Thursday 7 September 2017

உரமாகும் பார்த்தீனியம்

பார்த்தீனியம்

கிராமம், நகரம் என எங்கு கண்டாலும் விரவி, பரவியுள்ளது பார்த்தீனிய செடி. வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவை தனது தாயகமாக கொண்ட இந்த விஷ களை செடி, ஈரப்பதம் கொண்ட எந்த மண்ணிலும் வேகமாக வளர்ந்து, தன் இனத்தை வளர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டது.
Image courtesy : Wikipedia



மற்ற தாவரங்களைப் போல் குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமல்லாமல், ஆண்டின் எல்லா மாதமும் செழித்து வளரும் தன்மை கொண்டது பார்த்தீனியம் செடி. இதன் இலைகள் வெளிர் பச்சை நிறத்துடன் இருக்கும்.

இதன் விதைகள் எந்த மண்ணிலும் எந்தச் சூழலிலும் முளைக்கக் கூடிய வகையில் அதிக முளைப்புத் திறன் உடையதாக இருப்பதால் இந்த விஷ களைச் செடியை அழித்து ஒழிப்பது மிகவும் கடினமாக உள்ளது.

மனிதர்களுக்கு ஆஸ்துமாவை உருவாக்கும் இந்த களைச் செடிகளை பிடுங்கி அழிப்பதை விட அதனை அப்படியே இயற்கை உரமாக மாற்றலாம்

“முதலில் 6 அடிக்கு 4 அடி அளவுள்ள (தேவைக்கேற்ப நீள அகலங்களை மாற்றிக் கொள்ளலாம்.) 4 அடி ஆழத்திற்கு குழி தோண்டி, அதில் வேருடன் பிடுங்கிய பார்த்தீனியச் செடிகளை போட வேண்டும். அத்துடன் கொழுஞ்சி, எருக்கன் இலை, வேப்பிலை மற்றும் கிடைக்கும் இலை தழைகளையும் கலந்து போட்டு இரண்டடி உயரத்திற்கு நிரப்பி, நன்கு மிதித்து அதன் மேல் சாணி மற்றும் கோமியக் கரைசல் தெளிக்க வேண்டும்.

அதன் மேல் மூன்று அங்குல அளவிற்கு மண் போட்டு, மீண்டும் இதே மாதிரி மூன்று நான்கு அடுக்குகள் போட்டு, மேலே மண் போட்டு மீண்டும் மூடி வைத்தால் ஓரிரு மாதங்களில் அற்புதமான இயற்கை உரம் தயாராகிவிடுகிறது.

இதில் மற்ற உரங்களில் கிடைப்பதை விட நைட்ரஜன் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாஷ் சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கிறது. பயிர்களுக்கு வேண்டிய நுண்ணூட்டச் சத்துக்களும் அதிக அளவில் இருப்பதால் பயிர்களின் மகசூல் அதிகரிக்கும்.

தென்னை, மா, எலுமிச்சை மரங்களுக்கு இடையில் 2அடிக்கு 2 அடி 2 அடி குழி வெட்டி அதில் பார்த்தீனியம் மற்றும் சாணிக் கரைசல் உள்ளிட்டவற்றை போட்டு மூடி வைத்து விட்டால் ஒரு மாதத்தில் அவை மக்கி விடும். மரத்தின் வேர்கள் அந்த உயிர்ச் சத்தை கிரகத்துக் கொண்டு நன்கு செழித்து வளர்வதுடன் அதன் காய்ப்புத் திறன் அதிகரிக்கும்”

பார்த்தீனியம் நச்சுக் களைச் செடி நன்கு உயரமாக வளர்ந்து ஆழமாக பரவும் வேர்களைக் கொண்டது. இதன் இலைகள் கேரட் இலைகளைப்போல இருக்கும். செடிகளின் நுனிப்பகுதியில் ஏராளமான வெள்ளை நிறப் பூக்கள் கொத்துக்கொத்தாக இருக்கும். ஒவ்வொரு பூவிலும் ஏராளமான விதைகள் இருக்கும். விதைகள் காற்று, நீர் மூலம் பரவி முளைவிடும். இவை மழைக்காலத்தில் நன்கு வளர்ந்துவிடும்.

பொதுவாக சாலையோரங்கள், புறம்போக்கு நிலங்கள், தண்டவாளப் பகுதி, ஆற்றங்கரையோரம், கழிவுநீர் வாருகால், விளைநிலங்களில் அதிகம் காணப்படும்.

சுகாதாரக் கேடு

பார்த்தீனியத்தில் உள்ள "செஸ்கிடெர்பின் லேக்டோன்' என்ற வேதிப் பொருளால் மனிதர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு, அரிப்பு, தோல் வியாதி, கண் வீக்கம், ஆஸ்துமா போன்ற உபாதைகள் ஏற்படும்.

விளை நிலங்களில் பாதிப்பு

பார்த்தீனியம் செடிகளின் பல்வேறு பகுதிகளில் அதிகளவில் உள்ள "பினாலிக் அமிலம்' மற்ற செடிகளின் வளர்ச்சியைத் தடுத்து, அழிக்கும் வல்லமை கொண்டது. ஒரு செடியிலிருந்து 624 மில்லியன் மகரந்தத் தூள்கள் வெளிவந்து, காற்றில் பரவி இவை வளர்ச்சியடைவதுடன், மற்ற செடிகளின் பூக்களுக்குள் பரவி அவற்றின் காய்பிடிக்கும் தன்மையைப் பாதிக்கும். விளைநிலங்களில் இச் செடியின் வளர்ச்சியால் 50 சதவீதம்வரை மகசூல் இழப்பு நேரிடும்.

செடிகளை பிடுங்கி அழித்தல்

பார்த்தீனியத்தை இளந்தளிர் பருவத்திலேயே அகற்றி எரித்துவிட வேண்டும். இச்செடிகளைக் கையால் பிடுங்கி அழிக்கும்போது கண்டிப்பாக கையுறை, முக உறை அணிய வேண்டும். இதன் மூலம் ஒவ்வாமையால் ஏற்படும் தீங்குகளைத் தவிர்க்கலாம்.
சமுதாய நோக்குடன் செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பள்ளி மாணவர்கள் உதவியுடன் இச் செடிகளைப் பிடுங்கி எரிக்கலாம். மேலும், பூக்கும் பருவத்துக்கு முன்பும், மழைக்காலங்களிலும் அகற்றினால் இச்செடிகளின் பரவும் தன்மையைக் குறைக்கலாம்.
செவ்வந்தியை பயிர் சுழற்சி முறையில் பயிரிட்டு பார்த்தீனிய களையைக் கட்டுப்படுத்தலாம். அடர் அவரை, துத்திச் செடிகளை வளரச் செய்வதன் மூலமும், பார்த்தீனியம் அல்லாத காய்ந்த பிற செடிகளை நிலப்பரப்பில் பரப்பி வைப்பதன் மூலமும் பார்த்தீனியத்தைக் கட்டுப்படுத்தலாம்.

உயிரியல் முறை

சைகோகிராமா பைகலரோடா என்ற மெக்சிகன் வண்டும், அவற்றின் புழுக்களும் பார்த்தீனியம் செடியின் இலைகள், பூக்களைத் தின்னும். எனவே, இந்த வண்டுகளை மழைக்காலங்களில் குறிப்பாக, ஜூன் முதல் பிப்ரவரி வரை பார்த்தீனியம் செடிகளில் இட வேண்டும்.

மண்புழு உரம் தயாரித்தல்

பூக்கும் முன்னர் பார்த்தீனியம் களைகளைச் சேகரித்து, அவற்றை 5-10 செமீ அளவில் நீளவாட்டில் நறுக்கி 10 செமீ சுற்றளவில் 10 செமீ உயரத்துக்கு கீழிருந்து 5 அடுக்குகளாக அடுக்கி, அதன் மேல் 10 சதம் மாட்டுச் சாணத்தைக் கரைத்துத் தெளிக்க வேண்டும். இவற்றை 10 நாள்கள் மக்குவதற்கு வைக்க வேண்டும். 45 முதல் 60 நாள்களில் மண்புழு உரம் கிடைக்கும்.

கம்போஸ்ட் தயாரித்தல்

இச்செடியை பூக்கும் முன்னர் ஒரு டன் அளவுக்கு சேகரித்து 7 செமீ முதல் 10 செமீ வரை சிறு துண்டுகளாக நறுக்கி, வடிகால் வசதி, நிழல் உள்ள உயரமான இடத்தில் ஒரு மீட்டர் உயரத்துக்கு 10 செமீ அடர்த்தியாக அடுக்குகளாக பரப்ப வேண்டும். இதன் மீது 200 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சாண மருந்து, 5 கிலோ யூரியாவைக் கரைத்து பரவலாக தெளிக்க வேண்டும். ஈரப்பதம் 50 முதல் 60 சதம்வரை இருக்குமாறு பராமரிக்க வேண்டும். இது, 40 முதல் 45 நாள்களில் கம்போஸ்டாக கிடைக்கும். இது, பயிர்களுக்கு சிறந்த வளர்ச்சி ஊக்கி.