தொழிற்சாலைகளில் முருங்கையின் பயன்பாடுகள்.
மொருங்கேசியே குடும்பத்தைச் சார்ந்த மொரிங்கா ஒலிஃபெரா எனும் தாவரவியல் பெயர் கொண்ட முருங்கை, ஒரு மென்தண்டுகளுடைய அழகான தாவரமாகும். இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இப்பயிர் வட இந்தியாவில் இமயமலையை சார்ந்த பகுதிகளும், உலகளவில் வெப்பமண்டல மற்றும் மித வெப்பமண்டலப் பகுதிகளில் வளர்கின்றது. இதன் சத்து நிறைந்த கீரைக்காகவும் மென்மையான காய்களுக்காகவும் இந்திய துணைக்கண்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பயிரடப்படுகின்றது. இதன் மணம் நிறைந்த காய்கள் மிகப்பிரபலமானவை. தென்னிந்தியாவில் இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட வீடுகளில் வீட்டுத் தோட்டப்பயிராக இது வளர்க்கப்படுகிறது. வேளாண்மை, மருத்துவம் மற்றும் தொழிற்சாலைப் பயன்பாடுகளால், முருங்கை தொன்மை வாய்ந்த இலக்கிய குறிப்புகளிலும் இடம் பெற்றுள்ளது. (இராஜாங்கம் மற்றும் குழு, 2001).
Image courtesy : Wikipedia |
முருங்கை எண்ணைய்
முருங்கையில் தோல் நீக்கப்பட்ட விதையில் 42 சதம் எண்ணைய் இருக்கிறது. எண்ணைய் தெளிவான மஞ்சள் நிறமுடையது. இந்த எண்ணைய் மிகவும் நுட்பமான கடிகாரம் போன்ற இயந்திரங்களுக்குப் பயன்படுத்தப்படும் இசைவு எண்ணையாகச் செயல்படுகிறது. முருங்கை எண்ணைய் மிகக் குறைந்த அளவே வழவழப்புடையதாக இருப்பதால் எளிதில் கெட்டுப் போவதில்லை. (பெராரோ மற்றும் பெராரோ, 1990, இராமசந்திரன் மற்றும் குழு, 1980). முருங்கை எண்ணெய் சமையலுக்கும் பயன்படுத்தப்படுகின்றது. எளிதில் ஆவியாகக் கூடிய வேதிப் பொருட்களை உறிஞ்சி, அதிக நேரம் தக்க வைத்துக் கொள்ளும் குணமுடையதால், முருங்கை எண்ணெய் 'சென்ட்' எனப்படும் வாசனை திரவியங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றது. முருங்கை எண்ணையில் 0.5 முதல் 3.0 சதம் வரை எளிய கொழுப்பு அமிலம் உள்ளது. முருங்கை விதை எண்ணையில் 13 சதம் நிறைவடைந்த கொழுப்பு அமிலமும் 82 சதம் நிறைவில்லாக் கொழுப்பு அமிலமும் உள்ளன. இது அதிகபட்சமாக 70 சதம் ஒலியிக் அமிலம் கொண்டுள்ளது. ஆனால் பிற காய்கறி எண்ணையில் 40 சதம் மட்டுமே ஒலியிக் அமிலம் இருக்கிறது.
நீரைத் தூய்மைப்படுத்துதல்.
முருங்கை விதையில் 30-42 சதம் வரை எண்ணைய் உள்ளது. இதன் புண்ணாக்கு புரதச் சத்து நிறைந்தது ஆகும். இந்தப் புரதத்தில் சுமார் 1 சதவீதம் 7-17 கி டால்டன் மூலக்கூறு எடை கொண்ட நேர்மின் திறனுடைய பாலி எலக்ட்ரோலைட்டுகள் ஆகும். இந்த நேர்மின் திறனுடைய பாலி எலக்ட்ரோலைட்டுகள் மண் துகள்கள் மற்றும் அசுத்தம் நிறைந்த நீரில் உள்ள எதிர் மின் சுமையுடைய கூழ்மத்துகள்களை உறிஞ்சுவதால் தண்ணீரைத் தூய்மைப்படுத்துகின்றன. எனவே முருங்கைப்புரதத்தினை குடிநீரைச் சுத்தப்படுத்தவும், எண்ணைய் பொருட்களைத் தூய்மைப்படுத்தவும், குளிர்பானங்களில் உள்ள நார்ப்பொருட்களைப் பிரித்தெடுக்கவும் ஒரு சிறந்த பக்க விளைவில்லாத இயற்கை பிரிப்பானாகப் பயன்படுத்தலாம். ஆனால் அலுமினா போன்ற செயற்கைப் பிரிப்பான்கள் விஷத்தன்மை வாய்ந்தவை. மேலும் இது போன்ற செயற்கை பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முறையான பயிற்சியும் அதிக செலவும் தேவைப்படுகின்றது.
சீனாவில் பல்லாண்டுகளாக முருங்கைப் புரதப்பொருட்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின்போது, இக்குறிப்புகள் பல்வேறு நாடுகளிலும் பரவின, எகிப்திலும் சூடான் நாட்டிலும் குடிநீராகப் பயன்படுத்தப்பட்ட நைல் நதி நீரைத் தூய்மைப்படுத்தி முருங்கைப் புரதம் பயன்படுத்தப்பட்டது.
முருங்கை விதையில் தோலுறித்தபின், கொட்டைகளைப் பொடியாக்கி, இந்தப் பொடியை அசுத்தமான நீரில் சேகரித்து, 5 நிமிடம் வரை நன்றாகக் கலக்க வேண்டும். பின்பு அரை மணி நேரம் கழித்து, சுத்தமான துணியில் வடிகட்டினால் தூய்மையான நீர் கிடைக்கும். மாற்றுவழியாக, ஒரு துணியில் முருங்கைவிதைப் பொடியைக் கட்டி, அதனை தூய்மைப்படுத்தப்பட வேண்டிய நீரில் இரவு முழுவதும் ஊறவிடவேண்டும். பின்பு பொடி கொண்ட துணியை நீக்கிவிட்டு, நீரை வடிகட்டினால் தூய்மையான நீரைப்பெறலாம். இம்முறையால் சுமார் 99 சதம் வரை அசுத்தங்களை நீக்க முடியம். சுமாரான அசுத்தமுடைய நீர் எனில் ஒரு லிட்டர் நீருக்கு ஒரே ஒரு விதையும், மிகவும் அசுத்தமுள்ள நீருக்கு இரண்டு விதைகளும் தேவைப்படும். எண்ணைய் நீக்கப்பட்ட புண்ணாக்கினை நீரைத் தூய்மைப்படுத்துவதற்கு உபயோகிக்கலாம்.
சமீப காலத்தில் கழிவு நீரைத் தூய்மைப்படுத்துவதற்கு ஏற்ற மலிவான உள்ளூர் பொருட்கள் குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வரும் கழிவு நீர்த் தூய்மைப்படுத்தும் முறையில் தாதுப் பொருட்கள் சரியாக நீக்கப்படாமை, அதிக செலவு மற்றும் அதிக சக்தித் தேவை போன்ற இடர்பாடுகளால், முருங்கைப் பொடி போன்ற இயற்கைப் பொருட்களின் அவசியம் நன்கு உணரப்பட்டுள்ளது. தற்போது ஆராய்ச்சி குறிப்புகள் மூலம் நீர் நிலைகளில் உள்ள கடினமான தாதுப்பொருட்கள் மற்றும் ஆவியாகக்கூடிய அங்ககச் சேர்மங்களை நீக்குதிலின் முருங்கையின் விதைகளும் காய்களும் எவ்விதம் பயன்படுகின்றன எனத் தெரிய வருகிறது.
(அக்கார் மற்றும் குழு 2006, கர்மா மற்றும் குழு 2006).முருங்கை இலைப்பொடி
முருங்கை இலைப்பொடி, கேப்சூல்களாக விற்பனை செய்யப்படுகின்றது. இதற்கென தனித் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. இந்தியாவிலும், வெளிநாடுவாழ் இந்திய மக்கள் குடியிருப்பு பகுதிகளிலும் முருங்கையிலைப் பொடி கலந்த சாம்பார் பொடிகள் பிரபலமடைந்து வருகின்றன.
தமிழ்நாடு வேளாண் பல்கலை கழக வெளியீடான Moringa book - Tamil லிருந்து மறு உருவாக்கம் செய்யப்பட்டது.