Showing posts with label பஞ்சகவ்யா (Panchakavya). Show all posts
Showing posts with label பஞ்சகவ்யா (Panchakavya). Show all posts

Monday, 15 February 2016

புரதச்சத்து மிக்க உலர்தீவனம் நிலக்கடலை செடி (தினமலர் நாளிதழ் 20 Dec 15)

கோவை: உலர் தீவனங்களில், புரதச்சத்துக்கள் நிரம்பிய, நிலக்கடலை செடியை, கால்நடைகளுக்கு கொடுப்பதால், சத்துக்கள் கிடைப்பதோடு, தீவனங்கள் வாங்க செலவாகும் பெருந்தொகையை குறைக்கலாம் என, கால்நடைத்துறை பரிந்துரைத்துள்ளது.


Image courtesy : wikipedia
கால்நடைகள், உலர் தீவனங்களை விரும்பி சாப்பிடாது. இதில், குறைந்த புரதச்சத்துகள் இருப்பதோடு, எளிதில் செரிப்பதால், பால் உற்பத்தி குறைவதோடு, உடல் வளர்ச்சி தாமதப்படும். இதற்காக, அதிக விலை கொடுத்து, அடர் தீவனங்கள் வாங்க வேண்டியிருக்கும். பாலின் விலை அதிகமாவதற்கு, தீவனச் செலவும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், உலர் தீவனங்களின் சத்துக்களை தரம் காணும் சோதனை நடத்தப்பட்டது. இதில், மற்ற வகை தீவனங்களை காட்டிலும், கடலைச்செடியில், புரதம் மற்றும் கொழுப்பு சத்துகள் நிரம்பி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கால்நடை பல்கலை பேராசிரியர் ஒருவர் கூறுகையில், 'கடலையை பிரித்தெடுத்த பின் சேகரமாகும் செடியை, காலை, மாலை வேளைகளில் உலர்த்தி, ஈரமில்லா இடத்தில் வைப்பது நல்லது. ஏனெனில், ஈரப்பதம் இருப்பின், எளிதில் காளான் நச்சு தொற்று, செரிமான பிரச்னையை ஏற்படுத்தும். இதை, நிலங்களில் பயிரிட்ட விவசாயிகள், தங்களது கால்நடை களுக்கு பிரத்யேகமாக உலர் தீவனங்களை, விலைக்கு வாங்க வேண்டிய அவசியமில்லை. கொட்டில் முறையில் வளர்க்கும் ஆடுகளுக்கு, எவ்வித அடர்தீவனமும் கொடுக்காமல், நிலக்கடலை செடியை கொடுத்தே, ஆரோக்கியமாக வளர்க்க முடியும்,'' என்றார்.

Saturday, 13 February 2016

கறவை மாடுகளுக்கு மூலிகை மருத்துவம் (தினமணி நாளிதழ்)

கறவை மாடுகளுக்கு மூலிகை மருத்துவம்:

மூலிகை மருத்துவத்தின் மூலம் கறவை மாடுகளுக்கு ஏற்படும் மடிவீக்க நோய், வயிறு உப்புசம், கழிச்சல் நோய்களை சரிப்படுத்தலாம் என தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையத் தலைவரும் மரபுசார் மூலிகை வழி கால்நடை மருத்துவப் பயிற்சி, ஆய்வகத் தலைவருமான பேராசிரியர் ந.புண்ணியகோடி தெரிவித்தார்.   
மடிவீக்க நோய்: கறவை மாடுகளில் மடிவீக்க நோய் பெரும்பாலும் நுண்கிருமித் தொற்று மூலமாகவே ஏற்படுகிறது. மாட்டின் மடியானது வீக்கமாகவும் கடினத் தன்மையுடனும் வெப்பம் அதிகரித்தும் காணப்படும். பாதிக்கப்பட்ட கால்நடைகளில் பாலானது திரிந்து வெள்ளையாகவோ மஞ்சள் அல்லது ரத்தம் கலந்தோ காணப்படும். மடியினை நன்கு கழுவி சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு மாட்டுக்குத் தேவைப்படும் மூலிகை, மருத்துவப் பொருள்களாக 250 கிராம சோற்றுக் கற்றாழை, 50 கிராம் மஞ்சள் பொடி, 15 கிராம் அதாவது ஒரு கொட்டைப் பாக்கு அளவு சுண்ணாம்பு ஆகியவை தேவைப்படும்.
 மேற்கண்ட பொருள்கள் மூன்றையும் ஆட்டுக்கல் உரலில் இட்டு நன்றாக கெட்டியாக அரைத்து பின் ஒரு கை அளவு எடுத்து நீர் விட்டுக் கரைத்து, நீர்த்த நிலையில் கால்நடையின் மடிப்பகுதி முழுவதும் நன்றாகத் தடவ வேண்டும். நாள் ஒன்றுக்கு 10 முறை மடிவீக்கம் குறையும் வரை குறைந்தது 5 நாள்களுக்குப் பூச வேண்டும். தினமும் புதிதாக மருந்து தயாரித்துக் கொள்ள வேண்டும். 
 வயிறு உப்புசம்: கால்நடைகளில் உப்புசம் அல்லது நுரையோடு கூடிய வயிறு உப்புசம் தீவன மாறுபாடுகளால் ஏற்படக்கூடியது. இது மிக அதிகமான எளிதில் செரிக்கக்கூடிய தானிய வகை உணவு, ஈரமான பசுந்தீவனங்களை உண்பதால் ஏற்படுகிறது.  இதைத் தவிர்க்க ஒரு மாட்டுக்கு வெற்றிலை 10 எண்ணிக்கை, பூண்டு 5 பல், பிரண்டை 10 எண்ணிக்கை, மிளகு 10 எண்ணிக்கை, வெங்காயம் 5 பல், சின்னசீரகம் 10 கிராம், இஞ்சி 100 கிராம், மஞ்சள் தூள் 10 கிராம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு சிகிச்சை வாய்வழியாக இருக்க வேண்டும். சின்னசீரகம், மிளகை இடித்து, பின்பு மற்ற பொருள்களோடு கலந்து அரைத்து அக்கலவையை 100 கிராம் பனை வெல்லத்துடன் கலந்தபின் சிறுசிறு உருண்டைகளாக பிரித்து, கல் உப்பு தொட்டு மாட்டினுடைய நாக்கின் மேல் அழுத்தமாகத் தடவி ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள்ளே செலுத்த வேண்டும்.
 

 கழிச்சல்: நீர்த்த துர்நாற்றமுடைய கழிச்சல் மாடுகளுக்கு காணப்படும். வால், பின்னங்கால்களில் சாணக்கறை படிந்து காணப்படும். உடலிலுள்ள நீர்ச் சத்து, தாது உப்புகள் அதிகமாக வெளியேறி கன்றுகள் மாடுகள் சோர்ந்து காணப்படும். இதை சரிப்படுத்த ஒரு மாடுக்கு அல்லது மூன்று கன்றுகளுக்கு சின்ன சீரகம் 10 கிராம், கசகசா 10 கிராம், வெந்தயம் 10 கிராம், மிளகு 5 எண்ணிக்கை, மஞ்சள் 5 கிராம், பெருங்காயம் 5 கிராம் ஆகியவற்றை நன்கு கருகும் வரை வறுத்து அடுத்து நீர்தெளித்து இடித்துக்கொள்ள வேண்டும். மேலும் வெங்காயம் 2 பல், பூண்டு 2 பல், கறிவேப்பிலை 10 இலை, பனைவெல்லம் 100 கிராம் ஆகியவற்றை தனியாக நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.  இந்த இரு கலவைகளையும் கலந்து சிறுசிறு உருண்டைகளாக்கி 100 கிராம் கல் உப்பில் தோய்ந்தெடுத்து மாட்டின் நாவின் சொரசொரப்பான மேல்பகுதியில் தேய்த்தவண்ணம் ஒரே வேளையில் உள்ளே செலுத்த வேண்டும்.
 இவ்வாறு சிகிச்சை முறைகளை தெரிவித்துள்ள பேராசிரியர் ந.புண்ணியகோடி அவ்வப்போது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் சிறப்புக் கால்நடை முகாம்களில் முதல் உதவி மூலிகை மருத்துவம் குறித்து தொடர்ந்து கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு விளக்கி வருகிறார்.

Tuesday, 2 February 2016

மாட்டுச் சிறுநீரை சேகரிக்கும், சேமிக்கும் முறை

மாட்டுச் சிறுநீரை எவ்வளவு நாட்களுக்கு சேமித்து வைக்கலாம். எளிதாக சேகரிக்கும் முறையைச் சொல்லுங்கள்?

கர்நாடக மாநிலம் மாண்டியாவைச் சேர்ந்த ஜீரோ பட்ஜெட் விவசாய பயிற்சியாளர் ராமண்ணா பதில் சொல்கிறார்.

‘‘இந்தத் தகவல், உங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தலாம். ஆனால், அதுதான் உண்மை. ‘பசுமாட்டுச் சிறுநீரை 100 ஆண்டுகள்கூட சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம். எந்த அளவுக்கு காலதாமதமாகப் பயன்படுத்துகிறோமோ… அந்த அளவுக்கு அதன் வீரியம் கூடும். ஆனால், பசுஞ்சாணத்தை எவ்வளவு
விரைவாக முடியுமோ… அவ்வளவு விரைவாகப் பயன்படுத்திவிடவும். அதிகபட்சம் ஏழு நாட்களுக்குள் பயன்படுத்திவிடுங்கள். இதற்கு மேல் சென்றால், சாணத்தில் உள்ள நுண்ணுயிரிகளின் வளர்ச்சி குறையும். பின்பு நாம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது’ என்று ஜீரோ பட்ஜெட் பிதாமகர் சுபாஷ் பாலேக்கர் அடிக்கடி சொல்வார். 

பால் கறப்பது போல, பசுவின் சிறுநீரைச் சேகரிப்பதும் ஒருவிதமான நுட்பம் என்றுதான் சொல்லவேண்டும். ஜீவாமிர்தம், பூச்சிவிரட்டி தயாரிக்க மாட்டுச் சிறுநீர் தேவை என்றால், கட்டுத்தரையை சிறிது சாய்வாக அமைக்க வேண்டும். மாட்டின் சிறுநீர் ஓடிச் சென்று சேகரமாவதற்கு வசதியாக சிறிய வாய்க்கால் அமைத்து, சிறுநீரைச் சேகரிக்கலாம். மருந்து தயாரிக்க பசுவின் சிறுநீர் தேவை என்றால், சில கட்டுப்பாடுகள் உண்டு. அதாவது, கன்று போட்ட பசுவின் சிறுநீரில்தான் மருத்துவக் குணம் உண்டு. சினைப்பிடித்த எட்டு மாதத்துக்குப் பிறகு தொடங்கி, கன்று ஈன்ற முதல் மாதம் வரையிலும், கிடைக்கும் சிறுநீரைப் பயன்படுத்தக் கூடாது என்பது அடிப்படையான விஷயம். சிறுநீரைச் சேகரிக்கும்போது, முதலில் வெளிவரும் சிறுநீரையும் கடைசியில் வரும் சிறுநீரையும் விட்டு விட்டு நடுவில் வரும் சிறுநீரை மட்டுமே எவர்சில்வர் பாத்திரத்தில் சேகரிக்க வேண்டும். 

வழக்கமாக மாடுகள் அதிகாலை 4 மணி முதல் 5.30 மணிக்குள் சிறுநீர் கழிக்கும். பால் கறக்கும் மாடு என்றால், மடியில் நீர் அடித்தவுடன் சிறுநீர்விடும். கலப்பின மாடுகளைவிட, நாட்டு மாடுகள்தான் லிட்டர் கணக்கில் கூடுதலாக சிறுநீர் கொடுத்து வருகின்றன.

Courtesy : Pasumai Vikatan

Saturday, 30 January 2016

பஞ்சகவ்யா தயாரிக்க நாட்டு பசுமாடு தேவையா?

பஞ்சகவ்யா தயாரிக்க நாட்டு பசுமாடு தேவையா?
Courtesy : Dinamalar

இயற்கை விவசாய உத்தியான பஞ்சகவ்யா தயாரிப்பது மிக எளிது. அதற்கு பசுமாடு தான் தேவை. அதுவும் நாட்டு மாடு தான் நல்லது என்ற பிரசாரம் செய்து சில நாட்டு மாடு வியாபாரிகள் நல்ல காசு பார்த்து வருவது அறியாமை. ஒவ்வொரு விலங்கும் கழிவினை வெளியிடுவது இயற்கை. இதில் நாட்டு மாடு வேற மாதிரி கோமியம் தரும். வேற மாடு வேஸ்ட் என்று கூட பிரச்னை செய்வது நல்லதல்ல. மாடுகள் உண்ணும் உணவில் எந்த மாறுபாடும் நாம் காட்டாத போது கழிவு எப்படி வேறுபடும். ஒவ்வொரு விவசாயி வீட்டிலும் பசுமாடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. கன்றுக்குட்டிகளாவது வளர்த்து வரலாம். அல்லது ஆடு வளர்க்கலாம். அருகில் உள்ள விவசாயிகளிடம் விலை கொடுத்து கூட பசுமாட்டு சிறுநீர் 3 லிட்டர் வாங்குவது பெரிய கஷ்டமான வேலையே இல்லை.
வீட்டை விட்டு வெகு தொலைவில் உள்ள கடைக்குப்போய் மருந்து அதிக விலை கொடுத்து வாங்க மனம் உள்ளவருக்கு அருகில் கிடைக்கும் கழிவினை வாங்குவது ஒன்றும் பெரியதாக தென்படாது. மிகவும் எளிய பொருள் தான் பஞ்சகவ்யா. அது தயாரித்திட
பச்சை பசுஞ்சாணம் 5 கிலோ,
பசுமாட்டு சிறுநீர் 3 லிட்டர்,
பசும்பால் 2 லிட்டர்,
தயிர் 1 லிட்டர்,
நெய் - 1லிட்டர்,
நாட்டு சர்க்கரை 1 கிலோ,
இளநீர் 3 லிட்டர்,
வாழைப்பழங்கள் 12 எண் தேவை.
பச்சை பசு சாணி 5 கிலோவுடன் பசுமாட்டு நெய் 1 லிட்டரை கலந்து பிசைந்து ஒரு வாயகன்ற மண்பானையில் 4 அல்லது 5 நாட்கள் வைக்கவும். இதை தினம் இருமுறை அதாவது காலை மற்றும் மாலை வேளைகளில் நன்கு கலக்கவும்.
ஐந்தாவது நாள் மற்ற பொருட்களுடன் இவைகளை நன்கு கலக்கி விடவும். கம்பி வலையில் வாயை மூடி நிழலில் வைக்கவும். தினம் இருமுறையோ அல்லது பல முறையோ நன்கு கலக்கி விடவும். இதனால் அதிக காற்றோட்டம் ஏற்பட்டு அபரிதமாக நுண்ணுயிர்கள் உற்பத்தி ஆகும் வாய்ப்பும் 15 நாளில் பஞ்சகவ்யா ரெடியாகும் வாய்ப்பும் உள்ளது. இதை ஆறு மாதம் வரை தினமும் கலக்கி விட்டு கெடாமல் பயன்படுத்தலாம். தண்ணீர் குறைத்து கெட்டியான மீண்டும் போதிய அளவு தண்ணீர் சேர்த்து கலக்கி வர வேண்டும்.
10 லிட்டர் நீரில் 300 மில்லி பஞ்சகவ்யா கலந்து கொண்டு இலைவழி உரம் அல்லது பயிர்க்கு, நேரடியாக ஊற்றுதல் மூலம் பலன்பெறலாம். கைத்தெளிப்பானில் தெளிக்கும்போது வடிகட்டி பயன்படுத்தவும். விசைத் தெளிப்பானின் அடைப்பானையுடன் குழாயின் நுனிப்பகுதியையும் பெரிதாகச் செய்து கொண்டால் அடைப்பின்றி தெளிப்பு சீராக வரும் பஞ்சகவ்யா 75 சதம் உரமாகவும் 25 சதம் பூச்சி மற்றும் நோய்கொல்லி மருந்தாகவும் வேலை செய்து நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. மேலும் விபரம் பெற 98420 07125 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
- டாக்டர் பா.இளங்கோவன்,
தோட்டக்கலை உதவி இயக்குநர், உடுமலை, திருப்பூர்.
நன்றி : தினமலர்