Image Courtesy : Indiamart |
இவற்றைப் போல, விளை பொருட்களை உலர வைக்கும் சூரிய உலர் களத்தை, வேளாண் பொறியியல் துறை மூலம், மானிய உதவியுடன் அமைக்கலாம்.விவசாயிகள், தங்களின் நிலங்களில் கூடுதலாக விளையும், தேங்காய், மாங்காய் மற்றும் காய்கறிகளை மதிப்பு கூட்டி, நல்ல விலைக்கு விற்பதற்கு, இந்த சூரிய உலர் களம் பயன்படும். இத்திட்டத்தில், 5 ஏக்கர் மற்றும் அதற்கு மேல், தென்னை மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்யும் விவசாயிகள் இணைந்தால், மானிய உதவியுடன் கூடிய வங்கிக் கடனைப் பெற்று, தங்களின் வருமானத்தை, ஐந்து மடங்காக உயர்த்த முடியும்.
திறந்த வெளியில் தார்ப்பாய் அல்லது சாக்குகளை விரித்து, விளை பொருட்களை காய வைக்கும் போது, சூரிய வெப்பம் சீராக கிடைக்காத நிலையில், அவை காய்வதில் தாமதம் ஏற்படும். ஆனால், சூரிய ஒளி உலர் களத்தின் தட்டுகள், சுத்தமான சூழலில், வெப்பத்தை வெளியேற்றும். விசிறிகளை பொருத்தவும் வசதியுள்ளதால், விளைபொருட்களை தரமாக மதிப்பு கூட்டலாம்.
மிளகாய் வற்றல், காய்கறி வற்றல் தயாரிக்க, மீன்களைக் கருவாடாக மாற்ற, மருந்தாகப் பயன்படும் துளசி, கடுக்காய், ஜாதிக்காய் மற்றும் கறிவேப்பிலை, முருங்கைக் கீரை, முருங்கை விதைகளை காய வைக்க, இது உதவும். தேங்காய் கொப்பரைகளை இதில் காய வைத்தால், கூடுதலாகவும், சுத்தமாகவும் எண்ணெய் கிடைக்கும்.
சிறிய அளவில், அதாவது, 'ட்ரே, ட்ராலி' இல்லாமல், 410 சதுரடியில் அமைக்க, 3.26 லட்சம் ரூபாய் தேவைப்படும்; இதில் மானியமாக, 1.62 லட்சம் தரப்படும். இதுவே, 620 சதுரடிக்கு, 4.89 லட்சமும், 800 சதுரடிக்கு, 5.94 லட்சமும் தேவைப் படும்; இதில் முறையே, 2.45 லட்சமும், 2.97 லட்சமும் மானியம் கிடைக்கும். இதையே, ட்ரே, ட்ராலியுடன் அமைக்க, 410 சதுரடிக்கு, 4.85 லட்சம்; 620 சதுரடி, 7.28 லட்சம்; 800 சதுரடிக்கு, 9.13 லட்சம் ரூபாய் செலவாகும்.
மானியத்துடன், சூரிய உலர் களத்தை அமைக்க விரும்பும் விவசாயிகள், உரிய ஆவணங்களுடன் வேளாண் பொறியியல் அலுவலகத்தை அணுகலாம். நுண்ணீர் பாசனம், இயற்கை இடுபொருட்கள், ஒருங்கிணைந்த உர நிர்வாகம், களை நிர்வாகம், ஊடுபயிர் சாகுபடி, வேலிப்பயிர், வரப்புப் பயிர் போன்ற உத்திகளைக் கடைப்பிடித்தால், விவசாயிகள், கூடுதல் லாபத்தை அடையலாம்.
தொடர்புக்கு: 98420 07125.
நன்றி : தினமலர் (10 Feb 19)
No comments:
Post a Comment