Thursday, 28 July 2016

மானாவாரி சோளம் சாகுபடி நெல்லைவிட கூடுதல் லாபம்

தேனி மாவட்டத்தில் காய்கறிகள் சாகுபடி செய்து வரும் விவசாயிகள் பலர், ஆறுகள், குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டிருக்கும் காலத்தில், விளைநிலங்களைத் தரிசாகப் போட மனம் இல்லாமல் கம்பு, சோளம், நிலக்கடலை, கப்பைக்கிழங்கு என மானாவாரி சாகுபடிக்கு மாறிவிடுகின்றனர். தனது தோட்டத்துக் கிணற்றில் தண்ணீர் வற்றாத நிலையிலும் திருந்திய நெல் சாகுபடியைத் துறந்துவிட்டு, 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் அமோகமாகச் சோளம் சாகுபடி செய்து வருகிறார், போடி அருகிலிருக்கும் பி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த விவசாயி ஆர். மணிமுத்து. இது குறித்து அவர் பகிர்ந்துகொண்டது: 

எளிய சாகுபடி முறை
“கம்பெனி சோளத்தில் அம்மன், 1-ம் நம்பர், நம்பர் 51, நம்பர் 251, லெட்சுமி, அமர்நாத் 2000 உள்ளிட்ட 10 ரகங்கள் உள்ளன. இதில் அமர்நாத் 2000 என்று அழைக்கப்படும் ரகத்தை வேளாண் துறையினர் பரிந்துரை செய்தனர். அதை ஏற்று சாகுபடி செய்தேன். நல்ல மகசூலும் லாபமும் கிடைத்தது. 12 ஆண்டுகளுக்கு முன்பு திருந்திய நெல் சாகுபடி செய்தேன். அதைவிட சோளம் சாகுபடியில் லாபம் கிடைப்பதால், தொடர்ந்து சாகுபடி செய்துவருகிறேன். 

ஒரு ஏக்கரில் அமர்நாத் 2000 ரகம் சாகுபடி செய்ய விதைச்சோளம் 8 கிலோ முதல் 9 கிலோவரை தேவைப்படும். ஒரு கிலோ விதைச்சோளம் ரூபாய் 230. இதில் தரமான விதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். மேலும் கூலி, உழவு, உரம் என அதிகபட்சமாக ரூ.18 ஆயிரம்வரை செலவு ஏற்படும். பொதுவாகச் சோளத்தை உவர்ப்பு மண் தவிர, மற்ற எந்த மண்ணில் சாகுபடி செய்தாலும் மகசூல் கிடைக்கும். கிணறு, ஆழ்துளைக் கிணறுகளில் குறைவான தண்ணீர் வசதி இருந்தால்கூடப் போதும். ஆண்டுதோறும் எந்த மாதத்திலும் இதைச் சாகுபடி செய்யலாம். மழையை மட்டும் நம்பிச் செய்யும் மானாவாரி சாகுபடிக்குப் புரட்டாசி மாதத்திலும், நீர்நிலைகளை நம்பிச் சாகுபடி செய்வதற்கு மாசி மாதம் 5-ம் தேதியிலிருந்து 10-ம் தேதிவரை சிறந்தது. இந்த நேரத்தில் சாகுபடியைத் தொடங்கினால் பச்சாலை பூச்சி, சாறுஉறிஞ்சும் பூச்சிகளின் நோய் தாக்குதலின்றி நல்ல மகசூல் கிடைக்கும். 

மாட்டுத் தீவனம்
இயற்கை உரம் இட்டால் நல்ல மகசூல் கிடைப்பதோடு, மண்வளமும் பாதுகாக்கப்படும். நல்ல தண்ணீர், சப்பை தண்ணீர் என எந்தத் தண்ணீரும் பாய்ச்சலாம். விதை நடவு செய்த எட்டு நாட்கள் கழித்து, ஒரு முறை தண்ணீர் பாய்ச்சலாம். அதன்பின்னர் 25 நாட்கள் கழித்துத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். சோகை வளர்ந்த பின்னர் மீண்டும் எட்டு முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 100 நாட்கள் அல்லது 110 நாட்களில் கருது (சோளக்கதிர்) விளைந்துவிடும். அதை அறுவடை செய்யத் தொடங்கலாம். ஒரு ஏக்கருக்கு 23 குவிண்டால் முதல் 25 குவிண்டால்வரை விளைச்சல் இருக்கும். தற்போது சந்தையில் ஒரு குவிண்டால் (100 கிலோ) ரூபாய் 1,450 முதல் ரூபாய் 1,500 வரை விலைபோகிறது. 

சோளத் தட்டை மாட்டுக்குத் தீவனமாகிறது. கால்நடை வளர்க்கும் விவசாயிகள், இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லாவிட்டால் சந்தையில் விற்பனை செய்துவிடலாம். கால்நடைகளின் தீவனத் தேவைக்காகத் தூத்துக்குடி மாவட்ட வியாபாரிகள், இங்கே வந்து சொந்தச் செலவில் சோளத்தட்டைகளை அறுத்துக்கொண்டு செல்கின்றனர். இதனால் விவசாயிக்குக் கூலி ஆட்கள் செலவும் குறைகிறது. 

பலத்த காற்றில் பாதுகாக்க
சோளத்தட்டைகள் ஆறு அடிவரை உயரமாக வளரக்கூடியவை. கதிர் முற்றிய நிலையில் அறுவடைக்குத் தயாராக இருக்கும்போது, காற்று பலமாக வீசினால் அவை தரையில் சாய்ந்துவிடும். இதனால் கதிர்கள் சேதமடைந்து, நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க விதை நடவு செய்த பின்னர், நாற்றங்கால் பாவி நட்டால் சோளத்தட்டை அரை அடி உயரம் குறைவாக, அதாவது ஐந்தரை அடிவரை மட்டுமே வளரும். இதனால் பலமாகக் காற்று வீசும்போது சேதமடைவது குறைவாக இருக்கும். கூடுதல் வருவாயும் கிடைக்கும். எப்படிப் பார்த்தாலும் குறுகிய கால சாகுபடியில் செலவு போக ரூ. 20 ஆயிரம்வரை லாபம் கிடைக்கும்.” 

விவசாயி ஆர். மணிமுத்து தொடர்புக்கு: 97916 56045 

நன்றி : தி இந்து 

No comments:

Post a Comment