Wednesday, 15 March 2017

இடப்பெயர்ச்சி முறை தேனீ வளர்ப்பு:தேனீ வளர்க்கலாம் பகுதி-VIII

இடப்பெயர்ச்சி முறை தேனீ வளர்ப்பு:
தேனீ வளர்ப்பை வணிக ரீதியில் வெற்றிகரமாக வளர்க்கத் தேனீக் கூட்டங்களைக் கூடுதலாக உணவு கிடைக்கும் இடங்களுக்கு எடுத்துச் சென்று வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தேனீக் கூட்டங்கள் உணவின்றி வலுக் குன்றுவதைத் தடுக்கவும். கூட்ட வளர்ச்சியைக் கூட்டிக் கூடுதல் தேன் மகசூல் பெறவும் இயலும். இத்தகைய இடப்பெயர்ச்சி முறைத் தேனீ வளர்ப்பு குமரி மாவட்டத்தில் அதிக அளவில் நடைபெறுகின்றது.

சில குறிப்புகள்:
  • தேனீப் பெட்டிகளை எடுத்துச் செல்ல ஏற்ற நேரம் இரவு நேரமே
  • தேனீப் பெட்டிகளின் நுழைவு வழி, வண்டி செல்லும் வழிக்கு இணையாக இருக்கும்படி டெம்போ வண்டியில் தேனீ பெட்டிகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி எடுத்துச் செல்ல வேண்டும்
  • ஒரே இடத்தில் அதிகமான எண்ணிக்கையில் கூட்டங்களை வைப்பது தேன் மகசூல் குறைவிற்கு வழி வகுக்கும்
  • வலுவான கூட்டங்களே கூடுதலாகத் தேன் சேகரிக்கும்
  • மதுர வரத்து துவங்கும் முன்னரே தேனீக் கூட்டங்களுக்கு கூட்டத்தின் வலுவிற்கு ஏற்றவாறு வாரம் ஒரு முறை சர்க்கரைப்பாகு கொடுத்துக் கூட்டத்தை வலுப்படுத்த வேண்டும்
  • சர்க்கரைப் பாகு கொடுப்பதை மதுர வரத்து தொடங்கியவுடன் நிறுத்திவிட வேண்டும்
  • உரிய நேரத்தில் கூட்டத்தின் வலுவிற்கு ஏற்றபடி இரண்டு முதல் மூன்று தேன் அறைகள் ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒவ்வொன்றாகக் கொடுக்க வேண்டும்
  • கூடுதல் வளர்ச்சியுள்ள கூட்டங்களைத் தேவைக்கு ஏற்பப் பிரித்து புதிய கூட்டங்களையும் புதிய ராணித் தேனீக்களையும் உருவாக்க வேண்டும்
  • ஆண்டிற்கு ஒரு முறை ராணியை மாற்றுவதன் மூலம் கூட்டம் பிரிதலைத் தடுக்கவும் கூடுதல் தேன் மகசூல் பெறவும் இயலும்
  • விரைவான வளர்ச்சி நோய் இல்லாமை மற்றும் கூடுதலாகத் தேன் மகசூல் தந்த கூட்டங்களில் உருவாகும் மூடப்பட்ட ராணி அறைகளை நீக்கி எடுத்துப் பிரித்த கூட்டத்திற்கும் ராணியை நீக்கி விட்டுக் கொடுக்க வேண்டும்
  • புழு அறையில் கறுத்த ஓர அடைகளை நீளுவாக்கில் துண்டுகளாக அறுத்துத் தேன் அறைச் சட்டத்தின் அடிக் கட்டையில் ரப்பர் வளையம் கொண்டு பொறுத்தித் தேன் அறையில் அடை எடுத்த இடத்தில் காலிச் சட்டத்தைக் கொடுக்க வேண்டும்
  • தேன் அறையில் ஒரு சட்டம் குறைவாக ஒவ்வொரு சட்டத்திற்கும் இடையே சிறிது கூடுதல் இடைவெளி விட்டு வைப்பதன் மூலம் பருமனான தேன் அடைகளைப் பெற இயலும். இதனால் கூடுதலாகத் தேன் மகசூல் கிடைக்கும். மேலும் தேன் எடுக்கும் பொழுது தேன் அறைகளின் மெழுகு மூடிகளை எளிதாகச் சீவி நீக்கலாம்
  • தேன் அறைகள் முழுவதும் மூடப்பட்ட பின்னர் தேன் அடைகளைத் தேன் எடுப்பதற்கு எடுத்தால் நல்ல தரமான தேன் பெற இயலும்
  • தேன் எடுத்த பின்னர் தேன் அறைகளை உடனே தேனீக் கூட்டத்திற்குக் கொடுத்துவிட வேண்டும்
  • மதுர வரத்து முடிந்தவுடன் ஒரு தேன் அறையை மட்டும் விட்டு விட்டு மீதித் தேன் அறைகளை நீக்கிவிட வேண்டும்
  • தேனீக் கூட்டங்களை மதுரவரத்து அதிகம் கிடைக்கும் பல இடங்களுக்கு அடுத்தடுத்து எடுத்துச் செல்லுவதன் மூலம் கூடுதல் தேன் மகசூல் பெற இயலும்
நன்றி : தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக இணையதளம்

No comments:

Post a Comment