கூட்டம் பிரிதல்:
சாதகமான சூழ்நிலை நிலவும் காலங்களில் தேனீக்கள் பல்கிப் பெருகுகின்றன. இவ்வாறு பெருக்கம் அடைந்த கூட்டங்களில் இனவிருத்தியின் பொருட்டுக் கூட்டம் பிரிதல் அல்லது குடி பெயர்தல் நிகழ்கின்றது.
சாதகமான சூழ்நிலை நிலவும் காலங்களில் தேனீக்கள் பல்கிப் பெருகுகின்றன. இவ்வாறு பெருக்கம் அடைந்த கூட்டங்களில் இனவிருத்தியின் பொருட்டுக் கூட்டம் பிரிதல் அல்லது குடி பெயர்தல் நிகழ்கின்றது.
கூட்டம் பிரியும் தாபம் தேனீக்களிடம் காணப்படும் ஓர்
இயற்கையான உணர்வு ஆகும். இந்தியத் தேனீ இனங்களில் இவ்வுணர்வு கூடுதலாகக்
காணப்படுகின்றது. மதுர வரத்து கூடும் காலங்களில் இவ்வுணர்வு கூடுகின்றது.
கூட்டம் பிரியும் உணர்வு கூட்டத்திற்குக் கூட்டம் மாறுபடும். கூட்டம்
பிரியும் காலம் மதுர வரத்திற்கு ஏற்ப இடத்திற்கு இடம் வேறுபடும். இந்த
உணர்வு தேனீக்களுக்குப் பல வழிகளில் உதவுகின்றது. கூட்டம் பிரிதலால்
தேனீக்கள் உணவு அதிகமாகக் கிடைக்கும் இடங்களை நாடிச் செல்லுகின்றன. இதனால்
தேனீ இனம் உணவின்றி அழிவது தவிர்க்கப்படுகின்றது.
நடைபெறக் காரணங்கள்:
- ஒரு சில கூட்டங்களில் பாரம்பரிய ரீதியாகக் கூடுதலாகக் காணப்படும் பிரிந்து செல்லும் உணர்வு
- அதிக மதுர வரத்தால் விரைந்து நடைபெறும் கூட்ட வளர்ச்சி
- வயதான ராணித் தேனீயால் போதிய அளவு ஈர்ப்புச் சுரப்பைச் சுரக்க இயலாத சூழ்நிலை
- வீட்டுத் தேனீக்களின் எண்ணிக்கை வயல் வெளித் தேனீக்களின் எண்ணிக்கையை விடக் கூடுதலாக இருத்தல்
- புழு வளர்ப்பு மற்றும் தேன் சேமிப்பிற்குப் போமிய இட வசதியின்மை
- கூட்டின் வெப்ப நிலை கூடுதல்
- கூட்டில் போதிய காற்றோட்ட வசதியின்மையால் ஏற்படும் புழுக்கம்
- தேனீப் பெருக்கத்தாலும் தேன் சேமிப்பாலும் தோன்றும் இட நெருக்கடி
- சேமித்து வைத்துள்ள தேனை அவ்வப்பொழுது எடுக்காது இருத்தல்
ஏன் தடுக்க வேண்டும்?
தேனீ வளர்ப்போர் தேனீக் கூட்டம் பிரித்து செல்வதை அவசியம் தவிர்த்தல் வேண்டும். ஏனெனில் அடிக்கடி கூட்டம் பிரிய நேரிட்டால்
தேனீ வளர்ப்போர் தேனீக் கூட்டம் பிரித்து செல்வதை அவசியம் தவிர்த்தல் வேண்டும். ஏனெனில் அடிக்கடி கூட்டம் பிரிய நேரிட்டால்
- கூட்டத்தின் வலு குறையும்
- தேன் உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்படும்
- அடைப் பரப்பில் போதிய பணித் தேனீக்கள் இல்லாத நிலையில் வளரும் புழுக்கள் போதிய கவனிப்பும் சூடும் இன்றி இறக்க நேரிடும்
- புழு வளர்ப்பு தற்காலிகமாகத் தடைப்படும்
- பணித் தேனீக்களின் உணவு திரட்டும் ஆர்வம் குறையும்
- சில நேரங்களில் ராணித் தேனீ இழப்பு நேரிட்டு, பணித் தேனீக்கள் முட்டையிடத் தொடங்கும். இதனை உரிய நேரத்தில் தடுக்காவிட்டால் கூட்டமே படிப்படியாக அழிய நேரிடும்
அறிகுறிகள்:
- பெட்டியில் தேனீக்கள் பொங்கி வழியும்
- ஆண் தேனீ அறைகள் அதிக எண்ணிக்கையில் அடையில் கட்டப்படும்
- புதிய ராணித் தேனீ வளர்ப்பு அறைகள் அடையின் கீழ்ப்புற விளிம்புகளில் அதிக எண்ணிக்கையில் கட்டப்படும்
நடைபெறும் விதம்:
- மதுர வரத்து கூடும் பொழுது கூட்டம் பிரியும் உணர்வு தூண்டப்படுகின்றது. இத்தருணத்தில் ராணித் தேனீயின் தினசரி முட்டையிடும் திறன் கூடுகின்றது. புழு வளர்ப்பும் துரிதமாக நடைபெறுகின்றது. இதனால் வீட்டுத் தேனீக்களின் எண்ணிக்கை கூடுகின்றது. மேலும் பெட்டியில் இடநெருக்கடி ஏற்படுகின்றது.
- தாதித் தேனீக்களில் அரசக் கூழ் அதிக அளவு சுரக்கின்றது. இவ்வாறு சுரக்கும் அரசுக் கூழினை வெளியேற்றிப் பயன்படுத்துவதற்காகப் புதிய ராணித் தேனீ அறைகள் கட்டப்படுகின்றன. பணித் தேனீக்கள் இரண்டு நாள் இடைவெளியில் பல ராணித் தேனீ வளர்ப்பு அறைகளைப் புழு அடையின் கீழ்ப்புற விளிம்புகளில் கட்டுகின்றன.
- ராணித் தேனீ அறைகளைக் கட்டும் முன்னர் ஆண் தேனீ அறைகள் அடையின் பல பகுதிகளிலும் தேனீக்களால் கட்டப்படுகின்றன. புதிதாக வரவிருக்கும் ராணித் தேனியுடன் புணர்ந்து கருவுறச் செய்வதற்காக ஆண் தேனீக்களை இவ்வாறு திட்டமிட்டு உருவாக்குகின்றன
- ராணித் தேனீக்கு தரப்படும் உணவின் அளவு படிப்படியாகக் குறைக்கப்படுகின்றது. இதனால் ராணித் தேனீயின் வயிறு மெலிந்து பறக்கும் சக்தியைப் பெறுகின்றது
- ராணித் தேனீ அறைகள் மெழுகு மூடியினால் மூடப்பட்டவுடன் பழைய ராணித் தேனீ, பாதிக்கும் மேற்பட்ட பணித் தேனீக்களுடன் கூட்டைவிட்டு ஒரு கூட்டமாகப் பறந்து செல்கின்றது
- கூட்டை விட்டு பிரிந்து செல்லும் முதல் கூட்டம் முதன்மைக் கூட்டம் எனப்படும். பொதுவாகக் காலை நேரத்தில் பிரகாசமான சூரிய ஒளி இருக்கும் பொழுது கூட்டம் பிரிதல் நடைபெறுகின்றது. கூட்டம் பிரிவதற்கு சற்று முன் சில பணித் தேனீக்கள் நுழைவு வழியின் முன் பரபரப்புடன் பறந்து கொண்டு இருக்கும். இவை ஒரு வித ரீங்கார ஒலியை ஏற்படுத்தும் நேரம் ஆக ஆக அதிக எண்ணிக்கையில் பணித் தேனீக்கள் கூட்டை விட்டு வெளியேறும். இவ்வாறு வெளியேறும் பணித் தேனீக்கள் தேனைக் குடித்து விட்டு வரும். பணித் தேனீக்களுடன் சேர்த்து ராணித் தேனீயும் கூட்டை விட்டு வெளியேறும். பின்னர் பிரிந்த கூட்டம் முதலில் அருகில் இருக்கும். ஏதாவது ஒரு மரக் கிளையில் ஓரிரு நாட்கள் புதிய கூட்டை அமைப்பதற்கான இடம் செரிவு செய்யப்படும் வரை ஒரு திரளாகத் தங்கும்.
- முதன்மைக் கூட்டம் வெளியேறிய ஒரு வாரத்திற்குள் வெளிவரும் புதிய ராணித் தேனீ பிற ராணித் தேனீ அறைகளைக் கடித்து சேதப்படுத்தும் அல்லது எஞ்சியுள்ள பணித் தேனீக்களின் ஒரு பகுதியுடன் வெளியேறும். இவ்வாறு கூட்டத்தின் வலுவைப்பொறுத்து ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பின் கூட்டங்கள் வெளியேறும்
தடுக்கும் முறைகள்:
- கூட்டம் பிரிதலை முற்றிலுமாகத் தடுக்க இயலாது. ஆனால் தேனீ வளர்ப்போர் தேனீக்களின் இத்தாபத்தைத் தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டு கூட்டங்களைப் பிரியும் முன்னரே பிரித்துப் புதிய கூட்டங்களை உருவாக்கலாம்
- ராணித் தேனீ முட்டையிடுவதற்குத் தேவையான இட வசதி செய்து கொடுக்க வேண்டும். இருப்பு இருந்தால் புழு அறையில் காலி அடைகள் தரலாம். இல்லையென்றால் அடை அஸ்திவாரத் தாள் பொருத்தப்பட்ட காலிச் சட்டங்களைப் புழு அறையில் தரலாம். இதன் மூலம் பெட்டியினுள் இடநெருக்கடி காரணமாக ஏற்படும் புழுக்கத்தைக் குறைக்க முடியும்
- மதுர வரத்து துவங்கும் பொழுது கூட்டங்களுக்கு உரிய நேரத்தில் தேன் அறைகளைக் கொடுக்க வேண்டும். தேன் சேமிப்பிற்கான இடத் தேவை பூர்த்தி செய்யப்படும் பொழுதும் கூட்டம் பிரியும் உணர்வு குறையும். இதனால் கூட்டம் பிரிதலைத் தாமதப்படுத்தலாம்
- தேனீக் கூட்டங்கள் ராணித் தேனீ வளர்ப்பு அறைகள் கட்டுப்பட்டு இருக்கும் சமயம் கூடுதலாகக் கொட்டும். அத்தகைய தருணங்களில் அடிக்கடி புழு அடைகளைக் கவனமாகச் சோதனை செய்து, புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராணித் தேனீ வளர்ப்பு அறைகளை ஒன்று விடாது அழித்துவிட வேண்டும். அடையின் கீழ் விளிம்பில் கட்டப்பட்டு இருக்கும் ராணித் தேனீ வளர்ப்பு அறைகளைத் தொடர்ந்து அழித்தால், தேனீக்கள் ராணித் தேனீ வளர்ப்பு அறைகளை அடையின் மையப் பகுதியில் கட்டும் இத்தகைய அறைகளைக் கண்டு பிடித்து அழிப்பது சற்று கடினம். ஓரிரு அறைகள் தப்பினாலும் கூட்டம் உறுதியாகப் பிரிந்து விடும். எனவே இம்முறை ஓரளவிற்கு மட்டுமே பயன் கொடுக்கும்
- ராணித் தேனீயின் இறக்கைகளை வெட்டுவதன் மூலமும், வாயில் தகட்டை நுழைவு வழி முன் வைத்தும் ராணித் தேனீ கூட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுக்கலாம். இதனால் ராணித் தேனீ கூட்டைவிட்டுப் பணித் தேனீக்களுடன் பறந்து செல்ல இயலாது. எனவே ஒருவேளை ராணி இல்லாது பணித் தேனீக்கள் பிரிந்து சென்றாலும் அவை அனைத்தும் மீண்டும் கூட்டிற்கே திரும்பி வந்துவிடும்
- ஒவ்வொரு ஆண்டும் ராணித் தேனீயை மாற்ற வேண்டும். இதனால் கூட்டம் பிரதலைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தலாம்
- பிரிந்து சென்றாலும் முதன்மை கூட்டத்தைத் தனியே பிடித்து வைக்கலாம்
- பிரிந்து செல்லும் பின் கூட்டங்களைக் காலம் தாழ்த்தாது பிடித்துத் தாய்க் கூட்டங்களுடன் இணைந்து வைப்பதே நல்லது
Image courtesy : wikipedia |