் சென்றுவிடும். அப்போது கழிவுகளை மேல் பகுதியில் குவித்து வைக்க வேண்டும். குவித்து வைத்த உரத்தைச் சல்லடைகளில் சலிக்க வேண்டும். 
சலிக்கும்போது உரத்தில் உள்ள குச்சி, கல் போன்ற பொருள்கள் தனியாகப் பிரிந்துவிடும். சில நேரம் முட்டை, சிறிய புழுக்கள் இருக்கலாம். அவற்றைப் பிரித்தெடுப்பதற்கும் இம்முறை உதவும். பிரித்து எடுத்த உரத்தைப் பைகளில் நிரப்பி விற்பனை செய்யலாம்.

மண்புழு உரத்தில் உள்ள சத்துகள்
மண் புழு உரத்தில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகள் இருப்பதுடன் அங்கக பொருட்கள், பயிருக்குத் தேவையான நுண்ணூட்டச் சத்துக்கள், பயிர் ஊக்கிகள் பெருமளவில் உள்ளன. மண்புழு உரம் ஈரத்தை மண்ணில் நிலைநிறுத்தும். மண் அரிப்பைத் தடுக்கும். மண்ணிலுள்ள நுண்ணுயிரிகளை அதிகரிக்கும். மண்புழுக்கள் மண்ணில் ஊடுருவிச் செல்வதால் மண்ணைத் துகள்களாக்குகின்றன. இதன் காரணமாக மண் பொலபொலவென்றாகி பயிர்களின் வேர்கள் நன்கு ஊடுருவுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. பயிர்களின் வேர்களுக்குப் போதிய காற்றோட்டம் கிடைக்கிறது.

நன்றி : தி இந்து

No comments:

Post a Comment