Sunday, 7 May 2017

முருங்கையில் பூ உயிரியியல் மற்றும் வீரிய ஒட்டுத்தன்மை

முருங்கையில் பூ உயிரியியல் மற்றும் வீரிய ஒட்டுத்தன்மை


பூ உயிரியியல்
முருங்கை பூக்கள் வெள்ளை நிறத்தில் மணமுடையதாகவும் பூக்காம்புகள் நீளமாகவும் படர்ந்தும் காணப்படும். பூவிலைக் காம்புகள் ஐந்து இருக்கும். அவை மடங்கியும் கூர்மையுடையதாகவும் வெளிப்புறத்தில் குழல் போன்று வளைந்து காணப்படும். பூ மடல்கள் ஐந்து காணப்படும் அவை தனியே குறுகி மடல் போன்று காணப்படும். மகரந்ததாள் மஞ்சள் நிறத்தில் ஐந்து காணப்படும். மகரந்தக்காம்புகள் நீண்டு காணப்படும். கருவறைகள் மூன்று காணப்படும். காய்கள் 30 முதல் 120 செ.மீ நீளமுடையதாகும். முக்கோண வடிவில் நீண்டு 13 முதல் 22 விதைகள் உடையதாக காணப்படும்.

Image courtesy : Wikipedia
பூ மலருதல்
முருங்கையில் அதிகாலை 4.30 முதல் 6.30 வரை பூக்கள் மலரும். மிக முக்கியமாக 5.30 மணிக்கு அதிகப்படியான வளர்ச்சி இருக்கும். பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டதில் பூ மலரும் நேரம் அதிகாலை 5.00 மணி முதல் 9.00 மணி வரை என்றும், 27.3o செ - 29.3o செ. மற்றும் காற்றின் ஈரப்பதம் 68 முதல் 78 சதவீதம் பூ மலர்ச்சிக்கு பெரிதும் துணை செய்கிறது என்றும் கண்டறிந்துள்ளனர். மகரந்தத் தாளில் மிகவும் நீளமான மகரந்தத்தாள் முதலில் மலர்கிறது. மகரந்தத்தூள் முதிர்ச்சியடைந்த நிலையில் பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். மலர்ந்த நிலையில் மகரந்ததூள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். ஒரு மகரந்ததூளில் சுமார் 7,400 மகரந்ததூள்கள் இருக்கும்.

சூல்முடிபூ மலர்வதற்கு ஒருநாள் முன்பும் பின்னர் மலர்ந்த நாள் அன்றும் ஏற்புத்தன்மை உடையதாய் இருக்கும். அதனால் அயல்மகரந்தச்சேர்க்கை தேனீக்கள் மற்றும் ஈக்களினால் நடைபெறுகிறது. சுமார் 72 சதவீதம் மகரந்தம் உயிருடன் இருக்கும். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 28 ஆகும்.

மகரந்தச்சேர்க்கை
முருங்கையில் பெரும்பாலும் அயல்மகரந்தச்சேர்க்கையே நடைபெறுகிறது. ஈக்கள், பூச்சிகள், கொசு அயல் மகரந்தச்சேர்க்கைக்கு பெரிதும் துணைபுரிகின்றன. பூ மலர்வதற்கு முதல் நாள் பூவிலுள்ள மகரந்தத் தாளினை நீக்கம் செய்ய வேண்டும். பின்னர் மறுநாள் காலையில் 11 மணிக்கு முன்னர் ஆண் மரத்திலிருந்து மகரந்தத்தை சேகரித்து, மகரந்தத்தாள் நீக்கின பெண் தாவரத்தின் பூவில் மகரந்தச்சேர்க்கை செய்யவேண்டும். பின்னர் பை கொண்டு மகரந்தச் சேர்க்கை நடைபெற்ற மலரினை மூடிவிட வேண்டும். 4-5 நாட்கள் கழித்து பூவிலிருந்து பிஞ்சு வெளிவந்தவுடன் பையினை நீக்கி அட்டையினால் அடையாளம் இட வேண்டும். மேற்கூறிய முறையில் அதிக எண்ணிக்கையில் வீரிய ஒட்டு காய்களை உருவாக்கலாம்.

பொதுவாக முருங்கையில் ஜனவரி முதல் ஏப்ரல் மாதத்தில் பூக்கள் தோன்றும் அதிகப்படியான பூக்கள் பிப்ரவரி மாதத்தில் தோன்றும். பூக்கள் வெண்மை நிறத்தில் இருக்கும். பூவிதழ்கள் ஒரே மாதிரியான உயரத்தில் இருக்கும். பூவிலிருந்து ஒரு வித வாசனை உண்டாகும். காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை பூக்கள் மலரும் அதன் பின்னர் மகரந்தத்தாள் வெடிக்கும் மற்றும் தேன் சுரப்பது ஆரம்பிக்கும் வெடித்த மகரந்தத்தாளிலிருந்து கொத்து கொத்தாக மகரந்தத்தூள்கள் வெளியேறும் இவை பூச்சிகளினால் கவரப்பட்டு மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது. பூச்சிகளில் சைலோகோப்பா என்கின்ற பூச்சியின் கால்களில் மகரந்தத் தூள் அதிகளவில் ஒட்டிக்கொண்டு மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது. இவை தவிர தட்டுப்பூச்சி ஒரு வித எறும்புகள் மற்றும் லெப்பிடாப்டிரா வகையை சார்ந்த பூச்சிகளும் மகரந்தச்சேர்க்கைக்கு பெரிதும் உதவுகின்றன. சூல்முடி பூ மலரும் தருணத்தில் மகரந்ததாள் உயரத்திலேயே இருக்கும் அதனால் பின்னர் சிறிது சிறிதாக வளர்ந்து மகரந்ததாளை விட அதிக உயரத்தில் காணப்படும். பூ விரிந்து ஒரு சில மணி நேரங்களிலேயே இவ்வளர்ச்சி காணப்படுவதால் மகரந்தச்சேர்க்கைக்கு அந்நிய காரணிகளில் தேவை முருங்கை மரத்திற்கு காணப்படுகிறது.

முருங்கையில் பூ உயிரியல் பற்றிய ஆராய்ச்சி
கால்டாஸ் (2000) என்ற அறிஞர் முருங்கையில் மகரந்தச்சேர்க்கைக்கும் அதன் மூலம் காய் உற்பத்திக்கும் வெளிப்புற காரணிகளான பூச்சிகள் மற்றும் காற்று போன்றவை மிக அவசியம் என்று கண்டறிந்துள்ளார்.

விசாகப்பட்டினத்தில் முருங்கையில் இரண்டு பருவங்களில் பூ மலர்ச்சி உண்டாகிறது என்று ஜோதி மற்றும் குழுவினர் (1990) கண்டறிந்துள்ளனர். அவை முறையே பிப்ரவரி முதல் மே மாதம் முடிய மற்றும் செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் முடிய என்றும் கார்பெண்டர் ஈக்கள் மகரந்தச்சேர்க்கைக்கு பெரிதும் உதவி செய்கின்றன என்றும் கண்டறிந்துள்ளனர்.

பாபு மற்றும் ராஜன் என்பவர்கள் (1996) முருங்கை மரத்தில் பூக்கும் பருவம் மகரந்தத்தின் தன்மைகள் பற்றி ஆகஸ்ட் 1995 முதல் ஜனவரி 1996 வரை ஆராய்ச்சி செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதன்படி முருங்கை மரம் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை முதலில் பூக்கிறது பின்னர் டிசம்பர் முதல் ஜனவரி வரை பூக்கிறது.பூக்களில் மகரந்தத்தூள்கள் முதலில் முதிர்ச்சியடைகின்றன, பின்னர் பூ மலர்ச்சி சூல்முடி முதிர்ச்சி நடைபெறுகிறது. பூக்கள் 14.30 முதல் 9.00 மணி முடிய மலர்கின்றன. ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதம் வரை பூக்கும் பூக்களில் மகரந்தத்தாள் அதிகம் வெடிப்பதில்லை ஏனெனில் குளிர் அதிகம் நிலவுவதால் மகரந்தத்தாளில் ஈரத்தன்மை காணப்படுகிறது. இதனால் மகரந்தச்சேர்க்கைக்கு பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஆனால் கருப்பு எறும்புகள் மற்றும் வண்டுகள் மகரந்தச்சேர்க்கைக்கு உதவி செய்கின்றன என்றும் கண்டறிந்துள்ளார்.


தமிழ்நாடு வேளாண் பல்கலை கழக வெளியீடான Moringa book - Tamil லிருந்து மறு உருவாக்கம் செய்யப்பட்டது. 

No comments:

Post a Comment