Friday, 15 July 2016

திராட்சையில் 120 புதிய ரகங்கள் : ஆராய்ச்சி நிலையம் அறிமுகம்

உத்தமபாளையம்: தமிழகத்தில் திராட்சை விவசாயத்தில் முதலிடத்தில் உள்ள தேனியில் திராட்சை ஆராய்ச்சி நிலையம் 120 புதிய ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்திலேயே பன்னீர் திராட்சை எல்லா காலங்களிலும் விளையக்கூடிய சீதோஷ்னநிலையை தேனி மாவட்டம் கொண்டுள்ளது. தமிழகத்தில் கோவை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி மாவட்டங்களில்தான் திராட்சை விவசாயம் செய்யப்படுகிறது. மொத்தம் 2,800 ஹெக்டேர் விவசாயம் நடக்கிறது. தேனியில் மட்டும் 2,300 ஹெக்டேரில் திராட்சை விவசாயம் செய்யப்படுகிறது.

Image courtesy : tamil.thehindu.com
 தேனியில் கம்பம், காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, கூடலூர், அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், ஓடைப்பட்டி, சின்னமனூர், வெள்ளையம்மாள்புரம், நாராயணதேவன்பட்டி, கோகிலாபுரம் திராட்சை விவசாயத்தில் முன்னணியில் உள்ளன. திராட்சை விவசாயத்தில் ஒரு வருடத்தில் 3 முறை அறுவடை செய்யக்கூடிய பருவம் இந்தியாவிலேயே இங்குதான் நிலவுகிறது. திட்டமிடாத விவசாயம், அதிகமான உரங்கள், பாரம்பரிய விவசாயமுறை போன்றவற்றால் திராட்சை விவசாயம் 2000-2004ம் ஆண்டுகளில் பின்னடைவை நோக்கி சென்றது.

பன்னீர் திராட்சை விவசாயம் செய்த விவசாயிகள் வாழை, காய்கறி, பந்தல்கொடி விவசாயத்திற்கு மாறினர். திராட்சை விவசாயத்தை காப்பாற்றவும், உயரிய ரகங்களை பயிரிடவும் திராட்சை ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரி்ககை வைத்தனர். இதையடுத்து தேசிய விவசாய மேம்பாட்டுதிட்டத்தின்படி ரூ.3 கோடியில் திராட்சை ஆராய்ச்சி நிலையம் அமைக்க நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. தமிழக அரசும் இதற்கான முயற்சியில் தீவிரமாக களம் இறங்கியது. 2014ம் வருடம் முதல் புதிய கட்டிடத்தில் ஆராய்ச்சி நிலையம் செயல்படுகிறது. திராட்சை விவசாயத்தை காப்பாற்றவும், திராட்சை உற்பத்தியை பெருக்கவும் தேவையான நடவடிக்கையில் களம் இறங்கி உள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலத்தில் இருந்து வாங்கப்பட்ட புதிய ரகங்கள் தற்போது தயார்நிலையில் உள்ளன.

பொதுமக்கள் சாப்பிடும் ரகங்களில் பன்னீர் திராட்சை, தாம்சன், சரத், கிருஷ்ணா, நானாபாப்பு, கிரிம்சன், ப்ளேம், பேண்டசி உள்ளிட்ட 54 ரகங்களும், பழரசங்கள் தயாரிக்க கூடிய ரகங்களான மெடிக்கா, பெங்களூர்புளு, சண்ட்ரிபெங்களுர், ரூபிகட், அத்காசித்ரா உள்ளிட்ட 21 ரகங்கள், கிஸ்மிஸ் தயாரிக்க தேவையான ரகங்களான தாம்சன் சீட்லஸ், கே.ஆர்.ஒயிட், ரோசாபிஸ் ஒயிட், 2ஏபிளாக், பிளாக்மொனுக்கா, கிஸ்மிஸ்ஜெர்னி உள்ளிட்ட 17 ரகங்களும், ஒயின் தயாரிப்பில் மிக முக்கியமான சேபர்நைட், சபூக்னாம், சிராஜூ, கேபர்நெட்டிலவ், ஜின்பெண்டால், உள்ளிட்ட 28 ரகங்களும் தற்போது தயார்நிலையில் உள்ளன.

இவற்றை இங்குள்ள மாதிரி திடலில் ஒட்டிக்கட்டி ஆராய்ச்சிநிலைய அதிகாரிகள் தயார் நிலையில் வைத்துள்ளனர். கம்பம் பள்ளதாக்கில் செய்யப்படும் திராட்சை விவசாயம் வருடத்திற்கு மூன்றுமுறை என உள்ளதை இரண்டு முறையாக மாற்றினால் ஏற்றுமதி தரம் வாய்ந்த திராட்சையை விவசாயிகளாக உருவாகலாம். இந்தியாவில் மகாராஷ்டிராவில் செய்யப்படும் திராட்சையை அண்டை நாடுகள் போட்டிபோட்டு வாங்கி செல்கின்றன.

 சவூதிஅரேபியா, கத்தார், துபாய் உள்ளிட்ட நாடுகளில் இந்தியாவில் விளையக்கூடிய திராட்சை பழங்களுக்கு கிராக்கி அதிகம். இதேபோல் பிரியாணியை மணம் ஊட்டி சுவைக்கதூண்டும் கிஸ்மிஸ் பழங்களும் மகாராஷ்டிராவில் இருந்து அனுப்பப்படுகிறது. இதனை தேனி மாவட்டத்தில் இருந்தும் அனுப்பிட தேவையான முயற்சிகளில் ஆராய்ச்சிநிலைய அதிகாரிகள் களம் இறங்கி உள்ளனர். இதற்கு விவசாயிகள் முழுஅளவில் ஒத்துழைப்பு கொடுக்கும்போது திராட்சை விவசாயம் ஏற்றுமதி விவசாயமாக மாறக்கூடிய வாய்ப்புகளை தரும்.

 இதுகுறித்து திராட்சை ஆராய்ச்சிநிலைய முதல்வர் டாக்டர் பார்த்திபன் கூறுகையில், ‘ஏற்றுமதிதரம் வாய்ந்த திராட்சையை நாம் உற்பத்தி செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். 500 ரகங்களுக்கு மேல் திராட்சை உள்ளன. இதில் 120 ரகங்கள் ஆனைமலையன்பட்டி ஆராய்ச்சிநிலைய பந்தலில் விதைக்கப்பட்டுள்ளன. இதனை 2017 ஜூன் மாதம் அறுவடை செய்யலாம். குறிப்பாக ரெட்குளோப், மெடிக்கா, ஏ18-3, போன்ற ரகங்கள் குறிப்பிடத்தக்கவை. நானாசாகேப்பர்பிள் என்ற விதையில்லா திராட்சையை ஜூன் மாதம் அறுவடை செய்வதுபோல் பயிரிட்டால் பெரியஅளவில் லாபம் கிடைக்கும். திராட்சையை ஊக்குவிக்க தொடங்கப்பட்டுள்ள ஆராய்ச்சிநிலையத்தை விவசாயிகள் தொடர்புகொள்ளலாம்’ என்றார்.

நன்றி : தினகரன்

No comments:

Post a Comment