Saturday 16 July 2016

முடக்கத்தான் கீரை : ஆரோக்கிய உணவு

முடக்கு + அறுத்தான் என்பதே முடக்கத்தான் என மருவியது. இந்தக் கீரையை அடிக்கடி உண்பவர்களுக்கு கை, கால்கள் முடங்கிப் போவது தவிர்க்கப்படுமாம்.முடக்கத்தான் கீரை கொடி வகையைச் சேர்ந்தது. லேசான துவர்ப்புச் சுவையுடையது. கிராமங்களில் வேலி ஓரங்களில் படர்ந்து கிடக்கும். வீட்டுக்கு வீடு இந்தக் கீரையைப் பார்க்கலாம். நகர வாழ்க்கையில் கீரைகளே அரிதாகிக் கொண்டிருக்கும் சூழலில் பலருக்கும் முடக்கத்தான் கீரையைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Image & Article courtesy : Dinakaran
மூட்டுவலியைப் போக்குவதில் முடக்கத்தானின் பங்கு பற்றித்தான் பலருக்கும் தெரியும். அதற்கு மூலநோய், மலச்சிக்கல், கரப்பான், பாத வாதம் போன்றவற்றையும் குணப்படுத்தும் குணம் உண்டு. எனவே மாதம் இரண்டு முறையாவது முடக்கத்தானை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம் போடலாம்’’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் அம்பிகா சேகர். முடக்கத்தான் கீரையின் மருத்துவக் குணங்களைப் பற்றிப் பேசுவதுடன், அந்தக் கீரையை வைத்து 3 ஆரோக்கிய உணவுகளையும் செய்து காட்டியிருக்கிறார் அவர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகம், முடக்கத்தான் கீரைக்கு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டை கரைக்கும் சக்தி கொண்டிருப்பதை கண்டறிந்துள்ளார்கள். மூட்டுகளில் யூரிக் அமிலம், கொழுப்பு, புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் படிவங்கள் படிவதாலேயே மூட்டுவலி ஏற்படுகிறது. நமது மூட்டுகளில்  யூரிக் ஆசிட் எங்கு இருந்தாலும் அதைக் கரைத்து சிறுநீரகத்துக்கு எடுத்துச்சென்று விடுகிற தன்மை முடக்கத்தான் கீரைக்கு உண்டு. மூட்டுவலி உள்ளவர்கள் இதை உள்ளே உணவாக எடுத்துக் கொள்வதைப் போல வெளிப்பூச்சுக்கும் பயன்படுத்தி, நிவாரணம் பெறலாம்.

முடக்கத்தான் கீரைக்கு ஜலதோஷம் மற்றும் இருமலை விரட்டும் குணமும் உண்டு. குறிப்பாக குழந்தை களுக்கு இருமலும் சளியும் ஏற்படுகிற போது பாதுகாப்பான மருந்தாக இந்தக் கீரையைத் தரலாம். தவிர, காது வலி, மாதவிலக்கின் போதான வலி, களைப்பு, அசதி போன்றவற்றையும் இது விரட்டக்கூடியது. எக்ஸீமா என்கிற சரும நோய்க்கு முடக்கத்தான் கீரை சாற்றுடன் சுத்தமான மஞ்சளை அரைத்துத் தடவலாம். 

  • முடக்கத்தான் கீரையை நெய்யில் வதக்கி, வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் பார்வைக் கோளாறுகளை விரட்டலாம். பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் நின்று போகும் நேரத்தில் எலும்புகள் தேய்ந்து, முதுகு வலியும், மூட்டு வாதமும் வரும். சிறு வயதிலிருந்தே முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளப் பழகினால் இந்த ஆபத்திலிருந்து தப்பிக்கலாம்.
  • நீரிழிவை எதிர்த்துப் போராடுவது, புற்றுநோய்க்கான மருந்துகளில் பயன்படுவது, பால்வினை நோய்களை குணப்படுத்துவது, மனப்பதற்றத்தைக் குறைப்பது என முடக்கத்தானுக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதை வேறு வேறு ஆய்வுகள் வேறு வேறு காலகட்டங்களில் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே வருவதும் குறிப்பிடத்தக்கது.

மூட்டுவலிக்கு ஒரு மருந்தும் ஒரு சிகிச்சையும்

கைப்பிடி அளவு முடக்கத்தான் கீரையை எடுத்து இரண்டு, மூன்று முறை நன்கு அலசவும். அதில் 2 கப் தண்ணீர், 1 டேபிள்ஸ்பூன் சீரகம், சிட்டிகை பெருங்காயம் சேர்த்து 5 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்து பாதியாக வற்றியதும் அடுப்பை அணைத்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து தினமும் காலையில் குடித்து வந்தால் மூட்டு வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். 

ஒரு இரும்புக் கடாயில் சிறிது விளக்கெண்ணெய் விட்டு, அதில் முடக்கத்தான் இலையைச் சேர்த்து குறைந்த தணலில்  வதக்கவும். இலைகள் நன்கு சூடானதும் சுத்தமான காட்டன் துணியில் வைத்துக் கட்டி,  வலியுள்ள உடல் பாகங்களுக்கு ஒத்தடம் கொடுக்கலாம். அப்படி அழுத்தி ஒத்தடம் கொடுக்கும்போது, விளக்கெண்ணெய் கசிந்து வெளியே வரும் என்பதால் அழுக்கு ஆடைகளை அணிந்து கொண்டு இதைச் செய்யவும். சூடு குறைந்ததும் மறுபடி முதலில் சொன்னதுபோல மறுபடி சூடேற்றிக் கொள்ளவும். 

மலச்சிக்கலுக்கும் மருந்து 
 தீவிரமான மலச்சிக்கலால் அவதிப்படுகிற சிலருக்கு முடக்கத்தான் கீரையின் அனைத்து பாகங்களுமே மருந்தாகப் பரிந்துரைக்கப்படுவதுண்டு. அப்படி மொத்தச் செடியில் இருந்து எடுக்கப்படுகிற டிகாக்‌ஷன் மலச்சிக்கலுக்கு மட்டுமின்றி, வலி உள்ளிட்ட வயிற்றுக் கோளாறுகளுக்கும் மருந்தாகிறது. 
வலி நிவாரணி 
 முடக்கத்தான் கீரையில் இருந்து பெறப்படும் சாற்றினை வயதுக்கேற்ப தினம் 10 முதல் 30 மி.லி. வரை எடுத்துக் கொள்வதால் வலிகள் மறையுமாம். ஆண்களுக்கு ஏற்படுகிற விரைவீக்கப் பிரச்னைக்கும் முடக்கத்தான் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது. கீரையின் விழுதை வலியுள்ள இடங்களில் தடவுவதன் மூலம் தற்காலிக நிவாரணம் கிடைக்கச் செய்ய முடியும்.  

பொடுகு போக்கும்... 
முடக்கத்தான் கீரையை 6 மணி நேரத்துக்கு தண்ணீரில் ஊற வைத்து அந்தத் தண்ணீரைத் தலை குளிக்கப் பயன்படுத்தினால் கூந்தல் சுத்தமாகும். முடக்கத்தான் கீரை தைலத்தை நல்லெண்ணெயுடன் கலந்து தலைக்குத் தடவிக் குளித்தால் பொடுகும் மறையும். கூந்தலும் நன்கு வளரும். 

எப்படித் தேர்வு செய்வது?மஞ்சள் அல்லது பழுப்பு நிற இலைகள் இல்லாமல் பச்சைப் பசேலென இருக்க வேண்டும். கீரைக் கட்டைக் கையில் எடுத்துப் பார்த்தால் வாடி வதங்கி இருக்கக்கூடாது. ரொம்பவும் இளசான கீரை என்றால் அதைத் தண்டுடனேயே சேர்த்து சமைக்கலாம். கீரையை வாங்கியதும் ஒரு பேப்பரில் சுற்றி, ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

எப்படிச் சமைப்பது? 

கீரையை கட்டுடன் நிறைய தண்ணீர் வைத்து இரண்டு, மூன்று முறை அலசி, ஈரம் போக பரப்பி வைக்க வேண்டும். எல்லாக் கீரைகளையுமே இப்படி சமைப்பதற்கு முன்புதான் அலச வேண்டும். ரொம்பவும் முன்கூட்டியே அலசினால் அந்த ஈரப்பதம் கீரையை வீணாக்கிவிடும். 

தோசையாகச் செய்வதானால் கீரையையும், இளசான தண்டையும் சிறிது தண்ணீர்விட்டு கெட்டியாக அரைத்து மாவுடன் சேர்க்கலாம். ரசம் அல்லது சூப்பில் சேர்ப்பதானால் கீரையை மட்டும் கிள்ளி, லேசாக வதக்கிச் சேர்க்கலாம்.

வாசனைக்காக சேர்ப்பதானால் கொத்தமல்லி மாதிரி மெலிதான தண்டுடன் கீரையை அப்படியே சேர்க்கலாம். பாஸ்தா, பீட்சா போன்றவற்றில் இந்தக் கீரையைப் பொடியாக நறுக்கி, மேலே தூவிக் கொடுக்கலாம்.

தெரியுமா?


முடக்கத்தான் கீரையுடன்  ஆங்காங்கே குட்டிக்குட்டி பலூன் போன்ற பைகள் தொங்கும். காற்றடைத்த பைகள்  போன்ற அவற்றினுள் முடக்கத்தான் விதைகள் இருக்கும். அந்த விதைகளை உற்றுப்  பார்த்தால், அவற்றில் இதய வடிவம் பொறிக்கப்பட்டது போல இருக்கும்.

முடக்கத்தான் கீரை தோசை
என்னென்ன தேவை?


தோசை மாவு - 1 கப், முடக்கத்தான் கீரை - 2 கைப்பிடி, பூண்டு - 5 பற்கள், மிளகு - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - சிறிது.

எப்படிச் செய்வது?


கீரை, பூண்டு, மிளகு, சீரகத்தை எண்ணெயில் தனியாக வதக்கி, அரைத்துக் கொள்ளவும். தோசை மாவில் அரைத்த விழுதைக் கலந்து தோசைகளாக வார்க்கவும்.

மூட்டுவலி போக்கும் முக்கியமான கீரை!


சிறுநீரகங்களில் சிறுநீர் நிரம்பி இருந்தாலும், நாம் சரியான இடத்துக்காகவும் நேரத்துக்காகவும் அடக்கி வைக்கிறோம். இந்த நிலை பெண்களுக்கு, 10 வயது முதலும், ஆண்களுக்கு, 18 வயது முதலும் ஆரம்பிக்கும். இந்த நேரங்களில் நமது சிறுநீரகங்கள் சிறுநீரை வெளியேற்ற இயலாமல் தவிக்கிறது. அப்போது மூளையிலிருந்து செல்லும் உத்தரவு மூலமாக தற்காலிகமாக, சிறுநீரகம் தன் வேலையை நிறுத்தி வைக்கிறது. இதனால் நம் உடலில் ஓடும் ரத்தம், சிறுநீரை வெளியேற்றாமல் அப்படியே எல்லா இடங்களுக்கும் செல்கிறது.

அவ்வாறு செல்லும்போது, ரத்தத்தில் உள்ள யூரிக் ஆசிட் கிரிஸ்டல்ஸ் (Uric acid crystals) மூட்டுகளில் படிந்து விடுகிறது. இந்த சிறு சிறு கற்கள், சினோரியல் மெம்கிரேம்   எனும் இடத்தில் உட்கார்ந்து விடுகிறது. இது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறுகிறது. சிலருக்கு, 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். இதுதான் ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின் (Rheumatoid Arthritis) ஆரம்ப நிலை.

முடக்கத்தானிலுள்ள தாலைட்ஸ், ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை, இந்திய ஆராய்ச்சியாளர் குழுவினரும், ஆஸ்திரேலிய பல்கலை ஆராய்ச்சியாளர்களும் இணைந்து கண்டுபிடித்தனர். இதன் சிறப்புக் குணம், நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து, சிறுநீரகத்துக்கு எடுத்துச்சென்று விடும். இதுபோல எடுத்துச்சென்று, சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை நம் உடலில் விட்டு செல்கிறது. இது மிக முக்கியமான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு சோர்வு ஏற்படுவதில்லை.

முடக்கத்தான்கீரை துவையல்

என்னென்ன தேவை?


முடக்கத்தான் கீரை - 2 கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 3, இஞ்சி - 1 துண்டு, உளுந்து - 1 டேபிள்ஸ்பூன், புளி - சிறிதளவு, பெருங்காயம் - சிறிது, உப்பு- தேவைக்கேற்ப, எண்ணெய் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?


கடாயில் எண்ணெய் வைத்து உளுந்து, மிளகாய், இஞ்சி,  பிறகு கீரை, பெருங்காயம் எல்லாவற்றையும் ஒன்றன் பின் ஒன்றாக வதக்கி, ஆறியதும் புளி, உப்பு வைத்து அரைக்கவும்.

முடக்கத்தான் கீரை ரசம்

என்னென்ன தேவை?


வேக வைத்த  துவரம் பருப்பு (வெந்த தண்ணீருடன்) - 1 கப், முடக்கத்தான் கீரை - 2 கைப்பிடி அளவு, நசுக்கிய பூண்டு - 2 பல், சாம்பார் வெங்காயம் - 4, தக்காளி - 1, பொடித்த மிளகு, சீரகம் - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், உப்பு-தேவைக்கு.

தாளிக்க... எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம்.

எப்படிச் செய்வது?


கடாயில் எண்ணெய் வைத்து தாளிப்புப் பொருட்களைச் சேர்க்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், வேக வைத்து மசித்த பருப்பு மற்றும் தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும். கடைசியாக பொடியாக நறுக்கிய முடக்கத்தான் கீரை சேர்த்து இறக்கவும்.

தகவல் மற்றும் படம் : தினகரன்

No comments:

Post a Comment